Pages

Search This Blog

Friday, October 8, 2010

விநாயகனின் சக்தி எங்கே?மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான்

களிமண்ணால் பிள்ளையாரை மனிதனே உருவாக்கி துண்டு துண்டாக வெட்டி கடலில் கரைக்கிறான் அதில் எங்கே விநாயகனுக்கு சக்தி இருக்கிறது? என்று தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மூட நம்பிக்கையை விளக்கி உரையாற்றினார்.
சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு: தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற நூலில் இனிமேல் எதிர்காலத்தில் ஒவ் வொருவர் கையிலும், பையிலும் தொலைபேசி இருக்கும் என்று சொன்னார். இன்றைக்கு எல்லோர் கையிலும் தொலைபேசி இருக்கிறது. செல்பேசி இருக்கிறது. ஒவ்வொருவரும் ஆள்காட்டி பேசிக் கொள்வார்கள்.
இனிமேல் ஒருவர் ஒரு இடத்திலிருந்து கொண்டே எல்லா இடங்களுக்கும் பேசிக்கொண்டி ருக்கலாம் என்று சொன்னார். அதுதான் வீடியோ கான்ஃபரன்சிங்.

பெரியாரின் சமூக சிந்தனை

இன்றைக்கு அவ்வளவும் வந்தாகிவிட்டது. அவ்வளவு அறிவியல் சமூக சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்கள். எனவே அவருடைய சமூக சிந்தனை வந்தாகிவிட்டது. இன்றைக்கு நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றோம்.

கம்ப்யூட்டரில் பிள்ளையார் படம்

அந்தக் கம்ப்யூட்டரில் இவன் பிள்ளையாரை வரைகிறான். இந்தக் கூட்டம் முறைப்படி முன்னாலேயே நடந்திருக்க வேண்டும். 12ஆம் தேதியே இந்தப் பொதுக்கூட்டம் நடந்திருக்க வேண்டும். என்னுடைய சுற்றுப்பயணத்தில் ரொம்ப நாளைக்கு முன்னாலேயே தேதி கொடுத்தேன்.

ஜெகதீசன் புத்தகம் வெளியிடுவதற்காக கேட்டார். எனக்கும் சீர்காழியில் பேசி ரொம்பநாள் ஆகிவிட்டது என்று நினைத்தேன். புத்தகத்தை மண்டபத்தில் வெளியிடாதீர்கள். பொது மக்கள் மத்தியில் பேச வேண்டும். எல்லா கட்சி நண்பர்களும் இருப் பார்கள். அரசியல் கட்சி தெளிவுள்ள பகுதி அது. எல்லா கட்சி நண்பர்களும் வருவார்கள். அதனால் சீர்காழி பொதுக்கூட்டத்தில் பேச தேதி கொடுத்திருந்தோம்.

பதற்றத்தோடு சொன்னார்

திடீரென்று நமது ஜெகதீசன் ரொம்ப பதற்றத்தோடு, ரொம்ப சங்கடத்தோடு ஃபோன் பண்ணி சொன்னார். காவல்துறையினர் 12ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்தை அனுமதிக்க முடியாது. ஏனென்றால் அன்றைக்குத்தான் பிள்ளை யாரை எல்லாம் கரைக்கப் போகிறார்கள். ஊர்வலம் அன்றுதான் வருகிறது என்று சொன்னார்கள் என்று சொன்னார்.

நான் தலைமையைக் கேட்டுதான் சொல்வேன் என்றும் சொன்னார். அதுதான் இந்த இயக்கத்தி னுடைய கட்டுப்பாடு. அவர்களாக யாரும் எதுவும் செய்யமாட்டார்கள்.

நான் சொன்னேன். பரவாயில்லை, அவர்கள் என்ன நோக்கத்தோடு ஊர்வலம் வைத்தார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டாம்.

காவல் துறையின் மரியாதையைக் குறைக்கக் கூடாது

காவல்துறை நமக்கு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிற துறை, பெரியார் அவர்களுடைய கருத்துப்படி காவல்துறைக்கு இருக்கின்ற மரியாதையை எந்தக் கட்சிக்காரரும் குறைத்துவிடக்கூடாது.

