Pages

Search This Blog

Friday, October 8, 2010

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு

ஆரியராவது - திராவிடராவது - பார்ப்பனராவது - தமிழராவது - எல்லாம் காலாவதியான சரக்கு! இப்பொழுதெல்லாம் அந்த வேறுபாடுகள் காணாமற் போய்விட்டன என்று விரிந்து பரந்த விசால மனம் தங்களுக்கு உண்டு என்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நீட்டி முழங்கும் நெடுமரங்கள் நம் நாட்டில் உண்டு.

ஜில்லிட்டுப் போன அந்த மனிதர்களுக்குக் கொஞ்சம் சூடுகாட்டி, உண்மையை உணர்த்துவதற்கு ஓர் ஆதாரம்தான் பார்ப்பனர்கள் நடத்தும் தாம்ப்ராஸ் என்னும் மாத இதழ்.

இம்மாத இதழில் பார்ப்பன அமைப்பான தாம்ப்ராஸின் தலைவர் திருவாளர் என். நாராயணன் எழுதியுள்ள தலையங்கக் கட்டுரை ஒன்று போதும் - பார்ப்பனீயத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிராமணர் என்ற அகந்தையை அகற்றிவிட்டு மனிதர்களாக ஆகி விட்டார்களா, இல்லையா என்று தெரிந்துகொள் வதற்கு.

இன்றைக்குப் பல பிராமணக் குடும்பங்களில் அவரவர்கள் அகத்தில் உரையாடுகின்ற பொழுது பிராமண பாஷை பயன்படுத்தப்படுவதில்லை. பூஜை அறை என்றும், சுவாமி அறை என்றும், பெருமாள் உள் என்றும் ஒவ்வொரு அகத்திலும் இருந்து வந்து, அன்றாடம் காலையில் குடும்பத்தலைவரோ, குடும்பத் தலைவியோ அல்லது ஓர் குடும்ப உறுப்பினரோ ஸ்லோகங்கள் சொல்லி, ஸ்வாமி நமஸ்காரம் செய்து நைவேத்யம், கற்பூர ஹாரத்தி காண்பித்து பூஜை செய்யும் பழக்கமோ, பெரியவர்களும், சிறியவர்களும் கூட்டாக அமர்ந்து கொண்டு ஸ்லோகங்கள் சொல்லும் வழக்கமோ இன்று கடைபிடிக்கப் போவதில்லை என்று தாம்ப்ராஸ் ஏடு குறைப்பட்டுக் கொள்கிறது.

இன்றைய சமூகச் சூழலில், பொருளாதார வளர்ச்சி யில், நுகர்வோர் கலாச்சாரச் சூழலில் பார்ப்பனக் குடும்பங்களில், தாம்ப்ராஸ் கூறும் - அவர்கள் கண்ணோட்டத்தில் குறைபாடுகளாகக் கருதப்படும் நிலைமை உண்மையாகக்கூட இருக்கலாம்.

அத்தகைய பழக்கவழக்கங்கள், ஆச்சார அனுஷ் டானங்களை அன்றாடம் அவர்கள் கடைப்பிடிக்க வில்லை என்பதற்காக - பார்ப்பன உணர்வைத் துறந்துவிட்டார்கள் என்று பொருளல்ல - எந்தச் சம்பிரதாய அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க மறந்தாலும், ஆவணி அவிட்டப் பூணூலை மட்டும் புதுப்பித்துக் கொள்ள மறந்துவிடுவதில்லை - தவிர்ப்பதும் இல்லை.

பயணக் காலங்களில் உடன் பயணிக்கும் மற்றவர்கள் இதனைச் சரியாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. சூட்டு - கோட்டு அணிந்திருந்தாலும், அந்தப் பூணூலை அணிவதை மட்டும் தவிர்ப்பதில்லை.

அன்றாட அனுஷ்டானங்களை அவர்கள் அனுசரிப்பதில்லை என்பதைக் குறையாகக் கூறி அவற்றை அனுசரிக்கவேண்டும் என்று அவர்களின் அமைப்பான தாம்ப்ராஸ் வலியுறுத்துவதன் நோக்கத்தைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

வீட்டில் பிராமண பாஷையை ஏன் பயன்படுத்து வதில்லை - அது தவறு - அந்தப் பாஷையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று பாடம் படிப்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?

பல பிராமண குடும்பங்கள் அவர்களது அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் Technical Correction செய்யப்படவேண்டிய நிலையில் இருக்கின்றன.

வெகு வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால் ( Life Style ) நமது கலாச்சாரம், பாரம்பரியம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை மனதிலே கொண்டு, நாம் தக்க நடைமுறைகளைக் கடைப்பிடித் தால்தான் நம் கலாச்சாரப் பாரம்பரிய வாழ்க்கை நமது இளைய தலைமுறையினரால் தொடரப்படும்; காப்பாற்றப்படும் என்றும் தாம்ப்ராஸ் ஏடு எழுதுகிறது.

இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? அவர்களின் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதில் அவர்கள் கவலை செலுத்துகிறார்கள் என்பதுதானே?

கட்டிக் காக்கப்படும் கலாச்சாரம் என்றால் அதன் பொருள் என்ன? ஜாதியில் உயர்ந்தவர்கள் என்பதைத் தவிர அவர்களின் கலாச்சாரம் என்ன?

வீட்டிலே சமஸ்கிருதத்தைப் பேசவேண்டும் என்று வற்புறுத்துவதன் நோக்கம் என்ன?

நாம் தமிழர்கள் அல்ல; நாம் இனத்தால் ஆரியர்கள் - அதனை மறந்துவிடவேண்டாம் என்று எச்சரிப்பது தானே?

தாக்குதலுக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர் என்பதன் உட்பொருள் என்ன? ஜாதி வேண்டாம் - சமநிலை உருவாக்கப்படவேண்டும் என்று கூறுவது அவர்களைப் பொறுத்தவரை தாக்குவதாக கொள் கின்றனர் என்பதைக் கவனிக்கவேண்டும்.

அவர்களுக்கென்று உள்ள அமைப்பானது அவர்களைப் பழைய சனாதனத்தில்தான் கட்டிப் போட விரும்புகிறது - பார்ப்பனக் கலாச்சார வேலியைத் தாண்டி வெளியில் வந்துவிடக் கூடாது என்பதிலே உறுதியாக இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று எழுதும், கூறும், நம்பும் தமிழர்கள் இந்த நிலைகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கக் கடமைப்படவில்லையா?

ஆவணி அவிட்டத்தை நிறுத்தும்வரை - அவர்கள் எந்த வேடம் தரித்தாலும் அவர்கள்மீது ஆழமாகப் பதிந்த உயர்ஜாதி ஆணவ முத்திரை அழியப் போவதில்லை.
http://www.viduthalai.periyar.org.in/20101008/news04.html

1 comment:

Thamizhan said...

உடை,உணவு இதையெல்லாம் மாற்றிக் கொண்டவர்கள் உணர்வை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை.எத்தனைப் பார்ப்பனப் பெண்களுக்கு வரதட்சணைக் கொடுமையிலிருந்து விடுதலை கொடுத்து வாழ்வளித்துள்ளனர்,பார்ப்பனரல்லாதார்.பார்ப்பனீயம் என்றும் மாறாது.மாறிவிட்டதாக நினைக்கும் திராவிடர்கள் ஏமாந்தவர்கள்.காலம் வரும் போது அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.


weather counter Site Meter