Pages

Search This Blog

Thursday, October 28, 2010

முதல்வரின் முக்கிய கவனத்துக்கு - ஒருங்குறி (யுனிகோட்) என்ற அமைப்புக்குள் பார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல்! ஊடுருவல்!!

யுனிகோட் (Unicode) எனப்படும் ஒருங்குறி முறையென்பது, உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கணினி எழுத்து குறியீட்டு முறையாகும். இம்முறையில் ஒவ்வொரு மொழிக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய கணினி, இணைய யுகத்தில் இத்தகைய ஒருங் கிணைப்பின் அவசியத்தை உணர்ந்து முக்கியமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் இணையதளங்கள் உள்பட அனைவரும் இக்குறியீட்டு முறையை ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் தனியாக எந்த ஒரு புதிய தரவிறக்கமும் (Download) இன்றி சீனம் முதல் அரேபியம் வரை எந்தவொரு மொழி எழுத்தையும் யாரும் படிக்கலாம்; பயன்படுத்தலாம்.

தமிழ் ஒருங்குறியின் பயன்பாடு
கணினித் தமிழ் வளர்ந்த தொடக்க காலத்தில் ஆளுக்கு ஒரு எழுத்துரு, குறியீட்டு முறை என்று சிக்கல் இருந்தது. இதனால் ஒருவர் உருவாக்கிய கோப்பை (File) வேறொருவர் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு வேண்டும். இணையம் வளர்ந்த சூழலிலும் இது பெரும் இடராகவே இருந்தது.

ஆனால் ஒருங்குறியின் வரவினால் இணையத்தில் இருந்த இடர்ப்பாடு களையப்பட்டது. இதனால் தமிழ் இணைய தளங்கள் பெருகியதோடு, உலகம் முழுக்க தமிழர்கள் ஒரே குறியீட்டு முறையைப் பயன்படுத்தி, எண்ணற்ற படைப்புகளையும், தகவல்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளனர். இன்றைய தலைமுறையே கணினியைப் பெருமளவில் பயன்படுத்துகிறது என்றால், வளரும் தலைமுறை முழுக்க கணினியை அடிப்படையாகக் கொண்டே மொழியைக் கற்கும் சூழல் வரும்.

ஏற்கெனவே இத்தகைய உலகளாவிய ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்துகளுக்கு 128 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. அந்தக் குறுகிய அளவிற்குள்ளும் அனைத்துத் தமிழ் எழுத்துகளையும் ஒருவாறாக உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

அதை அதிகப்படுத்தினால் அனைத்துத் தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ் கணினி வல்லுநர்கள் யுனிகோட் சேர்த்தியம் (Unicode Consortium) அமைப்பிடம் முறையிட்டு வருகின்றனர்.

பார்ப்பனர் சதி!
இந்நிலையில் கடந்த 2010 ஜூலை 10ஆம் நாள், சிறீரமண சர்மா என்ற பார்ப்பனர் யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு ஒரு பரிந்துரையை முன்வைத்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்துகளுக்கான இடத்தை அதிகப்படுத்தி அதில் 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
கிரந்தம் என்பது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுத தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறையாகும். பல்லவர் காலத்திலும், பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்திலும் சமஸ்கிருதத்திற்கான தேவநாகரி தவிர்த்த மற்றொரு லிபியாக கிரந்தத்தைப் பயன்படுத்தி வந்தனர். தமிழின் தனித்தன்மையை ஒழிக்க ஆரியர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள்தான் மணிப்பிரவாள நடையில் எழுதியதும் கிரந்த எழுத்துகளை பிரபலப்படுத்தியதும் ஆகும்!

தமிழும் - சமஸ்கிருதமும் ஒன்றல்ல!
இவையெல்லாம் காலப்போக்கில் கழிந்து, இன்றும் தமிழ் தமிழாகவே நிலைத்து நிற்கிறது. எக்காலத்திலும் தமிழ் வடமொழியின் உள்ளீடுகளை ஏற்க முடியாது. காரணம் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டின் எழுத்து, ஒலிப்பு முறை, மொழிப் பகுப்பு ஆகியவை எப்போதும் ஒன்றுபோல் இருக்க முடியாது.

இன்றும் புழக்கத்தில் இருக்கும், ஜ, ஷ, ஹ, ஸ ஸ்ரீ ஆகிய கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளிலும், யுனிகோட் முறையிலும் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. ஆனால் சிறீரமணசர்மா எனும் இந்தப் பார்ப்பனர் முன்வைத்துள்ள 26 கிரந்த எழுத்துகளை எந்தத் தமிழனும் படித்திருக்கவோ, பயன்படுத்தியிருக்கவோ முடியாது. காரணம் அடிவயிற்றிலிருந்து எழுப்பும் g, gh, kh, chh, jh உள்ளிட்ட ஒலிகளை எக்காலத்திலும் தமிழர்கள் பயன்படுத்தியதே கிடையாது.

பச்சையான ஊடுருவல்!
சர்மாவே தனது முன்வைப்பில் எழுதியிருப்பதைப் போல சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எழுத்துகள் தானாம் அந்த 26 கிரந்த எழுத்துகளும்!

