Pages

Search This Blog

Thursday, October 7, 2010

சாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குகிறதே என்ன காரணம்?-கி.வீரமணி உரை

சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற கட்சி இந்தியாவிலே திராவிடர் கழகத்தைப் போல் இன்னொரு கட்சியைப் பார்க்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

டீக்கு மட்டும் ஜாதி; சாராயத்தில் இல்லையே!

ஜாதி என்பது இரட்டை குவளை முறையில் டீக்கு மட்டும் இருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சாத இடமில்லை. சாராயம் குடிக்கின்ற இடத்திற்குப் போகிறான். அங்கே என்ன வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் பார்க்கின்றானா? அங்கே ஏதாவது ஜாதியைப் பார்க்கின்றானா?

அந்த இடத்தில்தான் சமரச சன்மார்க்கம் நடக்கிறது. சாராயம் குடிக்க வருகிறவர்கள் என்ன ஜாதி? சாராயம் காய்ச்சுகிறவர் என்ன ஜாதி? என்பது தெரியாது.

நான் ஜாதியைக் குறிப்பிடுகிறேனே என்று தவறாக எண்ணக்கூடாது. சாராயம் எல்லோரும் காய்ச்சுகிறார்கள். அது குடிசைத் தொழில் மாதிரி சாராயம் குடிக்கிற இடத்தில் சகோதரத்தும் தானே வந்துவிடும். சாராயத்தை ஒரு கிளாசில் ஊற்றிக் கொடுக்கிறார்கள். முதலில் அரைகிளாஸ் உள்ளே இறங்குகிறவரையிலே சாதாரணமாக குடிக்கிறான். முழு கிளாஸ் சாராயத்தைக் குடித்தவுடனே இன்னொருத்தனுக்கு ஊற்றிக்கொடுப்பதற்கு முன்னாலே-இவன் பொறுக்க மாட்டேங்கிறானே, எனக்குக் கொடு என்று இழுக்கிறான்.

பிரதர் என்று சொல்லுகின்றான்

ஒரு கிளாஸ் சாராயம் உள்ளே போனவுடனே பிரதர் என்று சொல்லுகின்றான். அதுவும் இங்கிலீஷில் சொல்லுகிறான்-சாதாரணமல்ல. அங்கே ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி கிளாஸ் வைத்திருக்கின்றானா? சாராயக் கடையிலே ஒழிந்த ஜாதி டீக்கடையிலே தலைதூக்குகிறதே என்ன காரணம்? எவ்வளவு விழிப்பாக இருக்க வேண்டியிருக்கிறது?

இந்த மாதிரி ஓர் அமைப்பே கிடையாது

எனவே, சமுதாய மாற்றத்திற்காக இன்னமும் உழைக்க வேண்டியிருக்கிறது. மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இடையறாத பிரச்சாரம் இந்த மாதிரி ஓர் அமைப்பு இந்தியாவில் எங்கேயுமே கிடையாது. முன்னாலே பிரச்சாரம் பண்ணிக் கொண்டு போவதற்கே ஓர் இயக்கம்; பின்னாலே நடைமுறையிலே அதை அரசியல் ஆக்குவதற்கு இன்னொரு கட்சி. சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் பாலம் அமைக்கக்கூடிய சூழல்கள் இவை எல்லாமே இருக்கின்றன. வகுப்புவாரி உரிமையைப் பற்றி நம்முடைய தோழர்கள் நிறைய சொன்னார்கள். வகுப்பு வாரி உரிமையைக் கொண்டு வந்த அமைச்சர் முத்தையா அவர்களுடைய பெயரை உங்களுடைய குழந்தை களுக்குச் சூட்டுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்.

ஒரு பார்ப்பனர் எம்.எல்.ஏ.,

ஒரு பார்ப்பன நண்பர் ஒவ்வொரு கட்சியிலேயும் இருந்துவிட்டு பிறகு எந்தக் கட்சிக்குப் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கூட. அப்படிப்பட்ட ஒரு பார்ப்பனர்-அவர் சொன்னார், நாங்கள் பிராமணர் சங்கம் எல்லாம் வைத்திருக்கின்றோம். உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னார். மனிதாபி மான அடிப்படையில் நாம் எல்லோரையும் சந்திக்கக் கூடியவர்கள். அவர் வந்து சொன்னார், இல்லிங்க, எங்களுக்கும் நீங்கள் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுங்கள் என்று சொன்னார்.

