மத விழாக்கள் என்ற பெயரில் பக்தர்களை கோயில் பூசாரிகள் கொடுமைப்படுத்தும் காரியங் கள் நடைபெற்று வருகின்றன. சட்ட ரீதியாகத் தடை செய்யப்பட்டும் விபரீதமான, உயிருக்கே அபாயகரமான பல காரியங்கள் அனுமதிக்கப் பட்டுக் கொண்டு இருப்பது வருந்தத்தக்கது.
திருச்சிராப்பள்ளியை அடுத்த தா.பேட்டை ஒன்றியம் வாளசிராமலை ஊராட்சி - வெள்ளா ளப்பட்டி - அச்சப்பன் கோயிலில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் பேய் விரட்டுவதாகக் கூறிக் கோயில் பூசாரி பெண் பக்தைகளையும் - ஆண் பக்தர்களையும் சாட்டையால் மிகக் குரூரமாக அடித்தார் என்ற செய்தி ஊடகங்களில் விரிவாக வெளிவந்துள்ளன. பக்தர்களின் தலைகளில் தேங்காய்களையும் பூசாரி உடைத்திருக்கிறார். பலர் தலைகளில் ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது.
இதுபோல திருமணம் ஆகிக் குழந்தைப் பேறு இல்லாத பெண்களைப் படுக்க வைத்து அவர்கள்மீது ஆணியுள்ள செருப்புக் காலால் கோயில் பூசாரி நடந்து செல்லும் கொடுமையும் நடப்பதுண்டு. எச்சில் இலைமீது உருண்டு புரளும் கேவலம் கரூருக்குப் பக்கத்தில்.
மதுரையையடுத்த பேரையூரில் குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் குழிமாற்றுத் திருவிழா அண்மைக்காலம்வரை நடந்ததுண்டு.
கழகத் தோழர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது அரசால் தடை செய்யப்பட்டது.
இப்படி சாட்டையால் அடிப்பது - பெண்களைப் படுக்க வைத்து ஆணி செருப்புக் காலால் மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, அலகு குத்தித் தொங்குவது போன்ற உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவற்றை அரசு தடுக்கவேண் டாமா? மத சம்பந்தப்பட்டது என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ள முன்வந்தால் அரசு அனுமதிக்குமா?
சாட்டையால் அடிப்பது, மண்டையில் தேங்காய் உடைப்பது என்பதெல்லாம் உயிருக்கு உலை வைக்கும் செயல் அல்லவா? நரம்பியல் மருத்து வர்கள் - மண்டையில் தேங்காய் உடைப்பதால் ஏற்படும் விபரீதங்களை அறிவியல் ரீதியில் கருத்துகளைக் கூறி எச்சரித்துள்ளனரே!
மாட்டுக்குத் தார்க்குச்சி போடுவது குற்றம் - மிருகவதை என்று கூறி தடுக்க சட்டம் இருக்கிறது. தார்க் குச்சியைப் பயன்படுத்தினால் அவர் களுக்குத் தண்டனை உண்டு.
ஆனால், இப்பொழுது பக்தியின் பேரால் மனிதவதை செய்கிறார்களே - இதனைத் தடுக்க சட்டம் இல்லையா? மாட்டைவிட மனிதன் தரத்தில் தாழ்ந்துவிட்டானா?
கோயில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்களால் உடனடியாக உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், நாளடைவில் பாதிக்கக் கூடிய நிலைப்பாடுகள் உண்டு.
மண்டையில் தேங்காய் உடைப்பதால் மூளை தொடர்பான பாதிப்புகள் - முதுகில் சாட்டையால் அடிப்பதால், முதுகெலும்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டால், எந்தப் பூசாரி, எந்தக் கடவுள் குணப்படுத்த ஓடோடி வரப் போகிறார்?
பேய் என்று ஒன்று இருக்கிறதா? அறிவியலில் அதற்கு இடம் உண்டா? மனோ தத்துவ நிபுணர்கள் இதற்குக் கூறும் விளக்கம் என்ன?
இல்லாத பேயை விரட்டுவதாகக் கூறி சாட்டை கொண்டு சகட்டுமேனிக்கு அடிப்பது எந்த வகையில் நியாயம்? எந்த வகையில் இதனை அனுமதிப்பது?
தமிழ்நாடு அரசு - முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நல்லெண்ணத்தால் - சமூக சீர்திருத்தத் துறை ஒன்றினை உருவாக்கி, இந்த வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது.
அது முடங்கிக் கிடப்பது வேதனைக்குரியது. அரசமைப்புச் சட்டப்படி மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர்திருத்த உணர்வை வெளிப் படுத்த ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள் ளான்.
எந்தக் காலத்திலோ மூட நம்பிக்கை காரணமாக அறிமுகமான காட்டுவிலங்காண்டித்தனமான சடங்கு முறைகள் 2010 ஆம் ஆண்டிலும் அனுமதிக்கப்படுவது சரியல்ல.
அறநிலையத் துறை சரியான வழிகாட்டுதல் களை இதுபோன்ற பிரச்சினைகளில் காட்ட முன்வரலாம். கோயில் அறங்காவல் உறுப்பினர் களை, பூசாரிகளை அழைத்து தக்க வழி முறை களைக் கூறவேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
பக்தியின் பெயரால் உயிருடன் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது - கூடவே கூடாது!
http://viduthalai.periyar.org.in/20101019/news07.html
No comments:
Post a Comment