காவல்துறையினுடைய பணி என்பது சாதாரண மானதல்ல. மத்தளத்திற்கு இரு பக்கம் அடி என்றால் அவர்களுக்கு பலபக்கம் அடி. அப்படிப் பட்ட ஒரு துறை.

பலிகடா ஆக்கக்கூடிய சூழ்நிலை

பல நேரங்களில் அவர்கள் பலிகடா ஆக்கப் படக்கூடிய சூழ்நிலைகளும் உண்டு. எனவே காவல்துறையினருக்கு நாம் சங்கடத்தை உண்டாக்க வேண்டாம். அதிகாரிகள் காக்கி சட்டையைப் போட்டுக் கொண்டு பெரிய பதவியில் இருக்கத்தான் நாம் பாடுபடுகின்றோம். நம்மால் அவர்களுக்கு சங்கடம் வரக்கூடாது. பரவாயில்லை, இன்னொரு நாள் மாற்றி வைத்துக்கொள்ளலாம். நீங்கள் யாரும் சங்கடப்படாதீர்கள் என்று சொன்னேன். தோழர்கள் எல்லாம் கொஞ்சம் வேகமாக இருந்தார்கள். நான் உடனே சொன்னேன். இந்த அரசாங்கம் நமது அரசாங்கம். இந்த அரசாங்கத்திற்கு நாம் சிக்கலை உண்டாக்கக் கூடாது. எனவே அவர்கள் எந்த நோக்கத்திற்காக சொன்னார்கள் என்பது புரியும். புரியாமல் இல்லை. ஆகவே இன்னொரு நாள் வைப்பதில் ஒன்றும் தப்பில்லை. நீங்கள் தெளிவாக நாளைக்கு சொல்லிவிடுங்கள் என்று தெளிவாக சொன்னோம்.

மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்

நாங்கள் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் செய்கின்றோம். அது அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும். இந்தத் தீர்மானத்தில் ஒரு முக்கியமான தீர்மானமாகப் போட்டிருக்கின்றோம்.

முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு என்று போட்டிருக்கின்றோம். மூடநம்பிக்கை ஒழிப்பு என்பதும், மக்கள் மத்தியில் சீர்திருத்த உணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வது என்பதும், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஹ () பிரிவில் திட்டவட்டமாக வலியுறுத்தப்படுகிறது. அரசியல் சட்டத்தில் குரனேயஅநவேயட னரவநைள என்று இருக்கிறது.

அடிப்படை கடமைகள்

எல்லோருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றித்தான் தெரியும். வழக்கறிஞர்களுக்குக் கூட. ஆனால், அதற்கடுத்து அடிப்படை கடமைகள் என்று ஒன்று இருக்கிறது. குரனேயஅநவேயட னரவநைள என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை கடமைகள் உண்டு.

1.விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். 2. ஏன், எதற்கு என்று கேட்க வேண்டும். 3. மனிதநேயத்தை வளர்ப்பது 4. சீர்திருத்தம். ஒவ்வொரு குடிமகனுடைய பொறுப்பு

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுடைய கடமை என்னவென்றால் இவை அத்தனையையும் பரப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. எதைப் பரப்ப வேண்டும்? அறிவியல் மனப்பான்மையை. அரசியல் சட்டத்தில் இப்படி இருக்கிறது. நம்மாள் வருடா வருடம் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடு கின்றார்கள்.

ஆரம்பத்தில் இது தமிழர்களுடைய, திராவிடர்களுடைய பண்பாடு கிடையாது. கி.பி.7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வட நாட்டிலிருந்து பிள்ளையார் என்பது வாதாபியி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுள்.

அபிதான சிந்தாமணி

இதற்குப் பெரியாருடைய ஆதாரம் தேட வேண்டாம். 1910இல் வெளிவந்த அபிதான சிந்தாமணி. புலவர் சிங்காரவேலு முதலியார் எழுதிய என் சைக்ளோபீடியா, எல்லா விசயத்தைப் பற்றியும் இருக்கக் கூடியது.

