Pages

Search This Blog

Wednesday, October 6, 2010

நடராஜர் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலைஞர் செய்தார்

கடவுள்நடராஜன் செய்யாத காரியத்தை நாடாளும் முதலமைச்சர் கலைஞர் செய்தார் என்று சீர்காழி பொதுக்கூட்டத்தில் கலைஞர்அவர்களைப் பாராட்டி தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


தலையாய வெற்றி

இன்றைக்கு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்றால் அவர் பெற்ற வெற்றிகளில் எப்பேர்ப்பட்ட வெற்றி- தலையாய வெற்றி. நந்தியே விலகி இரு என்று நடராஜர் நந்தியைப் பார்த்து சொன்னாரே தவிர, நந்தனே உள்ளே வா என்று அழைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அய்ந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆகி பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கின்றார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றுவேன் என்று சொல்லி அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர், ஆதிதிராவிடர் உள்பட என்று ஆக்கி, அந்த சட்டத்தைப் போட்டதினாலே இன்றைக்கு ஆதிதிராவிடர் எங்கே போயிருக்கிறார் என்றால் எல்லா ஜாதியிலிருந்தும் போயிருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட சகோதரர் கடவுளுக்குப் பக்கத்திலே நின்று மணியடிக்கப் போகிறார். அய்யய்யோ, கடவுள் தீட்டாகி விடுமே என்று பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு ஓடியிருக் கின்றார்கள். உச்சநீதிமன்றத்தையும் அவர்கள் கர்ப்பக்கிரகம் மாதிரி நினைத்துக்கொண்டிருக் கின்றார்கள்.

நடராஜர் செய்யாததை கலைஞர் செய்தார்

கடவுள் நடராஜர் செய்ய முடியாததை பெரியாரின் தொண்டர் கலைஞர் செய்து காட்டினார் என்பதற்கு அடையாளம் என்ன? நந்தியே விலகியிரு என்று சொல்லவில்லை. நந்தனே உள்ளே வா என்று சொன்னார்கள். நீயும் மனிதன், நீ மண்ணல்ல. உனக்கும் அந்த உரிமை இருக்கிறது. நீதான் மிக முக்கியமானவன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தார் என்றால் பெரியாரின் பெருவெற்றிகளுக்கு இதைவிட மிகப்பெரிய எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்.

அதற்கு முன்பு ஆதிதிராவிடர் அய்கோர்ட் ஜட்ஜ் ஆகலாம். ஆதிதிராவிடர் அமைச்சராகி யிருக்கி றார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆக முடியாதா?

ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆக முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம்? அதற்கு என்ன காரணம் சொல்லுகிறார்கள்? ஜாதி. அந்த ஜாதியை வேரடி மண்ணோடு பெயர்க்க வேண்டும் என்று சொல்லுகின்ற இயக்கம்தான் தந்தை பெரியாரு டைய சுயமரியாதை இயக்கம். இந்தக் கொள்கை ஏன் பரவ வேண்டும்? ஒரு பக்கத்தில் சமுதாயத்தின் பங்குகள். இன்னொரு பக்கம் அந்த சமுதாயத்தின் தாக்கம், பிரதிபலிப்பு. இரட்டைகுழல் துப்பாக்கி யான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலே இருக்கின்ற காரணத்தினாலே ஈரோட்டு குரு குலத்திலே கலைஞர் அவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்ற காரணத்தாலே சொன்னார்.

கலைஞரைப் பாராட்டினோம்

முதல் வேலை, என்னுடைய வேலை என்னவென்று சொன்னால் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நான் அகற்றுவேன் என்று சொன்னார். அதற்காகவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். நாம் பாராட்டினோம். நீதிமன்றங்களில் சில தடைகள் இருக்கும். ஆனால் தடைக்கற்கள் ஆயிரம் உண்டென்றாலும், அதைத் தாங்கும் தடந்தோள்கள் நம்முடைய தோள்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அந்த வாய்ப்பை நாம் பெற்றிருக்கின்றோம்.

63 ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு...

இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு செய்தி. ரொம்ப வேடிக்கையான செய்தி. இன்னமும் சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்டது, 1947-லே இருந்து. இன்றைக்கு 2010ஆம் ஆண்டு. நாம் வருடா வருடம் சுதந்திரதினம் கொண்டாடு கின்றோம். மிட்டாய் கொடுக்கிறோம், கொடி யேற்றுகிறோம், எல்லாம் செய்கிறோம். தீண்டாமை ஒழிப்பு பேசுகிறார்கள். காந்தி பிறந்தநாளில் கடைப் பிடிக்கிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சி

வடநாட்டிலே மத்திய பிரதேசத்திலே பி.ஜே.பி ஆட்சி நடைபெறுகிறது. பி.ஜே.பி. ஆளுகிற மாநிலத்திலே ரொம்ப தூரம் போக வேண்டாம். ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் நீங்கள் போபால் வழியாகத்தான் போக வேண்டும். போபாலை யாரும் மறக்கமாட்டார்கள். ஏனென்றால் விஷவாயுமூலம் இந்த உலகமே அறிந்த நாடு.

