மூன்றாவது, பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களும் ஆகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமுகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்பந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது என்னலாம்.
வேண்டுமானால் ஒரு சமயம் தேசத்தின் பேரால் மக்களையும் பிரித்துக்காட்ட வேண்டியதாக ஏதாவது ஏற்பட்டால் ஏற்படலாம். அப்படிக்கு இருந்தாலும் துருக்கியருக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் உள்ள பிரிவுகள் போன்ற பிரிவுகளும் அமெரிக்காவுக்கும் அய்ரோப்பாவுக்கும் உள்ள வித்தியாசம் போன்ற பிரிவுகளும் போல இருக்குமே ஒழிய, எந்தக்காரணத்தைக் கொண்டும் ஒற்றுமைப்பட முடியாததும் ஒரு தேசத்தையோ, ஒரு சமுகத்தையோ அடியோடு கொன்று, ஒரு தேசத்தார் வாழத்துணியும் படியான பிரிவுகளாகவும், மற்றவர்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளாமல் தங்கள் தங்கள் சமுக நன்மையை மாத்திரம் கவனிக்கக் கூடிய பிரிவுகளாகவும், ஒருவருக்கொருவர் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் முதலியவைகளால் வெறுப்புக் கொள்ளும் பிரிவுகளாகவும் பிரிந்திருக்க முடியவே முடியாது என்பது நமது உறுதியாகும்.
கிறிஸ்தவர்களுக்குள் இருந்த போதிலும் மதம் என்கின்ற ஒரு காரணத்தால் ஒன்றுபட்டு உலகத்தில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இந்தியாவின் ஆதிக்கம் முதலிய விஷயங்களில் எதிரிகளாகவே இருந்து இந்தியாவை உறிஞ்சி வருகின்றார்கள் என்பதைத் தினமும் உணருகின்றோம். அது போலவே உலகத்தில் உள்ள எல்லா மகமதியர்களும் தங்கள் மதத்தின் பேராலும், சமுகத்தின் பேராலும் தங்களது நன்மையைக் குறிக்கொள்ளும்போது இந்துக்கள் என்பவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரிடையாய் இருக்க நேர்ந்தாலும் சிறிதும் அபிப்பிராய பேதமில்லாமல் ஒன்று சேருகின்றார்கள்.
அதுபோலவே இந்துக்கள் என்பவர்களும் மதவிஷயங்கள் என்பவைகளில் மகமதியர்கள் கிறிஸ்தவர்கள் என்பவர்களுக்கு எதிராக ஒன்று சேர முடியாதவர்களாயிருந்தாலும்கூட ஒன்று சேர வேண்டும் என்கின்ற உணர்ச் சிகளை எளிதில் அடைவதன் மூலம் எதிரிகளாக கருதத்தக்கவர்களாகி விடுகின்றார்கள்.
இது சரியா? தப்பா? அல்லது இதற்கு ஏதாவது பொருள் உண்டா? என்பவைகள் ஒருபுறமிருந்தாலும் முக்கியமாய் மதத்தின் பலனாய் வேற்றுமை உணர்ச்சிகள் தோன்றியே தீருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. இப்படியெல்லாம் இருந்தாலும் கூட மேல்நாட்டில் உள்ள ஒவ்வொரு மதக்காரர்களும் சமீபகாலமாய் தங்கள் பிடிவாத குணங்களை விட்டு முதலில் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு அம்முயற்சிக்கு எதிரிகளாய் இருப்பவைகளைத் தகர்த்தெறிந்து ஒரே சமுகமாக ஆவதற்கு மிக முனைந்து வருகின்றார்கள். இம் முயற்சிக்கு விரோதமாக மதத்தின் பேராலும் தெய்வத்தின் பேராலும் இருக்கும் தடைகளைக் கூட வெகு சுலபத்தில் தகர்த்தெறியத் துணிந்து வருகின்றார்கள்.
உதாரணமாக இம்முயற்சியில் சிறிதளவானாலும் முதலில் வழிகாட்டிய பெருமை மேல்நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கே உண்டு என்று சொல்ல வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் முதன் முதலாக நிலைமைக்குத் தக்கபடி தங்களைச் சரிப்படுத்தி கொள்ள முன்வந்தவர்கள். உதாரணமாக, அவர்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிளைக்கூட திருத்த முயன்று பழைய ஏற்பாட்டிற்கு விரோதமாய் புதிய ஏற்பாட்டை உண்டாக்கி நடை, உடை முதலியவைகளையும் மாற்றிக் கொண்டார்கள்.
