Pages

Search This Blog

Saturday, October 2, 2010

காந்தியார் பிறப்பும் - காமராசர் மறைவும்

இன்று காந்தியார் அவர்களின் பிறந்த நாள் (1869). பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் நினைவு நாள் (1975).

இந்த இரு தலைவர்களும் நாட்டு மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள்; பொதுத் தொண்டில் அப்பழுக்கற்ற மாமணிகளாக ஒளி வீசியவர்கள்.
இவர்களை இந்நாளில் நினைப்பது என்றால், மாலை மரியாதைகள் மட்டுமல்ல - மனிதகுலம் சிந்திக்கவேண் டிய கூறுகள்பற்றி சிந்திப்பதுதான் சீலமானதாகும்.

காந்தியாரின் பிறந்த நாள் சர்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. காந்தியார் என்று நினைக்கும்பொழுது, அவரின் இந்த அகிம்சை அனை வருக்கும் நினைவிற்கு வருவது இயல்பானதுதான். அதேநேரத்தில், அந்த அகிம்சா மூர்த்தி வன்முறையால் தான் மறைய நேரிட்டது என்பது கவனிக்கத்தக்க சான்றாகும். மத நம்பிக்கையாளரான காந்தியார் மதவாத நம்பிக்கையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
காந்தியாரின் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ அவரைக் காப்பாற்றவில்லை என்பது ஒரு சிந்தனை. மத நம்பிக்கையாளர்கள் மனிதநேயக் காரர்கள் அல்லர்; நன்னெறிகளை நம்பிக் கடைப்பிடிப் பவர்களும் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு - உன்னதமான ஒரு மாமனிதரை திட்டமிட்டுக் கொலை செய்ததாகும்.

நான் ஒரு சனாதன இந்து என்று காந்தியார் அவர்கள் மிக வெளிப்படையாகச் சொல்லியிருந்தும், நம்பியிருந்தும், அந்த இந்துவை இந்துத்துவா சக்திகள் விட்டு வைக்கவில்லை.

இந்துத்துவா என்பது இந்துக்களை ஒற்றுமைப் படுத்தக் கூடியது - இந்து மக்களுக்குப் பாதுகாப் பானது என்பது கடைந்தெடுத்த பொய் என்பது தெற்றென விளங்கிவிட்டது. ஒரு சனாதன இந்துவை - ஒரு சனாதன இந்துக் கும்பலே கொன்று முடித்து, இனிப்பு வழங்கியதன்மூலம் இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் வேறு கோணத்தில் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் ஆகிவிடவில்லையா?

இந்துவாக உள்ள ஒருவர் நியாயவாதியாக, பொதுத்தன்மை வாய்ந்தவராக இருக்க முடியாது. அப்படியிருந்தால், அத்தகையவரை இந்துத்துவா காவிகள் காவு கொடுத்துவிடுவார்கள் என்பதும் காந்தியார் கொலை நாட்டு மக்களுக்குச் சொல்லித் தரும் சொக்கத்தங்கமான பாடமாகும்.

காந்தி இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது 7.12.1947 இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948 இல்; அதாவது நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53 ஆம் நாள் கொல்லப்பட்டார்; அதாவது சுதந்திரம் பெற்ற 165 ஆம் நாள் கொல்லப்பட்டார் காந்தி. இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனர்களின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகி விட்டார். அவர் கொல்லப்படாவிட்டால், இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகிவிடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள் என்று கூறியுள்ளார் தந்தை பெரியார் (விடுதலை, 13.1.1965).

இந்துத்துவா என்று சொல்லும்பொழுது இந்து மதத்தின் கொள்கைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதையும்விட, வருணாசிரமத் தன்மையில் முதல் இடத்தில் உரிமைகளை அனுபவிக்கக் கூடிய பார்ப் பனர்களின் நலனைச் சார்ந்ததைத்தான் முக்கியமாகக் கருதப்படுகிறது.
பார்ப்பனர்களைப்பற்றி காந்தியார் தெளிவாகக் கணிக்கத் தொடங்கினார்.
பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகிய மூன்று பிரிவினரும் ஜாதி இந்துக்களானால், அவர்கள் சிறுபான்மைக் கட்சியினர் ஆவார்கள். பிரிட்டீஷார் வெளியேறி, இந்தியாவில் சுதந்திரத்தை நிலைநாட்டிய பின், இருந்த இடம் தெரியாமல் அவர்கள் அழிந்து போக வேண்டியதுதான் (திராவிட நாடு, 12.2.1947) காந்தியாரின் இந்தக் கணக்குக்குப் பிறகும், பார்ப்பன சக்திகள் விட்டு வைப்பார்களா? பார்ப்பனர்களின் கடந்தகால வரலாற்றை நன்கு உணர்ந்தவர்கள் இதனை இம்மியளவு அய்யமின்றி உணர்ந்து கொள்வார்களே!
அழிந்து போவார்கள் என்று சாபமிட்டவரை அழித்துவிட்டனர் பார்ப்பனர்கள்.
பச்சைத் தமிழர் காமராசரைப் பொறுத்தவரை - அவரும் மதவாத சக்திகளால் கொலை செய்யப்பட வேண்டியவராகவே இருந்தார். குறிப்பாக பசுவதைத் தடுப்பு என்ற பெயரால், பட்டப் பகலில் இந்தியாவின் தலைநகரமான டில்லியிலே காந்தியாரைக் கொன்ற கா(லி)விக் கும்பல் கொலை செய்ய எத்தனித்ததா இல்லையா? (7.11.1966).
இந்தக் கொலைக் கும்பலில் ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், சங்கராச்சாரியார், சாதுக்கள் இடம்பெற்றி ருந்தனரே!
காந்தியாரின் பிறந்த நாள் - காமராசரின் மறைவு நாள் தரும் சிந்தனை என்ன?
மதவெறியை மாய்ப்போம் - மனிதநேயம் காப்போம்! என்றார் தமிழர் தலைவர் கி. வீரமணி.

No comments:


weather counter Site Meter