Pages

Search This Blog

Sunday, November 21, 2010

ஞானசூரியன்

ஞானசூரியன்
(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
முன்னுரை
இந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.

இதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை திருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.
இந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளி யிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.
இவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.
சிறப்புரைகள்
திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது

ஞானசூரியன் கூறும் பொருள் களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.
அவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப் பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.
பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.
வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.
சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை 7.10.1927


எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட
திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.
தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.

சென்னை, கா.சுப்பிரமணியபிள்ளை
24.10.1927.
மறைமலை அடிகளார் கருத்து
ஞான சாகரம் பத்திராதிபர்

சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:
-

வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.
பல்லாவரம் சுவாமி வேதாசலம்
7.10.1927

ஆரியர் சித்தாந்தம்
அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.
(13-10-1935 குடி அரசு பக்கம் 9)
இந்து மதம் ஒழிகிறது
இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.
(17-10-1935 குடி அரசு பக்கம் 11)


பெண்களும் - கற்பும்
பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.
(3-11-1935 குடி அரசு பக்கம் 13)
சூத்திரர்கள் யார்?
தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
(19-9-1937 குடி அரசு பக்கம் 9)

 http://www.viduthalai.periyar.org.in/20101120/news10.html

No comments:


weather counter Site Meter