புராணங்கள், இலக்கியங்களில் ஆதாரபூர்வமாக இருக்கிறது. இவை எல்லாவற்றைப் பற்றியும் எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்றார். பிறந்தது எப்படியோ? என்று எழுதியிருக்கின்றார். வட நாட்டிலிருந்து வந்தது.

வாதாபி கணபதே பஜம்! பஜம்!

பாட்டுப்பாடும் பொழுது முதலில் பாடுவார்கள். வாதாபி கணபதே பஜம்! பஜம்! என்று பாடுவார்கள். வாதாபி கணபதி என்றால் வாதாபியிலிருந்து வந்தது.

ஏழாம் நூற்றாண்டிற்குப்பிறகு வந்தது. வேதத்தி லேயோ அல்லது வேறு இடத்திலேயோ விநாயகர் புரம் என்று எழுதி வைத்திருக்கிறதா என்றால் இல்லை. இதிலே பெரிய சிக்கலே நாங்கள் படித்த அளவுக்குப் புராணத்தை எவனும் படித்துத் தொலைக்கவில்லை (கைதட்டல்). பெரியார் படித்த அளவுக்கு இராமாயணத்தை வேறு யாருமே படித்ததில்லை. ஆகவே அவருக்கு எந்த புள்ளி, எந்த கமா எங்கே இருக்கிறது என்பது தெரியும். பக்தி என்பது மூடநம்பிக்கையின் அடையாளம்.

கண்முன்னாலேயே கடவுளை உண்டாக்குகிறான்

இவன் அறிவு எவ்வளவு மழுங்கிப்போய்விட்டது என்று பாருங்கள். இவன் களி மண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். வண்டியில் கொண்டு வந்து களிமண்ணைக் கொட்டி வைத்திருக்கின்றான். நம் கண் முன்னாலேயே களி மண்ணால் கடவுளை உண்டாக்குகின்றான்.

அச்சு வைத்திருக்கின்றான். இரண்டு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? நான்கு ரூபாய் பிள்ளையார் வேண்டுமா? கடவுளை சைஸ் வாரியாக விற்கிறவன் நம்மூரில்தான் இருக்கின்றான். வேறு எந்த நாட்டிலேயும் கிடையாது.

பிள்ளையாரை மணைக்கட்டையில் அடக்கி வைத்து. அதற்கு ஒரு பேப்பர் குடை வைத்து பெரப்ப பழம், இவை எல்லாம் வைத்து, கொழுக்கட்டையை இவன் செய்து சாப்பிட்டுவிட்டு-பிள்ளையார் சாப்பிட மாட்டார். மூன்றுநாள் களி மண் பிள்ளையாரை வீட்டில் வைத்திருந்து விட்டு, பிறகு கிணற்றிலேயோ, ஆற்றிலேயோ போட்டு விடுவான். அவரவர்கள் எடுத்துப் போட்டு விடுவார்கள். யாருக்கும் பிரச்சினை இல்லை. சில வருடங்களுக்கு முன்பு போலீஸ்காரர்களுக்கு வேலையே கிடையாது. இது சாதாரண பக்தி.

மதவெறி இயக்கங்கள்

மதவெறி இயக்கமாக இருக்கிற ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள், காந்தியைக் கொன்ற கோட்சேவை பயிற்றுவித்த அமைப்புகள், இந்தியாவி லேயே இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் என்று சொன்னால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதைத் தவிர வேறு கிடையாது. இதை யாரும் மறுக்க முடியாது. இந்த மண் பெரியார் மண். தலைகீழ் நின்றாலும் காவிக்கொடியை ஏற்ற முடியாது.

காவிக்கொடி ஏற்றுகிறவன் எல்லாம் அடிக்கடி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்கின்றான். உங்களுக்குத் தெரியும். காஞ்சிபுரத்திலிருந்து ஆரம் பித்து நித்யானந்தா வரை போய் கொண்டிருக்கின் றான். கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஒரு வகையில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின் றார்கள். நாங்கள் ஒரு வகையில் பண்ணுகின்றோம். காஞ்சிபுரத்தில் தேவநாதன் என்று ஒரு அர்ச்சகன். அவன் பெண்களை சந்திக் கத் தேர்ந்தெடுத் திருக்கின்ற இடம் கர்ப்பக்கிரகத் திற்குப் பின்னால். நாங்கள் கூட அவ்வளவு அற்புத மாக கடவுள் இல்லை என்று காட்ட முடியாது.

