Pages

Search This Blog

Tuesday, October 26, 2010

சீரங்கம் போகாமல் இருப்போமா?-மின்சாரம்

புதுத் திருப்பம் கண்ட திருப்பத்தூருக்குப் பிறகு,

தோழர்களே, தோழர்களே,

நாம் சீரங்கத்தில் சந்திக்க இருக்கிறோம் (8.11.2010).

சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ? என்று அன்று பாடப்பட்டது. அதன் பொருள் - பிஜேபி, சங்பரிவார் போல கடப்பாரை, மண் வெட்டியை எடுத்துக் கொண்டு உடைத்துத் தூள் தூளாக்குவதல்ல.

ரெங்கநாதன் - நடராஜன் என்ற உருவங்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆரிய ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பை சுக்கல் நூறாக உடைப்பது என்பதுதான்.

இந்த அரங்கநாதனும், நடராஜனும் அந்நியர் படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றப்படுவதற்காக பல ஊர்களுக்குத் தூக்கிக் கொண்டு அலைந்தார்கள் - பக்த சிரோன்மணிகள் என்பதெல்லாம் படு தமாஷ்!

அந்த வகையில் இதே திருவரங்கம் கோயில் 50 ஆண்டுகளாக மூடிக்கிடந்தன. காலைத் தூக்கி ஆடும் சிதம்பரம் நடராஜனே 37 ஆண்டுகள், பத்து மாதங்கள், இருபது நாள்கள் அப்ஸ்காண்ட் ஆனான். மதுரை மீனாட்சி கோயிலும் அரை நூற்றாண்டு காலம் மூடிக்கிடந்தது.

அடேயப்பா, இந்தக் கோயில்களின் மூர்த்திகளைப் பற்றி இந்தப் பார்ப்பனப் பண்டாரங்கள் எப்படியெல்லாம் கீர்த்தி பாடி வைத்திருக்கின்றன.

எத்தனை எத்தனை அற்புதங்களை இந்த விக்ரகங்களுக்குள் ஏற்றிப் போற்றி வைத்திருக்கின்றன.

வைணவர் புரியாகிய அந்த திருவரங்கம் கழகத்தின் பாசறையாக இருந்து வந்திருக்கிறது. வீறு நடைபோட்டு இயக்கப் பணியாற்றிட எத்தனையோ கருஞ்சட்டைச் சிங்கங்கள் கர்ச்சனை செய்து வந்துள்ளன.

பற்பல மாநாடுகள் - பேரணிகள் - தந்தை பெரியார் அவர்களை அழைத்து ஊர்வலங்கள் - ஒன்றல்ல - இரண்டல்ல. அரங்கநாதன் கோயிலுக்கு முன் தந்தை பெரியார் கம்பீரமாக சிலை வடிவத்தில் வீற்றிருக்கிறார்.

நீ - யார்! ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்! மூடநம்பிக்கைகளை மொத்தமாகக் குத்தனை எடுத்தவன் நீ! நான் யார் தெரியுமா? அடித்தட்டு மக்களை கரை ஏற்ற வந்தவன்.

மூடக்கிருமிகளை முற்றிலும் அழிக்கவந்த சமூக நல மருத்துவன்! ஆரியக் கலாச்சாரத்தின் ஆணிவேர் வரை சென்று அழித்து முடிக்க வந்த அழிவு வேலைக்காரன் நான் என்று ரெங்கநாதனைப் பார்த்து சொல்வதைப்போல அய்யாவின் சிலை அங்கு. நவம்பர் 8இல் திராவிடர் எழுச்சி மாநாடு திருவரங்கத்தில்.

அன்று தந்தை பெரியார் அவர்களுக்குத் தமிழர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்பளிப்புகளைக் குவித் தனர். எடைக்கு எடை எத்தனை எத்தனை வகையான பொருள்களை எல்லாம் வாரி வழங்கினர்! இறைவனுக்குத் தான் துலாபாரம் என்ற நிலையைத் துடைத்தெறிந்து இறைவன் ஏதடா? என்ற பகுத்தறிவு வினா எழுப்பிய ஈரோட்டு இறைவனுக்குத்தான் தமிழ் நாட்டு மக்கள் இத்தனை இத்தனை வகையான அன்பளிப்புகள்.

