Pages

Search This Blog

Saturday, October 9, 2010

வங்கத்தின் சிங்கம்!-தோழர் ஜோதி பாசு

இந்திய வரலாற்றில் மட்டுமல்ல,​​ உலக வரலாற்றிலும் கூட ஆபூர்வமாக வெகு சிலரே அரசியலை அர்த்தப்படுத்தியிருக்கிறார்கள்.​ அவர்களில் மிகவும் குறிப்பிடப்படவேண்டியவர் ​ மேற்கு வங்கத்தின் சிவப்பு சிங்கம் தோழர் ஜோதி பாசு.​ பிறரை சுரண்டாத சிங்கம்.​ 'அரசியல் என்பது எனக்கு மக்கள்தான்.​ ​ மக்களுக்கு சேவை செய்வது என்பதைத் தவிர வேறு நலன் எனக்கில்லை.​ என் மரணம் வரை,​​ என் மூளை செயல்படும் வரை மக்களுக்காக பாடுபடுவேன்'' என்று கூறினார் ஜோதி பாசு.


அவருடைய வாழ்க்கை மிகவும் எளியது.​ அவர் "பாரிஸ்டர்' பட்டம் பெற்றிருந்த போதிலும்,​​ மார்க்சீய லட்சியத்துக்காக,​​ தொழிலாளி வர்க்க இயக்கத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.​ தன்னடக்கத்தின் மறு உருவம்.​ அவருடைய கட்சி அவரை முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால்,​​ அதை ஏற்றுக்கொண்டார்.​ ஜவாகர்லால் நேரு,​​ ரவீந்திரநாத் தாகூர் போன்ற தேசியத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகியவர்.​ ​

ஜோதி பாசு 1914-ம் ஆண்டு,​​ ஜூலை மாதம்,​​ 8-ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார்.​ ஜோதிபாசுவின் தாயார் வசதியான நிலவுடமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.​ இங்கிலாந்தில் படிக்கும்பொழுது,​​ ஜோதிபாசு இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கத்துக்கு ஆளாகி தன்னை ஒரு கம்யூனிஸ்டாக மாற்றிக் கொண்டார்.

ஜவாகர்லால் நேரு லண்டனுக்கு வந்தபோது,​​ அவருக்கு வி.கே.கிருஷ்ணமேனனை அறிமுகம் செய்து வைத்தார் ஜோதிபாசு.​ 1946-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த வகுப்புவாத கலவரத்தில் நடந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தும் மேல் இருக்கும்.​ அந்த வேளையில் மத நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கும் நிலைமையைச் சீராக்குவதற்கும் ஜோதி பாசுவும் அவரது தோழர்களும் இரவு பகல் பாராது பாடுபட்டனர்.

1964-இல் மார்க்சீய கட்சித் திட்டத்தில் கூறியுள்ள மக்கள் ஜனநாயகம் என்பது "பீகிங்' குறிப்பு என்றும் அது சீனா உருவாக்கித் தந்தது என்றும் அதைத்தான் மார்க்சிஸ்டுகள் இங்கே கூறுகிறார்கள் என்றும் அன்றைக்கு மத்திய உளவுத்துறை அமைச்சராக இருந்த குல்சாரிலால் நந்தா நாடாளுமன்றத்தில் ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.​ அதற்கு ஜோதி பாசு,​​ 'இதற்கும் சீனர்களுக்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை.​ சீனா கொண்டு வருவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் இங்கே கொண்டு வந்தோம்'' என்று சரியான பதில் கொடுத்தார்.

உபரி நிலங்களை மீட்டு அதை வினியோகம் செய்வதில் மேற்கு வங்கம் ஒரு புதிய சாதனையைப் படைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.​ இந்தியா தற்பொழுது பின்பற்றி வரும் தாராளமய தனியார் மயக்கொள்கை,​​ உள்நாட்டுத் தொழில்களை நசியச் செய்துவிடும் என்பதை ஜோதி பாசு தொடர்ந்து சுட்டிக் காட்டினார்.​ ஜோதி பாசு முதல்வராக இருந்தபொழுது நிபந்தனையுடன் கூடிய அன்னிய உதவியை அவர் முற்றிலுமாக நிராகரித்தார்.

