Pages

Search This Blog

Wednesday, October 27, 2010

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை -திருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம்

திருப்பத்தூர் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை தேவை என்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

450 ஆண்டுகளுக்குமுன்பு அயோத்தியில் பாபரால் கட்டப்பட்ட பாபர் மசூதி - 1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் பா.ஜ.க. - மற்றும் சங் பரிவார்க் கும்பலால் இடித்து நொறுக்கப்பட்டது.

18 ஆண்டுகள் உருண்டோடிய பிறகும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீதான தண்டனை இதுவரை வழங்கப்படாத நிலையில்,

அயோத்தி - பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால், சி.யு. கான் ஆகிய மூவரும் சட்டத்தின் அடிப்படையில், ஆவ ணங்களின் அடிப்படையில் இல்லாமல் வெறும் நம்பிக்கை என்பதை முக்கியமாக மய்யப்படுத்தி வழங்கியுள்ள தீர்ப்பு (க்ஷநடநைக யனே கயவை) சட்டம், நீதி, மதச் சார்பின்மை, சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துப் பொதுத் தன்மைகளையும் அடித்து நொறுக்கக் கூடியதாகும்.

சட்டங்களையும், சாட்சியங்களையும் புறந்தள்ளி, சட்டப்படியான நீதிமன்றம் (ஊடிரசவ டிக டுயற) என்பதற்குப் பதிலாக நம்பிக்கை மன்றம் (ஊடிரசவ டிக கயவை) என்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டு விட்டது.

சிந்தனைக்கு இடம் கொடுக்காத நம்பிக்கை என்பது மூட நம்பிக்கையாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் மலிவான ஒரு சொல்லாகும். அதனை ஒரு உயர்நீதிமன்றம் பயன்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல!

யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கட்டப் பஞ்சாயத்து முறையில் பாகப் பிரிவினை வழக்காக இதனை அலகாபாத் உயர்நீதிமன்றம் மாற்றிவிட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலகட்டத்தில், அயோத்திப் பிரச்சினையில் இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் கருத்துக் கூறத் தயாராக இல்லை என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்ட நிலையில், மீண்டும் அலகாபாத் தீர்ப்பினை மேல்முறையீடாக உச்சநீதிமன்றம் விசாரிக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது விசித்திரமான நிலையாகும்.

1947 ஆகஸ்ட் 15 இல் இருந்த நிலை எதுவோ அதுவேதான் தொடரப்படவேண்டும் என்று 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங் கள் பற்றிய சிறப்புச் சட்டம் கூறும் நிலையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

வரலாற்றில் பின்னோக்கிப் பயணத்தைத் தொடங்கினால், அது வேண்டத் தகாத புதிய தலைவலிகளை ஏற்படுத்தும் என்பதையும், குறிப்பாக ஆயிரக்கணக்கான புத்த விகார்கள் இந்துக் கோயில்களாக மாற்றப் பட்டுள்ள நிலையைப் பரிசீலித்து இந்துக் கோயில்களை பழையபடி புத்த விகார்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனையும், போராட்டமும் வெடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அத்தனைப் பேரும் விளம்பரம் பெற்ற அரசியல் பிரமுகர்கள் ஆதலால் அவர்கள்மீதான தண்டனை அளிப்பதில் சட்டம் - நீதிமன்றம் தயக்கம் காட்டுகிறது என்பது வெளிப்படை.

சட்டத்துக்குமுன் அனைவரும் சமம் என்று பெருமையாகக் கூறிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

பாபர் மசூதி இடிப்பின் எதிரொலியாக மும்பையில் நிகழ்ந்த வன்முறை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்ட நிலையில், மூல வழக்கு மூலையில் குறட்டை விடுகிறதே - ஏன் என்ற கேள்வி எழாதா?

