Pages

Search This Blog

Monday, October 25, 2010

திருப்பத்தூரின் வெற்றி - திராவிடர் எழுச்சி மாநாடு

வேலூர் - திருப்பத்தூரில் சனியன்று (23.10.2010) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவும் சரி, அன்று மாலை நடைபெற்ற வேலூர் மண்டல திராவிடர் எழுச்சி மாநாடும் சரி, மிகச் சிறப்பானவைகளே!

மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு கே.கே.சி. எழிலரசன் தலைமையில் ஓர் இளைஞர் பட்டாளம் இராணுவச் சிப்பாய்கள் போலப் பணியாற்றியுள்ளனர். அவை திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டன என்பதை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தோர் நிச்சயமாக அறிவர்.

இவ்வளவு சிறப்புகளுக்கும், வெற்றிக்கும் காரணம் கழகத் தோழர்களின் பணிகள் என்கிற அளவோடு நின்றுவிட முடியாது. அதனையும் கடந்து பொதுமக் களின் ஆதரவு தந்தை பெரியாரின்பாலும், திராவிடர் கழகத்தின் மீதும் வைத்துள்ள பற்றும், மரியாதையும், எதிர்பார்ப்பும்கூட இதில் அடங்கி இருக்கிறது என்பது முக்கியமான கருத்தாகும். பொறுப்பாளர்களின் பொதுமக்கள் தொடர்பு என்கிற சங்கிலி இதற்கு அச்சாணியாக இருக்கிறது.

நமது கழகப் பொறுப்பாளர்கள் நமது இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களிடத்திலும் மதிப்புப் பெற்றுள்ளனர். அத்தகு பெருமக்களின் ஆதரவும் கழகத்திற்கு எல்லா வகைகளிலும் கிடைக்கிறது என்றால் - அதன் உண்மையான காரணம் நமது தோழர்களின் அரிய அணுகுமுறைகளேயாகும்.

எந்த ஒரு வெற்றிக்கும் இத்தகு அணுகுமுறைகள் முக்கிய காரணியமாகும். இதனை திருப்பத்தூரைப் பார்த்து நமது தோழர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

மாநாட்டில் கூடியிருந்த மக்கள் என்று பார்த்தால் கூட நமது கழகக் குடும்பங்கள் ஒரு பக்கம் திரண்டு இருந்தாலும், பொதுமக்கள் பெரும் அளவில் கூடியி ருந்தனர் என்பதுதான் முக்கியமானதாகும். பெரிய அளவு பிரச்சாரம் மட்டுமே இதற்குக் காரணம் என்று கூறி கணக்குப் போட முடியாது. திராவிடர் கழகப் பணிகளும், பிரச்சாரமும் நாட்டுக்குத் தேவை என் பதிலே கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களும் எண்ணு கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

போட்டி போட்டுக்கொண்டு உதவியிருக்கிறார்கள் என்பதை நேரில் அறிய முடிந்தது.

கட்சிகள்- கட்சிகளைச் சார்ந்த மக்களை மட்டும் சம்பந்தப்படுத்துகின்றன; மதங்கள் மதங்களைச் சார்ந்த மக்களிடத்தில் மட்டும் நடமாடுகின்றன.

தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட பகுத்தறிவு இயக்கமானது - மனிதர்கள் அத்தனைப் பேரையும் வேறுபாடு இல்லாமல் தழுவிக் கொள்கிறது - சம்பந்தப்படுத்துகிறது.

கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கூறும்போது, நாம் எண்ணிக்கையில் பெரிய அளவில் இல்லை என்றாலும், நாம் இலட்சியப் பலம் உடையவர்களாக இருக்கின்ற காரணத்தால், நாம் எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடிகிறது என்று குறிப்பிட்டார்.

நாம் எடுத்துக்கொள்ளும் காரியமானது - பாதிக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக் கானவை யாதலால் நாம் கடவுள் மறுப்பாளர்கள் ஆனாலும், நம்மீது அன்பு கொள்கிறார்கள் - அதன் காரணமாக ஆதரவுக் கரங்களை நீட்டுகிறார்கள் - நன்றி உணர்வைப் புலப்படுத்துகிறார்கள்.

திருப்பத்தூரில் மட்டுமல்ல - இந்த நிலை தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் காந்த அலைகளாகப் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. நமது கழகத் தோழர்கள் அந்த அலைகளை ஈர்க்கக் கூடிய வகையில் அணுகுமுறைகளை மேற்கொள்வார்களாக!

ஏதோ ஆடம்பரமான ஏற்பாடுகளைத்தான் மக்கள் மதிப்பார்கள் என்றும் அவசரப்பட்டுவிடக் கூடாது. அப்படிப் பார்த்தால் திருப்பத்தூரில் அளவுக்கு அதிகமான ஆடம்பரம் - டம்பாச்சாரம் இருந்ததாகவும் கூற முடியாது.

மக்களைக் கவர்ந்தது எது என்றால் - எங்கு பார்த்தாலும் கழகக் கொடிகள்! கொடிகள்!! கொடிகள்!!! ஊரே கொடிக்காடாக மாறிவிட்டது. கழகக் கொடிகள் குடைகளாகி ஊரை வடம் பிடித்தன என்று சொல்லவேண்டும். அடுத்தது சுவர் எழுத்துகள். எந்தச் சுவரைப் பார்த்தாலும் திருப்பத்தூர் மாநாட்டு விளம் பரங்கள்தான். திருப்பத்தூர் சுற்று வட்டாரங்களிலும் இத்தகைய முயற்சிகள் நடந்துள்ளன.

ஆயிரம் கொடிகள் பறந்தாலும், அந்த இடத்தில் ஒரே ஒரு திராவிடர் கழகக் கொடி பறந்தால், அதுதான் கம்பீரமாகத் தெரியும். கொடியின் அமைப்பும், நிறமும் அப்படி!

அத்தகைய கழகக் கொடி ஆயிரக்கணக்கில் அணிவகுத்துப் பறந்தால், அந்தக் காட்சி யாரைத்தான் சிறைப்படுத்தாது? அடேயப்பா! யாரைத்தான் ஆச்சரியத்தில் மூச்சைத் திணறச் செய்யாது?

அந்தக் காரியத்தை நமது தோழர்கள் திட்டமிட்டு மிகச் சிறப்பாகவே செய்து முடித்துவிட்டனர். மக்கள் மத்தியில் மாநாட்டின் மதிப்பு மிக உயர்ந்து பறந்ததற்குக் கழகக் கொடிகளின் அணிவகுப்பு முக்கிய காரண மாகும்.

எல்லாவற்றிலும் ஒரு அழகியல் தெரிந்தது - தற்கால இளைஞர்கள் அல்லவா - அதன் கைத்திறனும் பளிச்சிட்டது.

இந்த ரகசியத்தை நமது கழகப் பொறுப்பாளர்கள் தெரிந்துகொள்வார்களாக! செயல்படுவார்களாக!
http://www.viduthalai.periyar.org.in/20101025/news04.html

No comments:


weather counter Site Meter