Pages

Search This Blog

Thursday, October 14, 2010

மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது-தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள்-உலகெங்கும் வெகு சிறப்பாக, எழுச்சியூட்டும் வகையில் நடைபெற்றுள்ளது

தந்தை பெரியார் அவர்களின் இந்த 132ஆம் ஆண்டு பிறந்தநாள்-உலகெங்கும் வெகு சிறப்பாக, எழுச்சியூட்டும் வகையில் நடைபெற்றுள்ளது. அமெ ரிக்கத் தலைநகரமான வாசிங்டனில் கருத்தூட்டத் துடன் கொண்டாடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மட்டுமல்ல; பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும் பங்கேற்று தந்தை பெரியார் அவர்களின் தேவையை நுணுகி உணர்ந்து கொண் டாடியுள்ளனர்.

வட இந்தியாவில் சமூக நீதித்தந்தையான பெரியாரின் பிறந்தநாள் விழா ஆழமான கண் ணோட்டத்தோடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரமான டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உணர்ச்சிப் பெருக்கோடு மாணவர்கள் அய்யா விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

சட்டத்துக்கு விரோதமாக-எல்லா நடைமுறை களையும் குப்புறத் தள்ளி, இடஒதுக்கீட்டை தூக்கி எறிந்து பார்ப்பன மனுதர்மக் கூடாரமாக பல்கலைக் கழகத்தை மாற்றியுள்ள சூழலில், தந்தை பெரியார் விழா கொண்டாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீதி மன்றம் வரை சென்று போராடி, ஓரளவுக்கு உரிமையைப் பெற்றுள்ளனர் மாணவர்கள் என்பது மகிழத்தக்க தாகும்.

தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வேரூன்றினால்தான், ஒடுக்கப் பட்ட மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு என்பதை உணர்ந்து, அப்பல்கலைக் கழக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த விழாவை எடுத்துள்ளனர் என்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

சரியான திசையில் தந்தை பெரியார் சிந்தனைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கியுள் ளனர் என்பது ஆதிக்கவாதிகளின் அடிவயிற்றினைக் கலக்க ஆரம்பித்துவிட்டது. டில்லி தலைநகரில் உருவான இந்தப் புயல் நாட்டின் நாலாத்திசைகளிலும் சுழன்றடிக்கும் என்பதில் அய்யமில்லை.

காசி பல்கலைக் கழக மாணவர்களும் பெரியார் விழாவைக் கொண்டாடியுள்ளனர். சிறுவயதில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரியாமல் (துறவு பூண்டு) பெரியார் வடநாடு சென்றதில் காசி குறிப் பிடத்தக்கதாகும். அங்கு பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையையும், சாமியார்களின் தானடித்த மூப்பையும், ஆபாசத்தையும், மதத்தின் பெயரால் அங்கு நடைபெறும் அருவருப்புத் தன்மைகளையும் நேரில் காணும் வாய்ப்பு தந்தைபெரியாருக்குக் கிட்டியது.

அந்தக் காசி பல்கலைக் கழக மாணவர்கள்தாம்-இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட உயர்ஜாதியினரான சம்பூர்ணானந்த் சிலை- தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜெகஜீவன் ராம் திறந்ததால் தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி,கங்கை நீரால் சிலையைக் கழுவினார்கள்.

அத்தகைய காசி பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து தந்தை பெரியார் விழாவினைக் கொண் டாடினர் என்பது எத்தகைய திருப்பம்!

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மானமிகு சுப.வீரபாண்டியன் அவர்கள் கடந்த வாரம் காசி சென்றபோது அங்குள்ள ஒரு அமைப்பினரைச் சந்திக்க சென்ற நிலையில், அவர்கள் அடையாள அட்டையில் தந்தைபெரியார் படம் இருந்ததைக் கண்டு மெய்சிலிர்த்ததாகக் கூறினார். (பெரியார் திடல் நிகழ்ச்சி ஒன்றில்- 12.10.2010)

பிகார் மாநிலம் பாட்னாவில் செப்.17இல் பெரியார் பிறந்தநாள் பல்துறைப் பெருமக்கள் பங்கேற்க கருத் தாழத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பங்கு கொண்டு பெரியாரியலை விரிவாகப் பேசியிருக்கின்றனர்.

திரிவேணி சங்கத்தின் சார்பில் இந்தப்பெரியார் விழா கொண்டாடப்பட்டுள்ளது. 1933ஆம் ஆண்டி லேயே உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பு இந்தத்திரிவேணி, சங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (1958). ஆம்! அந்தப் புரட்சிக் கவிஞனின் தொலைநோக்குப் பார்வையில் வெளிவந்த வெளிச்சம்-வெண்தாடி வேந்தருக்கு 2010இல் எடுக்கப்படும் விழாவின் மூலம் மேலும் ஒளி பெறுகிறது.

பெரியாரை உலகமயமாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர். அதன் முக்கிய கட்டம் இப்பொழுது! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

No comments:


weather counter Site Meter