பெரியார் கருத்தை அவன் இப்படி விளக்கி விட்டான். நாங்கள் பல மணி நேரம் தொண்டை வறள கத்திக்கொண்டி ருக்கின்றோம். அவன் அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் போட்டோவாக எடுத்து, வீடியோவாக எடுத்து ரூ.80 லட்சம் சம்பாதித்து விட் டான் என்று ரிப் போர்ட்டே இருக்கிறது. சி.டி.யை வளைகுடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அவ்வளவு பணம் சம்பாதித்துவிட்டான். பகவான் அப்படியே நிற்கிறார். திருப்பதி ஏழு மலையானுக்குப் போட்ட நாமத்தை தேவநாதன் இவன் இருந்த கோவில் கடவுளுக்குப் போட்டு விட்டான். நகையைக் காணோம், தங்கத்தைக் காணோம். அதைக் காணோம், இதைக் காணோம் என்று சொல்லுகின்றான். அது மட்டுமல்ல; கடவுள் நம்மைக் காப்பாற்றவில்லை. எல்லோருக்கும் தெரிகிறது. இந்தப்போடு போடுகிறவனால் விட முடியவில்லை. தண்ணீர் போடுகிறவனாலே விட முடியவில்லை. சிகரெட் குடிக்கிறவனாலே விட முடியவில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்களே இந்த கடவுள் நம்பிக்கையை விட முடியவில்லை.

அரோகரா என்று சொல்லுகின்றான். திருவண்ணாமலை கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல். திருவண்ணாமலை அகண்ட தீபமாக எரிகிறவர். திருவண்ணாமலையாரிடம் தீவிரவாதி யாராவது போனால் அவர் எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அவர் தீவிரவாதியை நம்பவில்லை. ஏ.கே.47த்தான் கடவுள் நம்புகிறார்.

நமது காவல்துறைதான் கடவுளுக்கும் பாதுகாப்பு கொடுக்கிறது. மனிதன் கடவுளைக் காப்பாற்றுகிறானா? மனிதனைக் காப்பாற்று கிறானா? என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பிள்ளையாரை இங்கு எதற்காக இறக்குமதி பண்ணினான். இந்த நாட்டிலே மதக்கலவரத்தை உண்டாக்க மசூதிப் பக்கம் போய்தான் நாங்கள் மேளம் அடிப்போம் என்று சொல்லுகின்றார்கள். எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. நாங்கள் கோவிலுக்கு முன்னால் கூட்டம் போடுவோம். ஒருசிறு அசம்பாவிதம் நடக்காது.

தந்தை பெரியார் 1954இல் பிள்ளையாரை உடைத்துக்காட்டினார். உலகத்திலேயே அதை ஒரு இயக்கமாக செய்தவர் தந்தை பெரியார்தான்.வேறு இயக்கம் கிடையாது. உச்சநீதிமன்றம் வரையிலே வழக்கு போனது. நாங்கள் தண்டனை பெற்றாலும் இந்த பகுத்தறிவு பிரச்சாரத்தை செய்வோம். அரசியல் சட்டப்பிரிவின்படி அறிவியல் மனப்பான்மையை நாங்கள் வளர்க்கின்றோம். இந்தக் கதையை சொன்னால் அவ்வளவு அசிங்கமானது. விக்னேஸ்வரனை தொழுதால் எந்த கோணலும் வராது. அவ்வளவு பாதுகாப்பு இருக்கும். விக்னம் இல்லாமல் செய்கிறவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு? பிள்ளையாரை கரைக்கிற வரையில் நமது காவல்துறை அதிகாரிகள் தாங்க மாட்டார்களே.

-(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101008/news12.html

No comments:


weather counter Site Meter