அதைவிட கொடுமையான விஷவாயு செய்தியை நான் சொல்லுகின்றேன். அந்த விஷவாயு ஒரேயடியாக ஆளை சாகடித்துவிட்டால் தொல்லையில்லாமல் போகும்.

ஒரு நாயை சத்திரியர் வளர்த்தார். பிரம்மாவி னுடைய முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையி லிருந்து பிறந்தவன் வைசியன். காலிலிருந்து பிறந்தவர் சூத்திரன். பஞ்சமர் எங்கேயிருந்து பிறந்தார் என்று அய்யா அவர்களைக் கேட் டார்கள்.

அய்யா பளிச்சென்று பதில் சொன்னார். இது போன்ற செய்திகள் இளைய தலைமுறையின ருக்குத் தெரிய வேண்டும். ஏனென்றால் அந்தக் கொடுமைகள் எல்லாம் இன்றைக்கு இல்லை. கல்யாணம் இதைத்தான் சொன்னார்.

பாலம் கட்டியவர் யார் என்று பார்ப்பார்களா?

நல்ல பெரிய பெரிய பாலமாக நீங்கள் கட்டியிருக்கின்றீர்கள். ஏற்கெனவே சங்கடப் பட்டவன், இப்பொழுது பாலத்தில் போகும் பொழுது இரண்டு நிலையையும் அறிந்தவனுக்குத் தான் பாலத்தினால் ஏற்பட்ட நன்மை என்ன என்பது தெரியும்.

ஆனால் காரில் வேகமாகப் போகிறவருக்கு ஆக்சிலேட்டரை அழுத்துவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர, பாலம் கட்டியதால் நாம் வேகமாகப் போகிறோம். அதனால் என்ன பயன் என்பது எவருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள்.

தலைவர்களைப் பற்றி நினைப்பதில்லை

அதனால்தான் ரொம்பபேர் யாருக்கு நன்றி செலுத்தவேண்டுமோ அந்தத் தலைவர்களைப் பற்றி அவர் நினைப்பதில்லை. இது நம்முடைய சமுதாயத்தின் கூறுபாடு. பஞ்சமன் எங்கே பிறந்தான் என்று தந்தை பெரியார் அவர்களிடம் கேட்டார்கள். அவன்தான் பிறக்க வேண்டிய இடத்தில் அவனுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பிறந்தான் என்று பதில் சொன்னார் (கைதட்டல்).

இப்படி பெரியார் சொன்ன பிறகுதான் நமக்குப் புத்தி வந்தது. ஒரு பக்கம் நம்மாள்கள் சந்திர மண்டலத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றான். நம்ம ஊர் மயில்சாமி அண்ணாதுரை சந்திரயானை அனுப்ப உதவி செய்கிறார். விண்வெளிக்கு அனுப்புகிறோம். அணுகுண்டு களம் அமைத்து விட்டோம். உலகத்தை அப்படியே சுழற்றுகிறோம்.

இந்த சம்பவத்தை எத்தனைபேர் பத்திரிகையில் படித்தீர்கள் என்று தெரியவில்லை. ரொம்ப கொடுமையான சம்பவம். ஒரு சத்திரிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்மணி இங்கு சத்திரியன், வைசியன் என்ற பிரிவு கிடையாது. உச்சநீதிமன்றத் தில், உயர்நீதிமன்றத்தில் எல்லாம் தீர்ப்பு கொடுத்து விட்டார்கள். இங்கே பிராமணன், சூத்திரன் இரண்டே பிரிவுதான் உண்டு.

நாய்க்கு ரொட்டி கொடுத்தார்

வடநாட்டில் மத்திய பிரதேசத்தில் ஒருவர் நாய் வளர்க்கிறார். அந்த வீட்டு நாய் வெளியே போய் சுற்றி வருகிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி கையில் ரொட்டி வைத்திருக்கிறார். ஆதிதிராவிட சமுதா யத்தைச் சார்ந்த விவசாயி அம்மையார் தனது பசிக்காக ரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருக் கின்றார். இந்த நாய் பின்னால் வந்து நிற்கிறது. பசி என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடியதுதானே?