அவர் சொன்ன செய்தி

நான் சொன்னேன், ரொம்ப மகிழ்ச்சிங்க. கலைஞர் அவர்களிடம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லிவிட்டால் இட ஒதுக்கீடு கொடுத்துவிடுவார் என்று சொன்னார். எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் பிராமணர்களை ஒன்று சேர்த்து ஓர் அமைப்பையே வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இவர் இப்படி சொன்ன வுடனே நான் கேட்டேன். உங்களுக்கு சில வரலாற்று விசயம் சொல்ல வேண்டும். பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம்

வகுப்புவாரி உரிமை என்பதை நீதிக்கட்சி ஆட்சியில் முத்தையா முதலியார் கொண்டு வந்தார். 1928இல் வகுப்புவாரி உரிமை உத்தரவு கொடுத் தார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை விட பார்ப்பனர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்கூட கிடையாது. ஆனால் 16 சதவிகிதம் பார்ப்பனர்களுக்கு ஒதுக் கினார்கள். இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் இருந்த பார்ப்பனர்களுக்கு 16 சதவிகிதம் ஒதுக்கினார்கள். எதிலே?. கம்யூனல் ஜி.ஓ. உத்தரவில்.

ஆனால், நூற்றுக்கு நூறு அனுபவித்த காரணத்தினாலே அவர்கள் ஒரு சதவிகிதத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. அது அவர்களுடைய ஏக போக உடைமைதானே!

சென்னைக்குச் செல்ல மாயவரத்தில் இருந்து வண்டி புறப்பட்டது என்றால், ரயிலில் ஏறி படுத்துக்கொள்வான். வைத்தீசுவரன் கோவில் தாண்டி சீர்காழிக்கு வருகிறபொழுது நாம் இரண்டு பேர் வண்டி ஏறுகிறோம். ரயிலில் உட்கார வேண்டிய இடத்தில் படுத்திருக்கிறவனைப் பார்த்து அய்யா கொஞ்சம் எழுந்துஉட்காருகிறீர்களா? இடம் கொடுக்கிறீர்களா? என்று கேட்டால், இவன் அப்படியே நிமிர்ந்து பார்ப்பான். ஆள் என்னை மாதிரி ஒல்லியாக இருக்கிறவனாக இருந்தால், ஏய்யா, உனக்கு வேறு வேலையில்லை அடுத்த கம்ப்பார்ட்மென்ட்டுக்குப் போய் பாரய்யா. இங்கே வந்து ஏன் எங்ககிட்டே கேட்கிறீர்கள். பக்கத்து இடம் காலியாக இருக்கிறதே அங்கே போய்யா என்று சொல்லுவான். ஆள் நன்றாக மோட்டாவாக இருந்தால், ஏங்க, அவசரப் படுகிறீர்கள்? கொஞ்சம் நிதானமாக இரு என்று சொல்லுவான். அது மாதிரி காலம் காலமாக கொடுமையை அனுபவித்துவிட்டான்

மனுவே போடாமல் வழக்கு

மெடிக்கல் காலேஜுக்கு மனுவே போடாமல் செண்பகம்துரைராஜன் என்பவர் வழக்குப் போட்டார். கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று உயர்நீதிமன்றத்திலே தீர்ப்பு வாங்கி, உச்சநீதிமன்றத்திலே அதை உறுதி செய்யப்பட்ட நிலையிலேதான் தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். திராவிடர் இயக்கம் போராடியது. சமூக நீதிக்கொடி ஏற்றப்பட்டது.

இட ஒதுக்கீடு யார் கேட்க வேண்டும்?

இந்திய அரசியல் சட்டம் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய போராட்டத்தினால் முதன் முறையாகத் திருத்தப்பட்டது என்பதை நாடாளு மன்றத்திலே அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் பதிவு செய்தார்கள். அன்றைய மத்திய சட்ட அமைச்சர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துதான் மாற்றம் ஏற்படுத்தினார்கள்.

