Pages

Search This Blog

Wednesday, October 6, 2010

இலைச்சோற்றில் இமயமலையை மறைக்கும் வேலை (2)-தினமணிக்கு பதிலடி

இட ஒதுக்கீடு ஜாதி, சமூக வாரியான முறையில் அளிக்கப்படக் கூடாது - பொருளாதார அடிப்படையிலேயே செயல்படுத்தப்படவேண்டும் என்ற தொனியில் சிறப்புக் கட்டுரையை வெளியிடும் தினமணி - அதற்காக என்னென்ன காரணங்களைக் கதைக்கிறது?
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் லாபத்துக்காகச் செய்யப்படுவது என்ற குற்றச்சாற்று முன்வைக்கப்படுகிறது.
ஜாதி என்பது சட்டப்படியாகத் தடுக்கப்பட்டு விட வில்லை. ஜாதி என்ற சொல் 18 இடங்களில் இந்திய அர சமைப்புச் சட்டத்தில் சாங்கோபாங்கமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாதிவாரியான கணக்கெடுப்பு என்பது ஓர் அரசுக்குத் தேவைப்படக் கூடிய ஒன்றே! தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய ஜாதி கணக்கெடுப்பு மேற்கொண்டபோது, இந்தக் கேள்வியை யாரும் எழுப்பிட முன்வரவில்லை; பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதி விவ ரத்தை எடுக்க முனையும்போது மட்டும் முண்டா தட்டு கிறார்கள். இது தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட் டோரையும் மோதலில் சிண்டு முடியும் வேலை.
இரண்டாவதாக, இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது நீதிபதிகள் தொடுக் கும் முதல் வினா என்ன?
பிற்படுத்தப்பட்ட மக்களின் சதவிகிதம் என்ன? அதுபற்றிய புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில், அவர்களுக்கான சதவிகிதம்பற்றி எப்படி உறுதி செய்ய முடியும்? 1931 இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் 2010 இல் எப்படிப் பொருந்தும்? என்ற வினா எழுப்பப்படுகிறதே அதுபற்றியெல்லாம் தினமணி வகையறாக்கள் அறிய மாட்டாதவர்களா? வசதி கருதி காதுகளைப் பொத்திக் கொள்வார்களோ!
மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு எப்படி பெற முடியாத அளவுக்கு உச்சநீதிமன்றம் நடுவில் குன்றுகளைக் கொண்டு வந்து போடுகிறதே - அதுபற்றியெல்லாம் தினமணிகளுக்குக் கருத்துகள் கிடையாதா?
இன்னொரு கருத்தை- தகவலைத் தெற்றெனத் தெரிவிக்கிறது தினமணியின் சிறப்புக் கட்டுரை.
இன்று அரசுத் துறைகளில் ஜாதிவாரியான இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனக் கூக்குரலிடும் தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்று போராடத் தயாராக உள்ளனவா?
லட்சம் பெறுமானமுள்ள கேள்வி இது. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு தேவை, தேவை என்று எத்தனை, எத்தனை முறையோ குரல் கொடுத்து வருகி றோம். தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறோம்; வீதி களில் இறங்கிப் போராடியிருக்கிறோம் - நாளையும் போரா டுவோம் - தினமணியின் ஆசையை(?) நிறைவேற்றிடப் போர்க்கால ஆயத்தத்தோடும் இருக்கிறோம். அதில் எள் மூக்கு முளையளவும் தினமணிகளுக்குச் சந்தேக நோய் வேண்டவே வேண்டாம்.
இன்னொரு கருத்தினை எடுத்துச் சொல்லி தனக்குத் தானே முரண்பாடு முரசினை ஒலித்துக் கொண்டுள்ளது.
அரசியல் பலம் படைத்தவர்களின் நிறுவனங்களில், முக்கிய பதவிகளுக்குத் தகுதியான உயர் வகுப்பினரை வைத்துக் கொள்வர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என வாய் கிழியப் பேசும் முக்கிய தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஏன் தொழிலதிபர்களும்கூட தங்களது தனிச் செயலாளர், கணக்குத் தணிக்கையாளர், வழக்கறி ஞர்கள் என அனைத்திலும் உயர்வகுப்பு ஜாதியினரைப் பயன்படுத்துகின்றனரே, அது எப்படி?
- இப்படி ஒரு வினாவையும் தொடுத்து இட ஒதுக்கீடு கேட்பவர்களின் விலா எலும்பில் குத்துகிறது.
உயர்ஜாதி வகுப்பினர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வறுமையில் நெளிகின்றனர் என்றெல்லாம் ஒரு பக்கத்தில் ஓலமிட்டு விட்டு, தனியார்த் துறைகளில் எல்லாம் உயர்ஜாதியினர்தான் கோலோச்சுகின்றனர் என்று தம்மை அறியாமலேயே உண்மையைப் போட்டு உடைத்துக் காட்டிவிட்டதே தினமணி?
அரசுத் துறைகள், பொதுத் துறைகள் நாளும் குறைந்து, தனியார்த் துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பல்கிப் பெருகி வருகின்றன என்பது உண்மைதான். புதிய பொருளாதாரக் கொள்கை உலகம் முழுவதும் தன் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது.
இனி சமூகநீதி, இட ஒதுக்கீடு என்பது இந்தத் துறைகளில் இடம் பெறுவதாகவே இருக்க முடியும்.
இன்னும் சொல்லப்போனால் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற பரிந்துரையை - மண்டல் குழு அறிக்கையே அளித்துள்ளது.
அரசின் பல உதவிகளையும் (கடன் உதவி உள்பட) பெற்றுத்தான் தனியார் நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இயங்குகின்றன. இந்த நிலையில், அரசின் முக்கியக் கொள்கையான சமூகநீதியைக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டியது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும்; அதுவும் இது பெரும்பான்மை மக்களின் உயிர்நாடிப் பிரச்சினையாகும்.
இந்தக் கண்ணோட்டத்தில் இன்னும் வேகமாக ஒடுக் கப்பட்ட மக்கள், சமூகநீதியாளர்கள் போராட - தின மணியின் சிறப்புக் கட்டுரை ஓர் உந்துதலைக் கொடுத் திருக்கிறது என்று எடுத்துக் கொள்வோமாக!

No comments:


weather counter Site Meter