Pages

Search This Blog

Thursday, October 7, 2010

விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக ராஜபக்சேவே கூறிவிட்ட நிலையில் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தடை ஏன்?-கி. வீரமணி

விடுதலைப்புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டனர் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறிவிட்டார். இந்நிலையில், இந்திய அரசு மீண்டும் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை செய்வது தேவையற்ற ஒன்று என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:

இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.

ராஜபக்சேமீது பான்-கி-மூன் குற்றச்சாற்று


சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமை பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்; விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர்பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.

இந்தியா அளித்த உதவி என்னாயிற்று?
இந்த நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங் களாக்கிடும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை ஏன்?

இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!

இலங்கை அரசே இங்கே விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் - சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை யிலோ என்று நமக்குப் புரியவில்லை.

காஷ்மீருக்கு ஒரு நீதி - விடுதலைப்புலிகளுக்கு மற்றொரு நீதியா?

காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சல்கள் பெருகிய பல வட மாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் - நல்லெண்ண முயற்சிகளை மேற் கொள்வது - அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!

அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத் திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் - இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாற்றின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினை (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.

இலங்கை அரசை நிர்பந்தப்படுத்துக!
எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப் படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுகவேண் டும். நிர்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிடவேண்டும் - முன்னுரிமை அதற்குத்தான் தரப்படவேண்டும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.
http://www.viduthalai.periyar.org.in/20101007/news01.html

No comments:


weather counter Site Meter