Pages

Search This Blog

Saturday, October 16, 2010

இவள்தான் சரசுவதி

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள்.

ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்தவள்.

பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக்கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டி, பிரம்மனைக் கணவனாகப் பெற்றவள்.

பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத்திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்தனள். சரசுவதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவனிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால்...

இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).

(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?

பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவனாகப் பெறுவானேன்?

பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத்துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத்தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.

ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?

ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக்கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?

எந்த ஒன்றிலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசுவதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக்கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத்திற்கும் பொருத்தமுடையவைதானா?

கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?

அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள்முனை அளவேனும் தொடர்புளதா?

அபிதான சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல்லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத்தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?

இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற்கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?

இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!

நம் முன்னோர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும்தானே தொகுத்துரைக்கிறார்.

ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவைகளைப் படித்து அறிந்தேனும் திருந்துவாயா? உலக நடப்புகளோடு பொருந்துவாயா? உன் அறியாமையையும், தவற்றையும் எண்ணி வருந்துவாயா?

- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்
http://www.viduthalai.periyar.org.in/20101016/news09.html

1 comment:

S.Sudharshan said...

என்ன செய்வது .. இதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html


weather counter Site Meter