இலைச்சோற்றில்இமயமலையை மறைக்கும் வேலை(1)
பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அமைய வேண்டும் என்பதற்கான நியாயங்களைக் கற்பித்து தினமணியில் (2.10.2010) விரிவான சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது.
1) ஜாதியால் ஆதிக்க வர்க்கம், ஆளப்படுகிற வர்க்கம் என இருந்த காலத்தில், ஆதிக்க வர்க்கத்திற்கு இணையாக ஆளப்படும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக, பொருளாதார நிலைகளில் உயர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், உன்னதமான தலைவர்களால் உருவாக் கப்பட்டதுதான் ஜாதிவாரியான இடஒதுக்கீடு. இது அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது.
அன்றைய கால கட்டத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, முக்கிய பதவிகள் போன்றவற்றில் உயர் ஜாதிப் பிரிவினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இதனால் அன்று ஜாதிவாரியாக இடஒதுக்கீட்டுக்கான அவசியம் இருந்தது. ஆனால், இப் பொழுது கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்ற வற்றில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனை வருமே ஏற்றத் தாழ்வு இன்றி இடம் வகித்து வருகின்றனர். சமூகத்திலும் ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு பார்க்கப்படாமல் அந்தஸ்திலும் உயர்ந்துள்ளனர்... உயர் வகுப்பினர் பலர் கல்வி, வேலை வாய்ப்பு, உயர் பதவிகள் போன்றவற்றில் பின் தங்கிய நிலைக்குச் சென்று கொண்டிருக் கின்றனர் என்று காரணம் கற்பித்து, பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று தினமணியின் சிறப்புக் கட்டுரை கூறுகின்றது.
ஒரு உண்மையைக் காலம் தாழ்ந்து தினமணி ஒப்புக் கொண்டுள்ளது. ஜாதி ஆதிக்கம் ஒரு காலத்தில் இருந்தது; அவர்கள் மற்றவர்களை அடக்கி யாண்டனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது - இது உண்மையான உள்ளத்தின் மாற்றமாக இருக்குமேயானால் அதனை வரவேற்கவே செய்கிறோம்.
அந்தக் காலத்தில் ஏற்றத் தாழ்வு இருந்து வந்தது உண்மைதான். இப்பொழுது ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு கிடையாது என்று அடித்துக் கூறும் தினமணியை நோக்கி நாம் எழுப்பும் வினாக்கள் உண்டு.
(அ) இந்து மதப்படி, இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டதா?
(ஆ) ஆதிக்க ஜாதி என்று தினமணி அடிகோடிட்டுக் காட்டுகிறதே- அந்த ஜாதியினர் ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பிப்பதும், தங்கள் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு பூணூல் கல்யாணம் நடத்துவதும் ஏன்? ஜாதி ஆதிக்க உணர்வு அவர்களிடம் இல்லை என்று தினமணியால் தீர்க்கமாகக் கூற முடியுமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி ஆதிக்கச் சமுதாயத்தில் எவ்வளவு மகத்தானது - மாற்றத்துக்கான அடிப்படையானது. அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று கொண்டிருப்பது - ஏன்?
சங்கராச்சாரியார்கள் வக்காலத்து வாங்குவது - ஏன்? திருமணம் என்று வரும்போது இன்னும் எத்தனைப் பேர் ஜாதிக் கடலைக் கடந்து நீந்தி வருகின்றனர்? இதற்கு அடுத்த கட்டுரையில் தினமணி பதில் சொல்லுமேயானால் அதனை மகிழ்ச்சியோடு வரவேற்கக் காத்துக் கிடக்கிறோம்.
இரண்டாவதாக, தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும் கல்வி, வேலை வாய்ப்புகளில் மிகவும் முன்னேறி விட்டனர்; எனவே அவர்களுக்கு ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்னும் தினமணியின் கருத்துக் குறித்து...
இவர்கள் முன்னேறி வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ளத் தயார்; அதே நேரத்தில் அந்த சதவிகிதம் அவர்களின் மக்கள் தொகைக்கு நிகராக எட்டப்பட்டுள்ளதா?
மத்திய அரசுத் துறைகளில் குரூப் 1 என்ற பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டியுள்ள சதவிகிதம் 13; பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ளது. 5.4 சதவிகிதம். குரூப் பி பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்றுள்ள விழுக்காடு 14.5; பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்திருப்பது 4.2 சதவிகிதம் சி பிரிவில் தாழ்த்தப்பட்டோருக்கு 16.4 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோரில் 6.4 சதவிகிதம். டி பிரிவில் தாழ்த்தப்பட்டோர் 18.3; பிற்படுத்தப்பட்டோர் 5 சதவிகிதத்தை அனுபவிக்கிறார்கள்.
உண்மை இவ்வாறு இருக்க தினமணி உண்மையைத் தலை கீழாகக் காட்டும் புரட்டு வேலையில் ஏன் ஈடுபட வேண்டும்?
இதில் குறிப்பிட்டு ஓங்கி அடித்துச் சொல்லும் மிகப் பெரிய உண்மையைக் காவிக் கொடியில் மறைக்கப் பார்க்கிறது தினமணி.
அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த தேதியிலிருந்து (1950 சனவரி 26) இடஒதுக்கீடு பெறுவதற்கு சட்டரீதியாகத் தகுதி உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, அவ்வாறு அளிக்கப் பட்டதா? அவ்வாறு அளிக்காமல் சதி செய்தோர் யார்?
பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட காகா கலேல்கர் ஆணையத்தின் சிபாரிசுகள் புதை குழிக்குப் போனதன் பின்னணியில் இருந்த பொல்லா மனிதர்கள் யார்? அதுபற்றி எல்லாம் தினமணி எப்பொழுதாவது கண்டு கொண்டது உண்டா?
மண்டல் குழு பரிந்துரைகளைச் செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களைத் தடி கொண்டு தாக்கியதுண்டா தினமணி?
1990இல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோதுதானே முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் (அதிலும் கல்வியில் இல்லை) 27 விழுக்காடு இடஒதுக்கப் பட்டதுண்டு- இந்தச் சமூக நீதி ஆணைக்காக தமது ஆதரவை விலக்கிக் கொண்டு அந்த ஆட்சியைக் கவிழ்த்ததே பா.ஜ.க. - நினைவிருக்கிறதா?
அந்த ஆணையையும் எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே 1992இல் தானே செயல்படுத்தப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு என்ற சட்டம் செயல்படுத்தப்படுவதற்கு இன்றுவரை எத்தனை எத்தனை முட்டுக்கட்டைகள்?
இமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முயலும் தினமணிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் அடையாளம் காண் பார்களாக!
No comments:
Post a Comment