இந்த செய்திகளை எல்லாம் அந்தப் பார்ப்பன நண்பருக்குச் சொன்னேன். 16 சதவிகிதம் வாங்கியவர்கள் இப்பொழுது 7 சதவிகிதம் வேண்டும் என்று வந்திருக்கின்றீர்களே, தாராள மாக உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை.

ஏனென்றால், பொதுவாக நம்முடைய நாட்டில் தலைகீழாக நடக்கிறது. இடஒதுக்கீடு யார் கேட்க வேண்டும் என்றால், யார் சிறுபான்மையினரோ அவர்கள்தான் இடஒதுக்கீடு கேட்க வேண்டும்.

நியாயப்படி பார்த்தால் பெரும்பான்மையோர் இடஒதுக்கீடு கேட்பது நம்முடைய நாட்டில்தான். இடமே நம்முடையது. நாம் இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டு, எனக்குக் கொஞ்சம் இடம்விடு, எனக்கு கொஞ்சம்இடம்விடு என்று சொல்வது சரியா? நம்முடைய வீட்டில் அவன் குடிபுகுந்து கொண்டான்.

இப்பொழுது நாம், அய்யா எங்களை கொல்லைப்புறத்திலாவது இருக்க வையுங்கள் அல்லது தாழ்வாரத்திலாவது இருக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறோம்.

வீட்டை நாம் காக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம் இன்னும் சில பேர் வீடு நமக்கு வந்ததா? இல்லையா? என்று கவலைப்படாமல் எனக்கு முன்னால்தான் கொடுத்தது என்று சொல்லுகின்றார்.

மண்டல் கமிஷன் அறிக்கை

மண்டல் கமிஷன் வந்தபொழுது என்ன சொன்னார்கள்? பார்ப்பனர்கள் எப்படியிருப் பார்கள் என்பதற்கு உதாரணம்-மண்டல் கமிஷன் அறிக்கையையே வெளியிடவில்லை; வெளி வரவில்லை; அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது? எத்தனை சதவிகிதம் என்பது தெரியவில்லை; இடஒதுக்கீடு செய்தியே வெளிவரவில்லை.

வெளியே வராத ஒரு சூழலில் இந்து பத்திரிகை ஒரு செய்தியை முக்கியத்துவம் கொடுத்து அவசரமாக வெளியிட்டது. மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்று விடுதலையில் எழுதுவோம்.

பழைய விடுதலை ஆசிரியர் குருசாமிதான் அந்தப் பெயரை வைத்தார். இந்து பத்திரிகையில் எழுதினான்.Burry the Mandal Report என்று. இந்து பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.

பரிந்துரையில் என்ன என்பதே தெரியாது

மண்டல் கமிஷன் அறிக்கையில் என்ன பரிந்துரை இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இதைப் படித்துவிட்டு மண்டல் அவர்கள் தொலைபேசி மூலம் என்னிடம் பேசினார். இந்தமாதிரி எழுதியிருக்கின்றார்கள். உங்களுடைய சமுதாய அமைப்பான திராவிடர் கழகம்தான் போராட முடியும்.

நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். அன்றைக்கு திருச்சியில் மத்திய கமிட்டி கூடுகிறது. நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.Burry the Mandal Report என்று எழுதியிருக்கின்றார்கள். அதைக் கண்டிக்கின்றோம் என்று சொன்னோம்.

உடனே இந்து பத்திரிகை செய்தியாளர் கமிட்டிக்கூட்டம் முடிந்த பிறகு என்னிடம் கேட்டார், சார், உங்க ளுக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரி யுமா? ஏன் கண்டிக் கிறீர்கள் என்று கேட் டார். அதே கேள்வியை நான் திருப்பி உங்க ளுக்குப் பதிலாகச் சொல் லுகின்றேன்.

புதையுங்கள் என்று எழுதியது இந்து

அதிலே என்ன இருக்கிறது என்று தெரியாமல் இந்து பத்திரிகை மண்டல் ரிப்போர்ட்டை புதையுங்கள் என்று எழுதுகிறீர்களே, அது நியாயமா? என்று கேட்டேன். ஒன்றே ஒன்று இப்பொழுது தெரிந்துபோய்விட்டது.

