கேள்வி: நடைபாதைகளில் குடிசைகள் ஆக்கிரமிப்புபற்றி படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர் போன்ற ஏடுகள், நடைபாதைகளில் ஆக்கிரமிக்கும் கோயில்கள் பற்றி படத்தையோ, செய்தியையோ வெளியிடுவதில்லையே -_ ஏன்?
- சி. இராசம் கந்தசாமி, சென்னை - 2
பதில்: அவாள் புத்திக்கு இது அப்பட்டமான எடுத்துக்காட்டு. பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்று ஆரிய மாயைபற்றி அண்ணா சொன்னதற்கு அரிய உதாரணம்!
கேள்வி: குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காக மட்டுமே குரல் கொடுப்பவர்கள் சமூகநீதிக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்ள முடியுமா?
-- மு. இரவிச்சந்திரன், திண்டிவனம்
பதில்: அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூகநீதி தத்துவம். என் ஜாதி, என் மதம் மட்டும் என்பது ஒரு குலத்துக்கொரு நீதியே!
கேள்வி: பீகார் தேர்தல் பிரச்சாரத்துக்கு நரேந்திரமோடி வரக் கூடாது என்று நிதீஷ்குமார் கூறுவது -_ ஏன்?
-- மு. சுலைமான், பாளையங்கோட்டை
பதில்: மோடி! (மஸ்தான்) வந்தால் ஓட்டு மர்கயா -_ வாக்கு வங்கியில் தோல்வி என்பது அவரது எண்ணம்.
கேள்வி: போப்பைக் கொலை செய்ய முயன்ற 5 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளனரே?
-- ஜே.ஜோசப், சென்னை-1
பதில்: ஆண்டவரையே கொலை செய்ய முடியுமா? முடியாது எங்களால் என்று அவர்கள் கோர்ட்டில் வாதாடு வார்களோ!
கேள்வி: கணக்கு மற்றும் இலக்கணம் என்றால் மாணவர்களில் பெரும் பாலோர்க்குக் கசக்கிறதே _ பள்ளிப் பருவத்தில் தாங்கள் எப்படி?
-- சா. தமிழரசன் (மாணவன்), சேத்தியாதோப்பு
பதில்: கசக்கவில்லை; இனிக்கவில்லை. மதிப்பெண் கூடுதலாகவும் வாங்கினேன். பொதுவாக எனக்கு கசப்பு பிடிக்கும்.
கேள்வி : மத்திய அமைச்சகத்தில் இணை அமைச்சர் என்று ஒரு பிரிவு இருக்கிறதே - _ இவர்களுக்கு உருப்படி யாக ஏதாவது பொறுப்புகள் உண்டா?
-- ஆடுதுறை ந.கவுதமன், சென்னை-112
பதில்: உண்டே! _ விழாக்களில் கலந்து கொள்வது! சில துறைகளில் இவர்களுக்கு கோப்புகளும் வரக் கூடும்!
கேள்வி : மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இந்தி நாள் கொண்டாடப்பட்டுள்ளதே?
-- கி. சிவாஜி, மதுரை-2
பதில்: தமிழ் வளர்த்த மதுரையிலா இக்கொடுமை! நம் மாணவர்கள் சினிமாவின்முன், தொலைக்காட்சி முன் கிரிக்கெட் மைதானத்தில் திரண்டுள்ளார்களே -_ அதன் பலனா இது?
கேள்வி: ஆண்டாள் -_ரங்கநாதன் உறவு - _ பக்தி என்ற நிலையைக் கடந்து கணவன் _ மனைவி யானது நயத்தக்க நாகரிகம்தானா?
-- புலவர் நக்கீரன், இராசபாளையம்
பதில்: பக்திக்கும், புத்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லையே! பிரம்மா _ சரஸ்வதி உறவை விடவா மோசம் இது?
No comments:
Post a Comment