Pages

Search This Blog

Wednesday, October 27, 2010

முதுமை இளமையாக -வாழ்வியல் சிந்தனைகள்

கடந்த 13 ஆம் தேதி அன்று சென்னை யிலிருந்து துபாய் வழியாக குவைத் சென்றடைய மறு விமானத்தில் பயணித்த போது, நியூயார்க் டைம்ஸ் International Tribune என்ற ஆங்கில நாளேட்டில் மிகவும் தரமான பலரது கட்டுரைகள் பலவற்றை படித்து இன்புறக் கூடிய நல்வாய்ப்பு கிடைத்தது!

இதற்கிடையில், முற்பகல் (உள்ளூர் நேரம்) 12 மணியளவில் சென்னையிலி ருந்து சென்ற நாங்கள், மாலை 4 மணிக் குத்தான் தொடர்பு விமானம் என்றவுடன் எங்கள் விமானத்திலிருந்து வெளியே வந்து அடுத்த விமானம் உள்ள நுழைவு வாயிலுக்குச் செல்ல நாங்கள் நடந்தோம்.

காலை நடைபயிற்சி செய்யவில்லையே என்ற ஏக்கம் தீருமளவுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தோம்.

கழிப்பறைகள்தான் எவ்வளவு தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன!

நடந்து செல்லும்போது உயரமான கட்டடத்தின் இடையில் அதனைத் தாங்கும் உலோகத் தூண்கள் மதுரை திருமலை நாயக்கர் மகாலின் தூண்களைவிட சுற்றளவிலும் பெரிது!

வழவழப்பான ஒளிவீசும் தரைகள் - படுத்து உறங்க வசதியானவை என்பதற்கு ஒப்ப அவ்வளவு நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. அந்தந்த நுழைவு வாயில் (கேட்) எதிரே ஏராளமான இருக்கைகள் - அமருவதற்கு. அதன்கீழே நிம்மதியாக பல பயணிகள் காலை தாராளமாக நீட்டிப் படுத்து திருவரங்கப் பெருமாள்போல்(!) உறங்கிடும் நிலை கண்டு வியந்தோம். (ஆடாமல், அசையாமல் நன்றாக தூங் கியதால் அந்த உவமை!) அந்தப் பள்ளி கொண்ட - அரங்கநாதர்கள் கொண்ட தூக்கம், எந்த ஓசையாலும் எளிதில் எழுப்ப முடிவதில்லை. காரணம், இருபுறமும் கொஞ்சம் தள்ளி, சுங்கத் தீர்வையற்ற கடைகள் - அதற்கு நடந்து செல்லும் பயணிகள் - இடையிடையே ஒலி பெருக்கி அறிவிப்புகள் - இவற்றைப் பொருட்படுத் தாது உறங்கியவர்களைக் கண்டு வியந்து நடந்தோம்!

என்னே அழகுடன் அமைக்கப்பட்டுள்ள விமான நிலையம்! மூன்றாவது தளம் (Third Terminal) அவர்களது எமிரேட்ஸ் விமான சேவை தளம் ஆகும்!

பாலைவனத்தில் - மணல் மேடுகள் நிறைந்தவிடத்தில் இப்படி ஒரு மாநகரம் - உலகமெங்கிலுமிருந்து பணத்தைக் கொண்டு வந்து கொட்டிச் செலவிட்டு மகிழவும், தொழில் வளர்ச்சிக்கான பல் வகை தொழில்களைப் பரிமாறும் அளவுக்கு செய்தது அறிவின், ஆய்வின், பகுத்தறி வின் சாதனை அல்லவா?

அந்த அறிவு வளர வளர எப்படியெல் லாம் மனிதர்களின் வாழ்க்கை மாறப் போகிறது என்பது வருங்காலப் புதிர்களில் ஒன்றாகவே அமைவது உறுதி!

மற்ற கோள்களில் மனிதர்கள் குடியேறும் காலம் மனித குலத்தை நோக்கி விரைந்து வருகிறது!