நீங்கள் புதையுங்கள் என்று எழுதினால், மண்டல் கமிஷன் அறிக்கை எங்களுக்கு சாதகமானது என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், நான் விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போகும் பொழுதே அய்யா அவர்களிடம் நான் கேட்டேன்.

பெரியார் அவர்களிடத்திலே, அய்யா, நான் வக்கீலாக இருக்கிறேன். சட்டம் படித்தேன். நான் இயக்கத்தில் இருந்தால்கூட விடுதலை நாளேடு கொள்கை நாளேடு-இதற்கு தலையங்கம் எழுதுவது சாதாரண விசயமல்ல.

கொள்கைக்கு மாறாக எழுத முடியாது. இது என்னுடைய கருத்து இல்லை என்று நீங்கள் ஏதாவது அறிக்கை கொடுத்து விட்டால் நான் என்னுடைய பொறுப்பைத் தொடர முடியாது.

உடனே நடைமுறைப்படுத்துங்கள் மண்டல் கமிஷனை

ஆகவே, நான் எப்படி எழுத வேண்டும்? எனக்குக் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள். எனக்குத் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டுவிட்டுத்தான் நான் விடுதலை அலுவலகத்தில் ஆசிரியர் பணியைத் தொடங்க ஆரம்பித்தேன்.

அய்யா தெளிவோடு சொன்னார்

அய்யா அவர்கள் எல்லாவற்றிலும் ரொம்பத் தெளிவாகச் சொல்லக்கூடிய தலைவர். பட்டென்று, பட்டறிவோடு பேசக்கூடியவர். என்னப்பா, நீதான் இங்கிலீஷ் படித்திருக்கிறாயே. அதோடு சட்டம் வேறு படித்திருக்கிறீர்கள்.இந்து பத்திரிகையும்தான் படிக்கிறீர்கள். இந்து பத்திரிகையைப் பாருங்கள். தலையங்கம் என்ன எழுதியிருக்கிறான் என்று பாருங்கள். அதற்கு நேர் எதிராக எழுது. அதுதான் நமது கொள்கை (கைதட்டல்).

இப்படி ரொம்பத் தெளிவாகச் சொல்லி விட்டார். இதைவிட கலங்கரை விளக்கம் நமக்கு வேறு என்ன இருக்கிறது? அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

மண்டல் ரிப்போர்ட்டை (Burry the mandal report) புதையுங்கள் என்று இந்து பத்திரிகை எழுதிய வுடனே, நான் உடனே ஆங்கிலத்தில் ழரசசல வாந ஆயனேயட சுநயீடிசவ என்று சொன்னேன். மண்டல் கமிஷன் அறிக்கையை உடனே செயல்படுத்து என்று எங்கே பார்த்தாலும் சொன்னோம்.

நான் இளைஞர்கள் மத்தியிலே பேசும்பொழுது கூட வேடிக்கையாகச் சொன்னேன். இளைஞர்களே! உங்கள் காதலியிடம் பேசும்பொழுது கூட முதலில் மண்டல் கமிசனைப் பற்றி பேசிவிட்டு அப்புறம் உங்கள் காதலைப் பற்றிப் பேசுங்கள் என்று சொன்னேன்.

இன்றைக்கு மண்டல் கமிஷன் எவ்வளவு பெரிய வெற்றியாக வந்திருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எனவே எங்களைப் பொறுத்த வரையிலே நாங்கள் சமுதாயப் பணியை செய்து கொண்டிருக்கக் கூடியவர்கள்.

அறிவியல் கருவி வந்தால் மற்ற நாடுகளில் மூடநம்பிக்கை போகும். ஆனால், நம்முடைய நாட்டிலே அறிவியல் கருவி வந்தால் மூடநம்பிக்கை பெருகும். காரணம் என்ன? இந்த அறிவியல் கருவியை வைத்துக்கொண்டுதான் மூட நம்பிக் கையை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.

கம்ப்யூட்டரில் பிள்ளையார் வரைகிறான். கடவுளைப் பார்க்க வேண்டுமா? மூன்று கொடுங்கள் என்று செல்ஃபோனால் கேட்கிறான்.

-(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101007/news15.html

1 comment:

Unknown said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்


weather counter Site Meter