Pages

Search This Blog

Saturday, October 2, 2010

வெளிச்சம் ஏது?

போகாத ஊரில்லை; போன பின்னே
போடாத மேடையில்லை; பேச்சைக் கேட்டு
நோகாத மனமில்லை; நொந்த பின்னே
நும்கருத்தை ஏற்காமல் விட்ட தில்லை!
வேகாத கருத்தில்லை; வெந்த பின்னே
வெடிக்காத புரட்சியில்லை; வெடித்த பின்னே
சாகாத பழைமையில்லை; இன்னு மிங்கே
சாகாத கொடுமைகள் சாயு முன்னே,
சாய்ந்திட்டீர் சரித்திரத்தைப் படைத்து விட்டு!
சந்திப்போம் போராட்டம் என்று சொல்லிப்
போய்விட்டீர் கண்ணீரில் மிதக்க விட்டு!
பேரறிவே! பெருஞ்சுடரே! பெரியார் என்று
வாய் இனிக்க யாரைத்தான் அழைப்போம் அய்யா!
வாயிழந்த ஊமைபோல் தவிக்க லானோம்!
ஓய்வின்றி உழைத்தீரே தாழ்வை நீக்க;
உமைப்போல யாருள்ளார் எமைக் காக்க!
எமைக்காக்க எமக்காக வாழ்ந்தீர்! கண்ணை
இமை காக்கும்; வளர்பயிரை வேலி காக்கும்!
தமைக்காக்கத் தமக்காகக் கட்சி மாறும்
தலைவர்கள் நாட்டிலுண்டு; ஆனால் நீரோ
உமைக்காக்க உமக்காக வாழ்ந்த தில்லை;
உமைஎதிர்க்கத் துணிந்திட்டோர் யாரு மில்லை!
சுமைதாங்கிக் கல்லாக வாழ்ந்தீர் அய்யா!
சுடரொளியே அணைந்திட்டால் வெளிச்சம் ஏது?
- பெருங்கவிஞர் நெ. அ. பூபதி, சென்னை-15

No comments:


weather counter Site Meter