அதுபோலவே, இரண்டாவதாக மகமதியர்களையும் சொல்லலாம். ஏனெனில், அவர்களிலும் இந்துக்கள் என்பவர்களைபோல பிறவியில் உயர்வு தாழ்வு என்பது போன்ற சில கடுமையான பிரிவினை வித்தியாசங்கள் இல்லாவிட்டாலும், வாழ்க்கையில் மகமதியர்களையும்- மதம் என்பது இந்துக்கள் என்பவர்களைப்போலவே அநேக விதங்களில் கட்டுப்படுத்தி வந்திருக்கின்றது என்று சொல்லலாம். உதாரணமாக, நடைஉடை பாவனை முதலாகிய பலவற்றுள் மதங்களின் பேரால் கட்டுப்பட்டுக் கிடந்தாலும், இப்போது தைரியமாய் அக்கட்டுபாடுகளில் சிலவற்றையாவது தளர்த்திவிட ஆரம்பித்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வெகு துரிதமாகவும் தைரியமாகவும் சிலர் மாற்றிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் படிக்கு மாற்றிய மகமதிய வீர அரசர்களான அமீருக்கும் பாஷாவுக்கும் ஆதரவு கொடுக்கவும் முந்துகின்றார்கள்.
மற்றும் வெளிநாடுகளில் அந்தந்த தேச குடிஜனங்கள் பெரும்பாலோர் அத்திருத்தங்களுக்குத் தாராளமாய் ஆதரவளித்துப் பின் பற்றி வருவதில் யாதொரு தடையும் காண முடியவில்லை. ஆனால், புரோகிதக் கூட்டத்தின் தொல்லைகள் மாத்திரம் எந்த மதத்திலும் சிறிதளவாவது இல்லாமலிருக்கும் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அவர்களிலும் சிலர் தம் சுயநலத்திற்கு வலியுறுத்துவதை தவிர வேறு காரணங்கள் சொல்லவோ ஆதாரங்கள் காட்டவோ முடியாதபடி மக்கள் அறிவு பெற்று விட்டார்கள்.
இந்தியாவில் உள்ள மகமதிய சமுகமும் இந்தியர்களுடன் பழகுவதால் கமால் பாட்சாவுக்கும், அமீருக்கும் விரோதமாக அதிருப்தியும் ஆத்திரமும் காட்டுவதன் மூலம் ஒரு புறத்தில் தங்கள் மதப்பற்றை காட்டிக் கொண்டாலும், மற்றொரு புறம் தங்கள் சமுக நன்மையை உத்தேசித்து அவர்களுக்கு ஆதரவளித்தே வருகின்றார்கள். உதாரணமாக அமீரையும் அவரது மனைவியரையும் இந்திய மகமதியர்களில் சிலர் குறைகூறி இருந்தாலும், அமீரினது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் அவருக்கு இந்தியாவில் உள்ள மவுலானாக்கள் முதல் கொண்டு அனுதாபப்படுவதுடன் ஆதரவளிக்கவும் முந்துகின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதன் காரணம் என்னவென்று பார்ப்போமானால், கூடுமானவரை அந்த சமுக நன்மை சம்பந்தமான கவலையும், ஒற்றுமையுமேயாகும். ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்குள் அம்மாதிரியான சமுக ஒற்றுமை இல்லாமல் எவ்வித திருத்தங்களுக்கும் எதிர்ப்புகள் இருந்து வருவதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால், இதிலுள்ள மதப்பிரிவுகளோடு அவைகளிலுள்ள உட்பிரிவுகளும், ஜாதிப்பிரிவுகளும், அவற்றில் உள்ள உயர்வு தாழ்வுகளும், அதனால் சிலருக்கு ஏற்படும் நிரந்தர நலமுமே காரணமாகும்.