இது உயர்ஜாதிக்காரன் வளர்ந்த நாய். உயர் ஜாதிக்காரன் வளர்த்ததால்தான் பசிவரும் என்ற நியதி ஏதாவது இருக்கிறதா, இல்லை. இந்த அம்மையார் ரொட்டியை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட்டுக்கொண்டு வருகின்றார். நாய் வாலாட்டிக்கொண்டு பசியோடு நிற்கிறது. நாய் பசியோடு இருக்கிறதே என்ற மனிதாபிமானத்தோடு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த, உழைக்கின்ற சமுதாயத்தைச் சார்ந்த அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் அதிகம்.

அந்த சகோதரியார் ஒரு துண்டுரொட்டியை நாய்க்குக் கொடுத்தார். இந்த நாய் ரொட்டியைத் தின்றதைப் பார்த்துவிட்ட நாயின் சொந்தக்காரர் ரொட்டி கொடுத்தவர் எவ்வளவு பெரிய கருணைவான் என்று பாராட்டுவதற்குப் பதிலாக-நன்றி சொல்லுவதற்குப் பதிலாக என்ன செய்தார்? இந்த செய்தி பத்திரிகையில் வந்திருக்கிறது. யார் அந்த ரொட்டியைக் கொடுத்தது என்று அவர் கேட்கிறார். ரொட்டியைக் கொடுத்தது இன்னார் என்று தெரிந்தவுடனே நேராக தண்டனை கொடுத்து-நீ தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்.

நான் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவராயிற்றே

நான் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். நான் வளர்த்த நாய் இது. என்னுடைய நாய்க்கு உன்னுடைய ரொட்டியைப் போடலாமா? ஆகவே நீ தண்டனைக்குரியவர் என்று சொல்லி தண்டனை கொடுத்தார் என்பது முந்தாநாள் செய்தி. அதே மத்தியப் பிரதேசத்திலே கொஞ்ச நாளைக்கு முன்னாலே ஒரு மாவட்ட நீதிபதி வந்தார். அந்த பதவியிலே ஏற்கெனவே ஒரு தாழ்த்தப்பட்ட நீதிபதி உட்கார்ந்து பணியாற்றினார். அவர் மாற்றப்பட்டுப் போகிறார்.

நீதிபதி நாற்காலியை கழுவிவிட்டனர்

அந்த மாவட்ட நீதிபதி இடத்திற்கு இன்னொருவருர் வருகிறார். அவர் பார்ப்பனர்கூட அல்ல; அவர் உயர் ஜாதிக்காரர். பார்ப்பனீயம் எப்படி எல்லாம் நம்முடைய மூளையைக் கெடுத்திருக்கிறது என்பதற்கு உதாரணம்- ஜாதிக்கு ஆதாரம். மாறுதல் ஆகி வந்த நீதிபதி அலுவலக அட்டெண்டரை கூப்பிடுகிறார். ஒரு குடம் தண்ணீர் கொண்டு வா என்று சொல்லி, அந்தத் தண்ணீரை, சென்ற தாழ்த்தப்பட்ட நீதிபதி அமர்ந்த நாற்காலி மீது ஊற்றி கழுவச் சொல்லுகின்றார்.

தமிழ்நாட்டில் நடக்குமா?

நண்பர்களே! இப்படிப்பட்ட ஒரு அவலம் தமிழ்நாட்டில் நடக்குமா? எண்ணிப்பாருங்கள் நடக்காது. நடக்க விடமாட்டோம். காரணம் இது பெரியார் பிறந்த மண் என்பதுதான் (கைதட்டல்). இன்னும் சில இடங்களில் இரட்டைக் குவளை முறை எல்லாம் இருக்கிறது. இதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இன்னமும் நம்மால் சகிக்க முடியவில்லை. இன்னமும் போராட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இரட்டைக் குவளை முறை

ஆனால் அதே ஆள் என்ன பண்ணுகிறான்? ஒரு குவளையில் டீ மட்டும் குடிக்கின்றான். ஜாதி எங்கேயிருக்கிறதென்றால் டீ கடையிலே மட்டும் இருக்கிறது. ஏன் இரட்டை குவளை என்று கேட்டால் இது கிராமம், அப்புறம் என் கடையில் டீ குடிக்கமாட்டார்கள். தகராறு பண்ணுவார்கள்.

இப்பொழுது நீங்கள் வந்திருக்கின்றீர்கள், சொல்லுகிறீர்கள். நீங்கள் போன பிறகு வந்து தகராறு பண்ணுவார்கள். இதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று பதில் சொல்லுகின்றான்.

-(தொடரும்)

No comments:


weather counter Site Meter