யுனிகோட் குறியீட்டு முறையில் சமஸ்கிருதத்தின் தேவநாகரி எழுத்துக்கு முன்பே இடம் ஒதுக்கப்பட்டிருக் கிறது. அதில் கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதானே இந்த எழுத்துகளை! அல்லது கிரந்தத்திற்கென தனி ஒதுக்கீட்டைப் பெறவேண்டியது தானே! அது அவ்வளவு எளிதல்ல!
புதிதான ஒரு வரி வடிவத்தை சேர்க்க வேண்டுமா? என்று யுனிகோட் சேர்த்தியம் அமைப்பு கேட்கும் கேள்விக்கு, இல்லை, இது ஏற்கெனவே இருக்கும் தமிழ் வரி வடிவத்தை விரிவுபடுத்துவதற்கான பரிந்துரை என்று குறிப்பிட்டுள்ளார். இவை இம்மொழியில் இன்றும் பயன்பாட்டில் உள்ளனவா? என்ற கேள்விக்கு, ஆம். சில நேரங்களில் என்றும் சமஸ்கிருத எழுத்துகளை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட தமிழ்
அதற்கு அவர் காட்டியிருக்கும் எடுத்துக்காட்டுகள்: 1951ஆம் ஆண்டு சென்னை, காமகோடி கோஷஸ்தனம் வெளியிட்டுள்ள ஸ்ரீசதாஸிவ பிரமேந்திராவின் ஸிவ மானச பூஜா கீர்த்தனாஸ் மற்றும் ஆத்ம வித்யா விலாச என்னும் நூலும், 1916ஆம் ஆண்டு வெளியான டி.எஸ். நாராயண சாஸ்திரி என்பாரின் போஜ சரிதம் என்னும் நூலுமாகும்.

இவைதான் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இதை தமிழ் ஒதுக்கீட்டில் இணைத்து விரிவாக்கப்பட்ட தமிழ் (Extented Tamil) என்ற பெயரில் அங்கீகரிக்க வேண்டுமாம். அப்படி இவ்வெழுத்துகள் தமிழ் என்ற பெயரில் இணைக்கப்பட்டால், அது விரிவாக்கப்பட்ட தமிழாக இருக்காது. படுகொலை செய்யப்பட்ட தமிழாகத் தான் (Assassinated Tamil) இருக்க முடியும்.

காஞ்சி சங்கரமடத்தின் சூழ்ச்சி!
இந்தப் பரிந்துரைக்குப் பின்னால் காஞ்சி காம கே(கோ)டிகளின் கரம்தான் இருக்கிறது என்பது அய்ய மில்லாமல் தெரியும் ஒன்றாகும். சிறீ ரமண சர்மா தந் திருக்கும் எடுத்துக்காட்டுகள் மட்டுமல்ல. இது குறித்த அவர் விவாதித்ததாகக் கூறியிருக்கும் வல்லுநர்கள் மதராஸ் சமஸ்கிருதக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் மணி திராவிட், சிறீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் வேணுகோபால் ஷர்மா போன்றவர்களாவர்.
தமிழில் மேம்படுத்த சமஸ்கிருதப் பேராசிரியர் களிடம் கேட்பானேன்? வேலிக்கு ஓணான் சாட்சியா?

இணையத்தில் தமிழ் மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழ் கணினியில் பெரும் சாதனைகள் செய்கிறார்கள் என்ற பொறாமையில் நடத்தப்படும் திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்பே இது! இச்செய்தியறிந்ததும் உலகத் தமிழர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு - முதல்வரின் கவனத்திற்கு...
ஆயினும், இது குறித்த கடுமையான கண்டனமும், மறுப்பும் உடனடியாக தமிழக அரசுத் தரப்பிலிருந்து யுனிகோட் சேர்த்தியம் அமைப்புக்கு சென்றால்தான் இந்தக் கொடுமையைத் தடுக்க முடியும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை இப்பிரச்சினை யில் உடனடி கவனம் எடுத்து செயல்பட வேண்டும். முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் காலத்திலேயே தமிழக அரசுக்குத் தெரியாமல் கொல்லைப்புற வழியாக தமிழுக்குக் கேடு பயக்க நினைக்கும் ஆரியத்தின் சதிச்செயல் வெற்றிபெற்று விடக் கூடாது. தமிழின் வளர்ச்சிக்கு ஆரிய சமஸ்கிருதத் திணிப்பு பெரும் தடையாக அமைவதோடு, தமிழைப் பின்னோக்கி படுகுழியில் தள்ளிவிடும். உடனடி நடவடிக்கை மட்டுமல்லாது, இத்தகைய திரிபு வேலைகளும், திணிப்புகளும், பண்பாட்டுப் படை யெடுப்புகளும் எவ்வகையிலும் நிகழ்ந்துவிடாமல் இருக்க கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பன்னாட்டுத் தமிழ் அறிஞர்களும், கணித் தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புகளும் இத்திணிப்பு முயற்சிக்கு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து, இது நடக்கக்கூடாது என்று யுனிகோட் அமைப்புக்கு முறையிட்டுள்ளன.


கண்டனங்கள் வெடிக்கட்டும்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப் பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் தங்களின் வழக்கமான ஊடுருவல் சதியில் ஈடுபட்டுவிட்டனர், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் அவசர அவசரமாகத் தலையிடுவார்களாக!
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் (Tamil Virtual University Society) முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்கள், ஒருங்குறி (யுனிகோட்) சேர்த்தியத்தின் தலைவர் டாக்டர் லிசா மூர் (யு.எஸ்.ஏ.) அவர்களுக்கு தமிழில் திணிக்கப்படும் கிரந்த எழுத்துகள்பற்றிய சதி குறித்து விரிவாக எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்கள் இந்தப் பார்ப்பனச் சதியை முறியடிக்க அனல் கக்கும் குரலை எழுப்புவார்களாக!

கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
28.10.2010
http://viduthalai.periyar.org.in/20101028/news01.html

No comments:


weather counter Site Meter