இந்த உள்பிரிவுகளும் ஜாதிப் பிரிவுகளும் நிலைத்து குருட்டுப் பிடிவாதமாய் இருப்பதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போமானால், மற்ற மதங்களை விட இந்துக்கள் இந்துமதம் என்பவற்றில் அதிகமான நிர்ப்பந்தங்கள் இருந்து வருகின்றன என்பதேயாகும். அவையாவன: முதலாவது, இந்துக்களுடைய மதக்கொள்கைகளின் படி மக்கள் படிக்கக்கூடாது. ஆனால், ஒரு சிறு வகுப்பினர் - பார்ப்பனர்கள் என்பவர்கள் மாத்திரம்தான் படிக்க உரிமையுள்ளவர்கள். மத ஆதாரம் என்பதைப் பற்றி இந்து மதத்தைச் சேர்ந்த மக்களே தெரிந்து கொள்ளக்கூடாது.
மத சம்பந்தமான எந்த விஷயங்களிலும் பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று ஏற்பாடு செய்து கொண்ட ஒரு சிறு வகுப்பார் அதாவது 100-க்கு 2 பேர்களான பார்ப்பனர்கள் - தவிர மற்றவர்களுக்குச் சொந்த அறிவை உபயோகிக்கவோ, ஆராய்ச்சி செய்யவோ, நன்மை தீமை எவை? அவசியமானவை எவை? அவசியமில்லாதவை எவை? என்று தெரியவோ சற்றும் உரிமை கிடையாது.
படிப்பு, மத சம்பந்தம் ஆகியவைகளில் இம்மாதிரியான நிர்ப்பந்தம் இருப்பதோடு மாத்திர மல்லாமல், மனித வாழ்க்கையிலும் மக்களைத் தனித்தனி ஜாதிகளாகப் பிரித்த தோடல்லாமல், அவற்றில் உயர்வு தாழ்வும் ஒருவரை ஒருவர் தொடாமல் நெருங்காமல், காணமுடியாமல் செய்வித்து ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு பிறவித் தொழிலையும் ஏற்படுத்தி அவைகளையேதான் அவ்வகுப்பைச் சேர்ந்தவன் செய்து தீரவேண்டும் என்றும், அந்தப்படி அரசன் சட்டம், தண்டனை, கண்டனம் ஆகியவைகள் மூலம் செய்விக்க வேண்டும் என்றும் அரசர்களாலும் நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுவிட்டது.
ஒரு சிறு கூட்டத்தார் தங்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி, தங்கள் வாழ்வுக்குத் தேவையானபடி நிரந்தரமாய் பொருள் வருவாய் இருக்கத் தக்கதாக பதினாயிரக்கணக்கான கடவுள்களை சிருஷ்டித்து, ஆயிரக் கணக்கான சடங்குகளையும் சிருஷ்டித்து அவற்றிற்கு தினப்படி பூஜை, உற்சவம், கல்யாணம், அவைகளின் திருப்திக்கு என்று அச்சிறு கூட்டத்தாருக்கு வேண்டியவைகளை யெல்லாம் அவசியமாக்கி, அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அச்சிறு கூட்டத்தாரின் திருப்தியே கடவுள் திருப்தி என்றும் மற்ற மக்கள் பிறந்ததே, அச்சிறு கூட்டத்திற்கு தொண்டு செய்வதற்கென்றும் பலவாறாகக் கற்பித்து, அக்கட்டுப் பாடுகளிலிருந்து யாராவது விலகவோ அல்லது அக்கட்டுப்பாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ புறப்பட்டால் அவ்வாராய்ச்சி செய்வது மகாபாதகமான தென்றும், நாஸ்திகமென்றும் அப்படிப்பட்ட நாஸ்திகனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் மற்றும் இது போன்ற பல நிர்பந்தங்களையும் உண்டாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது மாத்திரமல்லாமல், யாராவது துணிந்து இக்கட்டுப்பாட்டையும், கொடுமையையும் உடைக்கப் புறப்பட்டால் அவர்களை அசுரர்கள், ராட்சதர்கள், துஷ்டர்கள், தேவர்களுக்கு விரோதி, கடவுளுக்கு விரோதி, உலகத்திற்கு ஆபத்தை விளைவிப்பவன் என்பதான விஷமப் பிரச்சாரத்தால் அவனை அடியோடு அழித்து வந்திருக்கின்றார்கள். இன்றையதினமும் மேல் கண்ட கொள்கைகளே மதக் கொள்கைகளாகவும், அவைகளைக் கொண்ட புஸ்தகங்களே மத ஆதாரங்களாகவும், அவைகளை நிலைநிறுத்தச் செய்வதே சீர்திருத்தங்களாகவும் இருந்து வருகின்றன.