துணைப் பிரதமராக இருந்த அத்வானி போன்றவர்கள் நீதி மன்றத்தில் வழக்கை விரைவாக நடத்திட ஒத்துழைப்புக் கொடுக் காமல், வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் தந்திரத் தில்தான் ஈடுபட்டனர் என்பது எத்தகைய வெட்கக்கேடு - பா.ஜ.க. வின் தார்மீகத்தின் சாயம் இதன்மூலம் வெளுத்துவிடவில்லையா?

லிபரான் ஆணையத்தின்முன் அத்வானி வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்வி கடுமையாக இருப்பதாகவும், அவரிடம் மென்மையான முறையில் கேள்வி கேட்கப்படவேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டாரே!

அத்வானி தலைமையில் சங் பரிவார் - காவிக் கும்பல் பட்டப் பகலில் பாபர் மசூதியை இடித்ததற்குக் கனமான சாட்சிக்குவியல்கள் இருக்கின்றன. வீடியோ காட்சி உள்ளது. நேரில் பார்த்த செய்தியாளர்கள் இருக்கிறார்கள். அத்வானியின் பாதுகாப்புக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்ற பாதுகாப்பு அதிகாரி அஞ்சு குப்தா என்ற பெண் அய்.பி.எஸ். அதிகாரியே, எல்.கே. அத்வானி, வினய் கட்டியார், உமாபாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோர் பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமன் கோயிலைக் கட்டவேண்டும் என்று கரசேவகர்களைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டார். அதைவிடக் கொடுமை நாடாளுமன்றத்தில்- மக்களவையில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) கொஞ்சம்கூட கூச்சப்படாமல், மிகமிக வெளிப்படையாக ஆமாம், பாபர் மசூதியை இடித்தது நாங்கள்தான் - தண்டனையை ஏற்கத் தயார் என்று பேசியிருக்கிறார் (8.12.2009). இதற்குப் பிறகும் தூங்கு மூஞ்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நகர்கிறது என்றால், இதன் பின்னணி சாதாரணமானதா என்ன என்ற அய்யம் பொது மக்களுக்கு எழாதா? ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தாலும்கூட, அதற்குப்பின் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சொல்லி காலத்தைக் கரியாக்கிவிடமாட்டார்களா?

இந்தியாவில் சட்டமும், நிருவாகமும், நீதித்துறையும் எந்தத் தரத்தில் இருக்கின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒன்று போதுமானது.

எந்த வன்முறையை மேற்கொண்டாலும், அரசியல் செல்வாக்கு என்பது பின்னணியில் இருந்தால், பெருங்கூட்டமாக ஒன்றைச் செய்தால், அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பதுதான் இன்றைய பிரத்தியட்ச நிலையாகும்.

இந்தத் துணிச்சலால்தான் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கும்பல் நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப்பின் இந்தியா முழுமையும் நடைபெற்றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு இந்தக் கும்பல்தான் காரணம் - திட்டமிட்ட சதி வலைப்பின்னல் இருந்திருக்கிறது என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

மாலேகான் குண்டுவெடிப்பு என்ற ஒரு கயிற்றின் முனையைத் தொட்டுக்கொண்டே போனால், அது மும்பை குண்டு வெடிப்பு, அய்தராபாத் மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஷெரீஃப், அகமதாபாத் குண்டுவெடிப்புகள் தென்காசி வரை இந்தக் கூட்டத்தின் கைவண்ணம் இருப்பது தெரிய வந்தது.

இந்த உண்மைகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த காவல்துறை உயர் அதிகாரி சுட்டுக் கொல்லப்படுகிறார் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

நாட்டில் என்ன நடக்கிறது? இவ்வளவுக்குப் பிறகும்கூட பாபர் மசூதி இடிப்புப் பேர்வழிகள் மீதான வழக்கு விசாரணையில் வேகம் காணப்படவில்லை.

இதனைத்தான் திருப்பத்தூர் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதவரை இந்தியாவின் சட்ட- ஒழுங்கு என்பதெல்லாம் அசல் கேலிக்குரியதுதான்.

அரசியல் கட்சிகள் இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பதே நமது கருத்தாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news07.html

No comments:


weather counter Site Meter