எடைக்கு எடை வெள்ளி ரூபாய் (தஞ்சை, 6.11.1957), எடைக்கு எடை நவதானியம் (லால்குடி, 24.9.1963), கார் டயர் - ட்யூப்புகள் (கள்ளப்பெரம்பூர், 2.11.1963), எடைக்கு எடை மிளகாய் (பெருவளப்பூர், 10.6.1964), எடைக்கு எடை எண்ணெய் (இடைப்பாடி, 11.9.1964), எடைக்கு எடை மஞ்சள் (ஈரோடு, 3.10.1964), துவரம்பருப்புத் துலாபாரம் (திருச்செங்கோடு, 17.10.1964), எடைக்கு எடை காய்கறி (திருவள்ளூர், 21.10.1964), எடைக்கு மேல் ஒன்றரை மடங்கு படுக்கை விரிப்புகள் (பெட் ஷீட்டுகள்) (கரூர், 25.10.1964), எடைக்கு எடை திராட்சைப் பழம் (பெங்களூர், 15.11.1964), எடைக்கு எடை இங்கிலீஷ் காய்கறிகள் (பெங்களூர், 6.11.1964), எடைக்கு எடை அரிசி (திருவாரூர், 1.12.1964), பால் துலாபாரம் (திருச்சி, 10.12.1964), எடைக்கு எடை இரண்டு காசுகள் (வ.ஆ., திருப்பத்தூர், 13.12.1964), எடைக்கு எடை சர்க்கரை (திருக்கழுக்குன்றம், 14.12.1964), பெட்ரோல் துலாபாரம் (குளித்தலை, 10.1.1965), எடைக்கு எடை காப்பிக் கொட்டை (சிதம்பரம், 16.1.1965), எடைக்கு எடை பிஸ்கட்டுகள் (பண்ருட்டி, 18.1.1965), எடைக்கு எடை மணிலா எண்ணெய் (அரகண்டநல்லூர், 19.1.1965), எடைக்கு எடை கைத்தறி நூல் (குடியாத்தம், 21.1.1965), எடைக்கு எடை நெல் (செங்கம், 22.1.1965), எடைக்கு எடை நெல் (அனந்தபுரம், 23.1.1965), எடைக்கு எடை இரு மடங்கு வாழைக்காய் (வள்ளியூர், 1.5.1965), எடைக்கு எடை பருப்பு மற்றும் உப்பு (தூத்துக்குடி, 2.5.1965), எடைக்கு எடை சர்க்கரை (அலங்காநல்லூர், 16.2.1970), எடைக்கு எடை நெல், வெங்காயம், உப்பு (பெண்ணாடம், 21.9.1970), நெல் துலாபாரம் (இலந்தங்குடி, 8.7.1972).

இவை அன்னியில் டயர் வண்டி (லால்குடி), கறவைப் பசு (தஞ்சை).

புளி, பச்சைப் பட்டாணி, மிளகாய், துவரை, கொத்துக்கடலை, உளுந்து, தேங்காய், ஆட்டுக்கிடா, தட்டைப்பயிறு, காளைக்கன்று, ரூ.3500 மதிப்புள்ள தென்னந்தோப்பு பட்டயம், பசுமாடு, எள், பச்சைப்பயறு, கோதுமை, அரிசி, கழகக் கொடிபோட்ட முக்கால் பவுன் மோதிரம், தேங்காய், உப்பு, நெல், கிழங்கு, எலுமிச்சம்பழம், வெங்காயம், ராகி, கம்பு, மலர்கள், முத்துச்சோளம், எருமை மாடு, செங்கல் ஆயிரம், விறகு 5 எடை என்று கொடுக்கப்பட்டது உண்டு.

ஒரு கடவுள் மறுப்பாளருக்கு மக்கள் அள்ளி அள்ளிக் கொடுத்து, தம் அன்பு வெள்ளத்தால் மூழ்கடித்தது - தந்தை பெரியார் என்ற மாசற்ற மாபெரும் புரட்சியாளருக்கு மட்டும்தான்.

சில இடங்களில் கோயிலில் பயன்படுத்தும் அதே சப்பரத்தில் - தேர்களில் கூட தந்தை பெரியாரை அமர வைத்து வீதி வீதியாக ஊர்வலமாக அழைத்துச் சென்றதுண்டு.

தெய்வச் சிலையை தெப்பத்தில் வைத்து அழைத்துச் சென்றதுபோல, தெய்வத்தை சில்லு சில்லாக உடைத்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கும் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டதுண்டு.

அந்தப் புரட்சியாளர் மறைவுக்குப் பிறகும், அந்தப் புரட்சிச் சுடர் எந்த சூறாவளியானாலும் அணைந்து விடக் கூடாது என்ற எண்ணம் திராவிட மக்கள் நெஞ்சில் நின்றது.