உதாரணமாக, இது சமயம் நாட்டில் ஏற்பட்ட ஒரு புது உணர்ச்சியும் கிளர்ச்சியுமானது மக்களை எவ்வளவோ தூரம் நடை, உடை, ஆச்சாரம், போக போக்கியம் முதலியவைகளில் பழைய கொள்கைகளையும், பழைய அனுபவங்களையும் மாற்றிக் கொள்ள அவசியமும் இடமும் ஏற்படுத்திக் கொடுத்து, அனுபவத்திலும் தலை சிறந்து விளங்கிக் கொண்டிருந்தும், தனது சொந்த சுயநலம் மாத்திரம் எவ்வளவு அறிவீனமும், ஆணவமும், இழிவும் பொருந்தியதாக இருந்த போதிலும் அதிலிருந்து சற்றாவது மாறுபடுவதோ தளர்த்தப்படுவதோ என்பது சிறிதும் முடியாததாகவே இருக்கின்றது.
உதாரணமாக, மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதி வித்தியாசத்தை நமது இந்திய நாட்டில் உள்ள அறிவாளிகள், பிரமுகர்கள், தலைவர்கள் பெரியோர்கள் இந்திய நாட்டில் உள்ள பொது இயக்கங்கள் சமய தத்துவங்கள் என்பவைகள் எல்லாம் அநேகமாய் ஒரே முகமாக விலக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும், அந்தப்படி ஒழிக்காவிட்டால் நாட்டிற்கு சுதந்திரமில்லை, தேசத்திற்கு சுயமரியாதை இல்லை சமயத்திற்கு மதிப்பு இல்லை என்று பலவாறாக அபிப்பிராயம் கொடுத்தும் தர்மத்தின் பேராலும் மதத்தின் பேராலும் கூட்டங்கள் கூடித் தங்களுக்கும் தங்கள் ஆதிக்கத்திற்கும் தகுந்தபடியே தீர்மானங்கள் செய்து வருகின்றார்கள்.
உதாரணமாக, சமீபத்தில் பல இடங்களில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி வருணாசிரமத்தை உறுதிப்படுத்தி பார்ப்பனர் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்கள் வைப்பாட்டி மக்கள் பார்ப்பன சேவைக்காக கடவுளால் உண்டாக்கப்பட்டவர்கள் என்கின்ற கருத்துக்களடங்கிய சூத்திரர்கள் என்பதை நிலை நிறுத்த முயற்சித்திருப்பதும் சைவர்கள் என்பவர்கள் ஒன்று கூடி தீண்டாமை என்பதை நிலை நிறுத்தத்தக்க வண்ணமாக தீண்டாதவர்கள் என்பவர்களுக்கு தனிக் கோவில் கட்டிக் கொடுக்க என்று தீர்மானித்திருப்பதும் போதுமான உதாரணமாகும்.
எனவே, இந்த மாதிரி வருணாசிரம தர்மங்களும், இந்தமாதிரி சைவர்களும் நமது நாட்டில் உள்ளவரை எந்த விதத்தில் பார்ப்பனியம் ஒழிய முடியும்? எந்த விதத்தில் சமத்துவம் உண்டாகும்?
எந்தவிதத்தில் மக்கள் ஒற்றுமைப்பட்டு மானத்துடன் வாழ முடியும் என்பதை யோசித்தால் இந்தியாவில் எப்படி பார்ப்பனியம் நிலைத்து எந்தெந்த வழியில் நாட்டைப் பாழாக்கி வருகின்றது என்பது புலனாகும்.
எனவே, இந்தியாவில் பார்ப்பனியமற்ற மதமே இல்லை என்றும், இந்துமதமென்னும் தலைப்பின் கீழ் எந்தமதமானாலும், சமயமானாலும் அகச் சமயமானாலும் அவற்றை எல்லாம் அடியோடு அழித்தாலல்லாது மக்கள் கடவுள் நிலை என்பதையோ அன்பு நிலை என்பதையோ ஒருக்காலமும் அடைய முடியாததென்றே சொல்லுவோம்.
- குடிஅரசு துணைத் தலையங்கம் - 14.4.1929
http://viduthalai.periyar.org.in/20101017/news05.html
1 comment:
CLICK AND READ THE LINKS.
1. குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்
2. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்
3. இந்து மதம் எங்கே போகிறது?
Post a Comment