மனிதர்களுக்கு வயது ஏற, ஏற, நினைவு வன்மை குறையத் தொடங்கு கிறது. இந்த மறதி - ஞாபக சக்தி குறைவு. மிக மோசமானால், அதுதான் அல் ஷைமர்ஸ் (Alzimers) நோயாகவும், அம்னீஷியா, டெம்னீஷியாவாக பலருக்கு பல்வகை தாக்குதல் நோய்களாக உரு வெடுத்து, அவர்களை மீண்டும் குழந்தைப் பருவத்திற்கோ(!) அல்லது அவர்களைப் போலவே ஆக்கிடும் கொடுமையில் தள்ளி விடுகிறது!

இந்த முதுமை மறதி நோயின் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்கள் - அதைத் தடுத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை இங்கிலாந்து, அமெரிக்கப் பல்கலைக் கழக ஆராய்ச் சியாளர்கள் ஆய்வு செய்து, பல்வேறு பரிசோதனைகளை - பல முதியவர்களை வைத்து - நடத்தி சில முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்!

சிலர் வயதாகியும் நல்ல நினைவாற் றலுடன் இருப்பதற்கு - முதல்வர் கலைஞர் 87 வயதிலும் நினைவாற்றலுக்குப் பரிசு பெறத் தகுதியானவராகக் காட்சி அளிக்கிறார். அதுபோலவே தந்தை பெரியார் அவர்களும்கூட. தந்தை பெரியார் அவர்கள் 95 வயதிலும் தக்க நினைவாற் றலுடன் இறுதிவரை வாழ்ந்தார்கள். அவரது மூன்று மணிநேரப் பேச்சில் - உவமை - கதை என்ற லூப் லைனில் சென்று, மீண்டும் தொடர்பு அறாத மெயின் லைனுக்கு வரத் தயங்கவே மாட்டார்கள் என்பது கேட்டோர் வியந்த செய்தி.

தொடர்பு விட்டுவிடாமல் எடுத்து வைத்த செய்தி மீது பேசிக்கொண்டே செல்வார்கள். யாரையாவது ஒருமுறை பார்த்தால், அதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவு கூறுவார்கள். சிலரை குடும்பப் பெயர் சொல்லி அழைப்பார்கள் - உறவினர்களைப்பற்றி ஞாபகமாக பெயர் சொல்லி விசாரிப்பார்கள். அவர்கள் ஆச்சரியத்தால் அதிர்ந்தே போவார்கள்.

இப்படி நினைவு சக்தி அவர்களுக்கு இருப்பதற்கு மூல காரணம், மூளைக்கு சதா வேலை கொடுப்பதுதான். எப்படி உடற்பயிற்சியில் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றனவோ, அதுபோலவே, மூளை - சிந்தனையால் மிகுந்த நினைவு ஆற்றலை - வளத்தைப் பெறுகிறது என்பது அறிவியல் ரீதியான, உளவியல் ரீதியான முடிவுகளாக மேற்கண்ட பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்!

சிலர் குறுக்கெழுத்துப் போட்டி (Cross Word Puzzles), சொடுக்கு (Sodukku) முதலியவைகளில் ஈடுபட்டு மூளையை கூர்தீட்டிக் கொள்ள முயலுகின்றனர்.

ஆனால், அந்தச் சொற்கள், கணிதத்திற்கு அதிக பயன் என்பது இந்த ஆய்வாளர்களின் முடிவாகும்!

எனவே, எப்போதும் நீங்கள் உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுக்காதீர்கள் - நேற்று முன்னாள் யாரை யாரைச் சந்தித் தோம்; என்ன உணவு, பதார்த்தங்களை உண்டோம் - எத்தனை வகைகள் - எந் தெந்த நிகழ்வுகள் - படித்த செய்திகள், கேட்ட கருத்துகள் - இவைகளை வரிசைப் படுத்தி நினைவூட்டிக் கொள்ளுங்கள். அதுவே மூளைக்கு நல்ல பயிற்சி. படித்தவைகளை அசை போடுங்கள் - உட்கார்ந்து நினைவுபடுத்தி எழுதிப் பாருங்கள் - முதுமை இளமையாகும்!

மனம் உடைந்துபோக வேண்டாம்!
http://www.viduthalai.periyar.org.in/20101027/news08.html

No comments:


weather counter Site Meter