Pages

Search This Blog

Friday, October 29, 2010

செவ்வாய் தோஷம்?

என் நண்பர் ஒருவர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். முன்பு அவர் பணியில் இருந்த போது மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்தார். தன் மகனுக்குச் செவ்வாய் தோஷம் என்பதால் அதே தோஷம் உள்ள பெண்ணையே தேடினார். கிடைக்கவில்லை.

செவ்வாய் தோஷம் இல்லாத பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர். நண்பருக்கு பெரியாரைப்பற்றித் தெரியும். கொள்கையும் பிடிக்கும். ஆனால் அவர் வீட்டார் அழுத்தமான மூடநம்பிக்கையாளர்கள்.

அவருடைய இனத்திலேயே மகனுக்குப் பெண் அமைய வேண்டும். அப்பெண் அழகாகவும், படித்தும் இருக்க வேண்டும். அவர் எதிர்பார்த்தபடியே பெண்ணும் இருந்தது. இருந்தாலும் பையனுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் பெண் தரமாட்டார்களே என்கிற கவலையில் என்னிடம் வந்தார்.

நான் அவரிடம் கவலையே வேண்டாம் மன உறுதியோடு இருங்கள். நான்சொல்லுகிறபடி செய்தால் கண்டிப்பாகப் பெண் கொடுப்பார்கள் என்றேன். அவர் மிகவும் ஆவலோடு சொல்லுங்கள் செய்கிறேன் என்றார். நான் அவரிடம் ஒரு ஜோசியரை பாருங்கள். அந்த ஜோசியர் கேட்கும் பணத்தையும் கொடுங்கள். பையனுக்கு செவ்வாய்தோஷம் இல்லாதபடி ஒரு ஜாதகத்தைத் தயார்படுத்திக் கொடுக்கச் சொல்லுங்கள். அவரும் பணத்திற்காகக் கண்டிப்பாகச் செய்வார் என்றேன்.

நண்பர் முதலில் பயந்தார். கெடுதல் ஏற்படுமே என்றார். பயப்படாதீர்கள். நான் இருக்கின்றேன், சொன்னதை செய்யுங்கள் என்றேன். நல்லதே நடக்கும் என்று உறுதியாக சொன்னபின் அவ்வாறே செய்தார். வீட்டாருக்கும் செவ்வாய்தோஷம் கழித்து விட்டதாகவும், அதுபற்றி எதுவும் பேசக்கூடாது என்றும் சொல்லிவிட்டார்.

அவர்கள் விரும்பிய அதே பெண்ணை மகனுக்கு மணம் முடித்தனர். பையன் மத்திய அரசுப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றான். மணமக்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இரண்டு குழந்தைகள். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

அறிவாசான் தந்த அறிவு மருந்து மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் மாமருந்து. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- தா.திருப்பதி, காவேரிப்பட்டணம்
http://www.viduthalai.periyar.org.in/20101029/news23.html

No comments:


weather counter Site Meter