பிடிவாதம் பிடிக்காத மார்க்ஸிஸ்ட்டாக இருந்தார்.​ கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர்.​ 1980-களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும்,​​ 90-களில் பா.ஜ.க.வுக்கு எதிராகவும் இடது மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று திரட்டுவதில் அவர் பிரதான பங்காற்றினார்.

ஜோதி பாசுவின் விவேகமான ஆலோசனைகளை மன்மோகன் சிங் மதித்து கேட்பார்.​ 1977-ல் ஜோதிபாசு அரசாங்கம் முதல் முறையாக மேற்குவங்கத்தில் பதவியேற்றதும் 1700 அரசியல் கைதிகளை விடுதலை செய்தது.​ இவர்களில் நக்சல் பாரி இயக்கத்தைச் சேர்ந்ததவர்களும் அடங்குவர்.​ சுமார் 10 ஆயிரம் பேர் மீதிருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.​ ​

அன்னை தெரசாவின் கடைசி 20 ஆண்டு தொண்டுக்கு மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு பல்வேறு வழிகளில் உதவி செய்தார்.​ அன்னை தெரசா பெயரில் உருவாக்கப்பட்ட சர்வ தேச முதல் விருதைப் பெற்றவர் ஜோதி பாசு.​ கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனால் அது வழங்கப்பட்டது.

அமைச்சர்களும் அதிகாரிகளும் எந்த நேரம் வேண்டுமானாலும் முதல்வரைச் சந்திக்கலாம்.​ அதிகாரிகள் பணிமாற்றம்,​​ முன்னேற்றம் போன்றவை எல்லாம் தலைமைச் செயலாளர் பரிந்துரைப்பது தான் இறுதி முடிவாக இருக்கும்.​ ​

ஜோதி பாசுவுக்கு எதையும் மறைத்துப் பேசும் பழக்கமில்லை.​ உள்ளத்தில் உள்ளபடி பேசுவார்.​ மிகுந்த மனிதாபிமான உணர்வு கொண்டவர்.​ பிறர் துயர் துடைக்கத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்.​ கடைசியாக சில ஆண்டுகள் நோய் வாய்ப்பட்டிருந்தார்.​ உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்புகளும் செயல் இழக்கத் தொடங்கின.​ இறுதியாக 2010 ஆம் ஆண்டு,​​ ஜனவரி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 11.45 மணிக்கு தன்னுடைய 95-வது வயதில் ஜோதி பாசு காலமானார்.

தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் கட்சிக்குள் வந்த ஜோதி பாசு கட்சி தடையின்றி செயல்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.​ தன் பெயருக்கு முன்னால் ஆடம்பர அடைமொழிகளை வைத்துக் கொள்ளாதவர்.​ தன்னுடைய உருவப் படத்தை 60-70 அடிகளுக்கு ​ போகும் இடமெல்லாம் வழி நெடுகிலும் கட்-அவுட் வைத்துக் கொள்ளாதவர்.​ எங்கு சென்றாலும் 100 கார்களில் தோழர்கள் பின் தொடர்வதில்லை.​ ஒரே ஒரு மெய்க்காப்பாளரோடு எந்தவிதப் பகட்டுமின்றி தலைமைச் செயலகத்தில் வந்திறங்குவார்.​ ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் கூட ஜோதிபாசுவின் படம் இருக்காது.​ இப்படியெல்லாம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத ஜோதிபாசுவின் புகழை வரவிருக்கும் மேற்குவங்க தேர்தலில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்வதே ஒரு முரண்சுவை தானே?
-ராஜேஷ் நன்றி:தினமணி 

No comments:


weather counter Site Meter