அன்னை மணியம்மையாரும், அவர்களுக்குப் பிறகு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களும், அணையா விளக்காக அய்யா கொள்கைகளை ஏந்திச் சென்றனர். பணிகள் தொடர்கின்றன!

தமிழ் மக்களும் அய்யாவிடம் காட்டிய அதே அன்பை - ஆதரவை அய்யாவின் சீடர்களுக்கும் காட்டி வருகின்றனர் - காரணம் அய்யா பணி தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே!

அதனுடைய பிரதிபலிப்புதான் தஞ்சையிலே தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம், புதுக்கோட்டையில் எடைக்கு எடை வெள்ளி, ஒவ்வொரு ஊரிலும் இரு மடங்கு எடை அளவுக்கு ரூபாய் நாணயங்கள்.

நவம்பர் 8இல் திருவரங்கத்தில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாட்டிலும் தமிழர் தலைவருக்கு விதவிதமான பொருள்களை எடைக்கு எடை அளித்து மகிழ இருக்கிறார்கள்.

திருப்பத்தூர் பொதுக்குழுவில் லால்குடி மாவட்டக் கழக செயலாளர் ஆல்பர்ட் அவர்கள் அந்தப் பட்டியலைத் தெரிவித்தபோது உற்சாகத்தால் தோழர்கள் பலத்த கரஒலி எழுப்பினர் (என்ன பண்டக சாலையா வைக்கப் போகிறீர்கள்? என்று குறுக்கிட்டுக் கேட்டார் கழகத் தலைவர் - ஒரே சிரிப்பொலி).

திருவரங்கத்தில் நேற்று (25.10.2010) நடைபெற்ற மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்; தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் (கரூர் மாவட்ட மற்றும் லால்குடி மாவட்ட கழகத் தலைவர் தே.வால்டர்), புள்ளம்பாடி ஒன்றியம் சார்பில் வெங்காயம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சார்பில் பொன்னி அரிசி, முசிறி ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தேங்காய், தொட்டியம் ஒன்றியக் கழகம் சார்பில் வாழைக்காய், துறையூர் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் வேர்க்கடலை, உப்பிலியாபுரம் ஒன்றிய தி.க., ப.க., சார்பில் எலுமிச்சம் பழம், லால்குடி ஒன்றிய கழகம் சார்பில் பரங்கிக்காய், பூசணிக்காய், திருவரங்கம் எஸ்.கே.பி. குடும்பத்தின் சார்பில் பொன்னி அரிசி, மாவட்ட இளைஞரணி சார்பில் 78 பொருள்கள் என்று பட்டியல் விரிந்து கொண்டே போகிறது.

கழகத் தோழர்களும், பொதுமக்களும் திராவிடர் கழகத்தின் மீதும், அதன் தன்னிகரற்ற தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் மீதும் வைத்திருக்கும் பற்று, மதிப்பு, எதிர்பார்ப்பு எத்தகையது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் இவை.

இதில் எந்த ஒரு பொருளும் கடுகத்தனை அளவுக்குக் கூட தனிப்பட்ட முறையில் தலைவரைச் சேரப்போவ தில்லை; எல்லாம் இயக்கத்திற்கும், கல்வி நிறுவனங் களுக்கும்தான்.

ஒவ்வொரு மாநாடும் ஒவ்வொரு வகையில் களைகட்டி வருகிறது.

திருவரங்கம் வேறொரு பரிமானத்தில் பளிச்சிடுகிறது.

தில்லை போகாமல் இருப்பேனா - தில்லை நடராஜனைத் தரிசிக்காமல் இருப்பேனா என்று சொன்னது அந்தக் காலம். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடந்த பக்தனின் உள்ளம் அது.

திருவரங்கம் போகாமல் இருப்போமோ - திராவிடர் எழுச்சி மாநாட்டைக் காணாது இருப்போமா என்பது இன்றைய எழுச்சிச் சகாப்தத்தின் இன்னொரு முகம்.

சீரங்கம் வைணவத்தின் கோட்டையல்ல. கருஞ் சட்டைப் பாசறையின் பாடி வீடு என்பதைக் காட்ட கருஞ்சட்டைப் பட்டாளமே புறப்படு! புறப்படு!
http://www.viduthalai.periyar.org.in/20101026/news35.html

No comments:


weather counter Site Meter