தமிழ்நாட்டுக்குத் திறந்துவிடப்படவேண்டிய காவிரி நீர் வழக்கம்போல கருநாடகாவில் பிரச்சினையாக்கப் பட்டு விட்டது. 205 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு என்பது குறைந்தபட்சம் என்றாலும், அதனை அளிப்பதில்கூட வம்படியை வழக்கம்போலவே தொடங்கி விட்டது.
இதுவரை 84 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழ் நாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. 2.8 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் சாகுபடிக்கு நாள்தோறும் 1.5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால், கருநாடகம் அளித்து வருவதோ வெறும் ஒரு டி.எம்.சி.தான். நவம்பர் மாதம்வரை தண்ணீர் தேவைப்படும்.
முறைப்படி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கருநாடக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் எஸ். ராமசுந்தரமும், தமிழக அரசின் டில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரனும் செவ்வாயன்று பெங்களூரு சென்றனர்.
இதற்கிடையே கருநாடக மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூட்டிக் கலந்து ஆலோசனை நடத்தினார். வழக்கம்போலவே, கட்சி வேறுபாடின்றி தமிழ்நாட்டுக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும் தண்ணீர் தந்து விடக் கூடாது என்பதிலே குறியாக இருந்து சுருதி பேதம் இல்லாத வகையில் குழுக் கானம் பாடியுள்ளனர்.
இந்திய தேசியம் பேசும் காங்கிரசும், இதில் விதிவிலக்கு இல்லை. காஷ்மீர்பற்றி ஏதாவது மாறுபட்ட ஒரு கருத்தினைச் சொன்னால், ஆபத்து, ஆபத்து, தேசியத்துக்குப் பேராபத்து! என்று கூச்சல் போடும் இந்தக் கட்சிகள்தான், தேசியத்துக்கு உலை வைக்கும் வகையில் நதிநீர் பிரச்சினையில் நடந்துகொள்கின்றன.
தண்ணீர் என்பது ஒரு ஜீவாதாரப் பிரச்சினை யாகும். பொதுக் கண்ணோட்டத்தோடு அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வளவுக்கும் கருநாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அத்தனையும் முழு அளவு நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஒற்றுமையையும், மனிதநேயத்தையும் காட்ட வேண்டிய இந்த ஜீவாதாரப் பிரச்சினையில், இப்படி முரண்டு பிடிப்பவர்கள்தானே இந்தியத் தேசியத்திற் கான முதல் எதிரிகள்?
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும் சரி, உச்சநீதிமன்றமும் சரி, சரியாக நடக்கின்றன என்று எண்ணுவதற்கும் இடம் இல்லை. நடுவர் ஆணையம் பரிந்துரைத்து, உச்சநீதிமன்றம் உறுதி செய்து ஆணையிட்டதையே கருநாடக மாநில அரசு உதாசீனம் செய்கிறது என்றால், அதன் காதைத் திருகிச் செயல்பட வைப்பது மத்திய அரசு - மற்றும் உச்சநீதிமன்றத்தின் அடிப்படைக் கடமையல்லவா?
நீதிமன்றத்திற்கு ஏன் இதில் தள்ளாட்டம்? ஏற்கெனவே இதே உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி விற்பன்னர் குழு அமைக்கப்பட்டு, அது அறிக்கையை கொடுத்துவிட்ட நிலையில், மறுபடியும் ஆய்வுக்குழு எதற்கு? தனது ஆணையை தானே மறுக்கும் விசித்திரம் அல்லவா! இது வீண்காலம் கடத்தும் விபரீதப் போக்கு அல்லவா? பல லட்சம் ஏக்கர் விவசாயம் - பல லட்சம் விவசாயிகளின் வேலை வாய்ப்பு - பல கோடி மக்களின் உணவுப் பிரச்சினை என்பதெல் லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஒரு பிரச்சினையில் இப்படியா ஒரு அரசு நடந்துகொள்வது?
நடுவண் அரசாக நடந்துகொள்ளவேண்டிய நடுவண் அரசு அரசியல் பார்வையோடு நமக்கு ஏன் வீண்வம்பு! என்ற நிலையில் சற்றும் பொறுப்புணர்ச்சி இல்லாமல் நடந்துகொள்ளலாமா?
தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இதில் உணர்ச்சிவயப்படாமல், வீண் வார்த்தைகளைக் கொட்டாமல் முறைப்படி பிரதமரிடம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சரிடமும் பிரதிநிதி களை அனுப்பியுள்ளார்.
இதற்குமேலும் ஒரு முதலமைச்சர் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? வீதியில் இறங்கிப் போராடவேண்டுமா? அதற்கும் தயாராக இருக்கக் கூடியவர்தான் என்றாலும், உணர்ச்சிமிகுந்த இந்தப் பிரச்சினையை இலாவகமாகக் கையாள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாகத்தான் அடக்கிவாசிக்கின்றார்.
செய்தியாளர்கள் குடைந்து குடைந்து கேட்கும் போதுகூட ஏடுகளில் வெளிவந்துள்ள செய்தியை வைத்துக்கொண்டு, அவசரப்பட்டு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருக்கிறாரே! சட்டப்படி செயல்படுவோம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்தப் பண்பாட்டைப் பலகீனமாக எடுத்துக்கொள் ளக் கூடாது. இதனை அரசியல் தளத்திற்கு இழுத்துச் செல்ல இடம் அளிக்கக் கூடாது.
நியாயப்படியும், சட்டப்படியும் கருநாடக மாநில அரசு நடந்தகொள்ளத் தவறும் பட்சத்தில், தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடவும் தயங்கமாட்டார்கள்.
யாருக்கோ வந்த விருந்து என்று மத்திய அரசும், காங்கிரசும் நடந்துகொண்டால், ஏதோ ஒரு வகையில் மக்கள் தங்கள் சினத்தைக் காட்டத்தான் செய்வார்கள்.
கரணம் தப்பினால் மரணம் என்கிற இந்தப் பிரச்சினையில், மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு மத்திய அரசு நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளது என்று வலியறுத்துகிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101029/news06.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment