Pages

Search This Blog

Friday, December 24, 2010

அலைவரிசை அரசியல்... அரசிற்கு வருவாய் இழப்பா...? இல்லவே இல்லை... எப்படி?

உலகிலேயே மிகப்பெரிய சிறந்த ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எவ்வித விவாதமுமின்றி கூச்சல் குழப்பத்துடன் முழுமையாக செயல்படாத நிலையில் முடிவுற்றுள்ளது. இச்செயல் ஜன நாயகத்திற்கே விடப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகும்.

தொலைத்தொடர்பு துறையில் இரண்டாம் தலை முறை 2ஜி சேவைக்கான உரிமம் ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற திட்டத்தின் அடிப்படையில் 2008இல் வழங்கப்பட்டதால் அரசுக்கு 1,76,645 கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்று இந்திய தலைமை கணக்கு அதிகாரி குறிப்பிட்டுள்ளது பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிடிவாதமாக வலியுறுத்தி இச்செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டன.

இதுபற்றிய சில உண்மைகளை பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?

1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை

இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

1995 - ஏலமுறை அறிமுகம்

மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.

1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை

இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.

2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.

தலைமைக் கணக்கு அதிகாரியின் வரம்பு

அரசின் கொள்கை முடிவுகளில் CAG/CVC தலையிட உரிமை இல்லை என்று 10-க்கும் மேற்பட்ட உச்சநீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மத்திய சட்ட அமைச்சகம் 13.8.2010 அன்று தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றம் இப்பிரச்சினையில் இத்தீர்ப்புகளை வசதியாக கண்டு கொள்ளாதது வியப்பாக உள்ளது.

என்னதான் சொல்கிறது CAG?

இல்லாத ஏலமுறையை 2ஜி உரிமம் வழங்குவதில் கடைப்பிடிக்காததாலும், ஒருங்கிணைந்த உரிமம், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின் பற்றப்படாததாலும், மற்றும் அனுமதிக்கப்பட்ட அலைக் கற்றைக்கு உபரியாக பயன்படுத்தும் அப்போதைய நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாத தாலும் இராசா காலத்தில் ரூ.1,76,645 கோடி வருவாய் இழப்பு என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கூற்று சரி தானா?

முதலாவதாக, 2001-க்குப் பின்பு ராசா பதவி ஏற்கும் மே 2007 வரை, ஏலமுறை எந்த அமைச்சராலும் பின் பற்றப் படவில்லை. முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உரிமைக் கட்டணமாக ரூ.1658 கோடி என்ற நடைமுறைதான் பின்பற்றப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 28.8.2007இல் கூட டிராயின் வழிகாட்டுதலிலும் 2ஜி-க்கு ஏலமுறை தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (In the 2G bands (800 MHz, 900MHz, 1800MHz, allocation through auction may not be possible.)

இந்த அடிப்படையில்தான் 2008-லும் 122 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, இது பற்றிய சர்ச்சை மற்றும் விவாதங்கள் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிறகும் இந்தக் கொள்கைகளில் வழிக்காட்டக் கூடிய TRAI அமைப்பும் 11.5.2010இல் 2ஜி அலைக்கற்றைக்கு ஏலமுறைதேவை யில்லை என்று குறிப்பிட்டுள்ளது. (Spectrum in 800, 900 and 1800 MHz bands should not subject to Auction).

தவிரவும், 3ழு சேவைக்கான 800, 900, 1800 MHz. MHz ஏலக்கற்றைகளுக்கு, ஏல முறையை பரிந்துரைத்து உள்ளது. இப்போதைய அமைச்சர் கபில்சிபல் அவர்களும் ஏலமுறை சிறந்த வழியல்ல (­Auctions may not be the best way to award spoectrum) என்றும்,இது கட்டண உயர்விற்கே வழி வகுக்கும் என்றும், மீண்டும் 1995 ஆம் ஆண்டு தோல்வி அடைந்த ஏலமுறையை சுட்டிக் காட்டிக் கருத்துக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே முந்தைய அமைச்சர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளைப் பின்பற்றித்தான் இராசா அவர்களும் உரிமங்கள் வழங்கியுள்ளார். எந்த புதிய நடை முறையையும் அவர் கையாளவில்லை. எனவே வருவாய் இழப்பிற்கு இராசா அவர்கள்தான் காரணம் என்பது நியாயமற்றது.

தவறான தகவல் அடிப்படையில் சில நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளதாக CAG -யால் தற்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனங்கள் தங்களின் தகுதியை நிரூபிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட உரிமம் பெறும் நிறுவனங்களில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாமே தவிர, அரசிற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கு இடமில்லை. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ரூ.1658/- கோடியில் மாற்றம், ஏதுமில்லாதபோது வருவாய் இழப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. எனவே, ஏலமின்றி 2ஜி உரிமங்கள் கொடுக்கப்பட்டதால் ரூ.1,02498/- கோடி வருவாய் இழப்பு என்பது ஒரு மாயத் தோற்றமே!

2003-இல் அமைச்சரவை முடிவின்படி, (Uniful Access Service) ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமங்கள், புதிய நிறுவனங்களுக்கு வழங்குவதில் ஏலமுறை பின்பற்றப்படவில்லை என்று கூறுகிறதுCAG.
TRAI--ன் வழிகாட்டுதலின் படி முந்தைய அமைச் சர்களால் 51 புதிய நிறுவனங்களுக்கு ஏலமின்றி உரி மங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதே நடை முறையையே இராசா அவர்களும் பின்பற்றியுள்ளார். இதில் நடை முறை மீறல் எதுவுமில்லை. எனவே இதனடிப் படையில் ரூ.37,154/- கோடி வருவாய் இழப்பு என்பதும் அர்த்தமற்ற கூற்றாகும்.

மேலும் அனுமதிக்கப்பட்ட (4.4MHz) அலைக்கற் றையை விட கூடுதலாகப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என்பது CAG- ன் கண்டுபிடிப்பு. உரிமக்கட்டணத்துடன் GSM உரிமம் பெற்றவர்களுக்கு 4.4 4.4 MHz--ம், CMDA உரிமம் பெற்றவர்களுக்கு 2.5 MHz- ம், கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும். ஆனால், 1996 - 2001, மற்றும் 2002-லும் எந்தவிதமான ஏலமோ, நிர்ணயிக்கப்பட்ட கட்டணமோ இன்றி, இலவசமாக 1.8 MHz அலைக் கற்றை, ஏர்டெல், வோடபோன், அய்டியா, ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. 2002-இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மறைந்த மகாஜன் இதே நடைமுறையை பின்பற்றி எந்தவிதமான முன் கட்டணமுமின்றி (Upfront Charges) ஒலிக்கற்றை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இராசா அவர்கள் பொறுப்பிற்கு வரும்வரை 150 MHz அலைக்கற்றை மிகத் தாராளமாக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவுகட்ட உத்தேசித்த இராசா TRAI- இன் கருத்தினைக் கேட்டிருந்தார். அந்த அமைப்பு 2010- மே மாதத்தில்தான் 6.2 MHz -க்கு மேல் 2ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தும் நிறுவனங் களிடமிருந்து 3ஜி ஏலத்தொகைக்கு இணையான தொகையை வசூலிக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பிரச்சினை கூடுதலாக அலைக்கற்றையை அனுபவித்த நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்ப்புகளை ஒட்டி மீண்டும் TRAI -ன் பரிசீலனையில் உள்ளது. எனவே இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டி கூர்மைப் படுத்திய ஒரே அமைச்சர் இராசாவால் ரூ.36,645/- கோடி அரசிற்கு வருவாய் இழப்பு என்பது விந்தை யானது.

எனவே, 2003-ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்ட ஏலமுறையை இராசா பின்பற்றவில்லை எனக் கூறுவதும், அதனால் வருவாய் இழப்பு என்றும் கூறுவதும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.

விண்ணப்பம் பெறும் தேதி மாற்றம்(Cut off - Date)

விண்ணப்பங்கள் பெறுவதற்கு 1.10.2007 என்று தேதி நிர்ணயிக்கப்பட்ட போதும் 25.9.2007 கடைசிதேதி என்று நிர்ணயித்தது ஏன்? என்ற சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே உரிமம் கோரி காத்திருந் தோர் மற்றும் ஓரிரு தினங்களில் விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 232-ஐ தாண்டிய நிலையில் 1.10.2007 வரை 575 விண்ணப்பங்கள் வந்தன. இவற்றுள் 25.9.2007 வரை பெறப்பட்ட 232 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 122 நோக்கம் தெரிவிக்கும் கடிதம் (Letter of Indent) கொடுக்கப்பட்டுள்ளது. மீதமிருப் போருக்கும் அலைக்கற்றை இருப்பை கணக்கில் கொண்டு பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் பதவியில் இருந்த வரை இராசா அவர்கள் கூறியுள்ளார். எனவே, முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற கொள்கை யின் அடிப்படையில் இந்தத் தேதி மாற்றத்தால் பயன்பெறப் போகும் நிறுவனங்களின் வரிசை மாறப் போவதில்லை. கையிருப்பில் உள்ள அலைக்கற்றை அளவைக் கணக்கிட்டு 122 பேருக்கு மட்டுமே வழங்க முடியும் என்கின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப் பட்டது. இதில் எவ்விதத் தவறும் நிகழவில்லை. நோக்கம் தெரிவிக்கும் கடிதம் கொடுக்கப்பட்ட உடனேயே 122 நிறுவனங்களில் 78 பேர் உடனே கேட்புக் காசோலை (Demand Draft) களைக் கொடுத்தது எப்படி? என்று கேட்கப்படுகிறது. தகுதியிருப்பின் தாங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணம் (ரூபாய் 1,658/- கோடி) என்பது எல்லோருக்கும் முன்பே தெரிந்த நிலையில் அதற்குரிய முன்னேற்பாடுகளுடன் வருவதில் வியப்பென்ன?

2001 ஜனவரியில் அடிப்படைச் சேவைக்கு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற விதிகளின்படி விண்ணப்பங்கள் பெற காலை 4மணி முதலே கையில் கேட்புக் காசோலைகளுடன் காத்திருந்த முன்னு தாரணங்கள் ஏராளம்.

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை விதி மீறப்பட்டுள்ளதா?

நோக்கம் தெரிவிக்கும் கடித (LOI) த்தின்படி தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதலில் உரிமம் தரப்படும். இந்தச் சூழ்நிலையில் தங்களது தகுதியை (கட்டணம் செலுத்துதல், வங்கி உத்திரவாதம் போன்ற) முதலில் நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அந்த அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடை முறை இந்திய சொலிசிட்டர் ஜெனரலிடமும் ஆலோசிக் கப்பட்டு கருத்து பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. ஆகவே, முதலில் வருவோர்க்கு முன் னுரிமை என்ற விதி மீறல் இல்லை.

ஏலமுறை இல்லாததால் வருவாய் இழப்பா?

ஏலமின்றி முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு (Revenue Sharing) வழங்கப்பட்டு உள்ளதால் இதுவரை ரூ.90,000/- கோடிகள் அரசிற்கு வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.13,588/- கோடியாகும். 3ஜி ஏலத்தில் பெற்ற தொகை ரூ.67,718 கோடிதான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். உயர் தொழில்நுட்பமான 3ஜி-க்கே ரூ.67,718/- கோடி என்றால், 2ஜி-தொழில்நுட்பத்திற்கு எவ்வளவு கிடைத்திருக்கும் என்று சிந்திக்கவேண்டும்.

மேலும் இந்த வருவாயில் பங்கு என்ற நடைமுறை ஒரு பொன் முட்டையிடும் வாத்து. மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் இந்த வருவாய் பல மடங்காக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. நாளும் பெருகி வரும் தொலைபேசி அடர்த்தி (Tele density) இதற்கு வழி வகுக்கும். அது மட்டுமல்ல, 3ஜி-க்கு மக்களிடம் உள்ள வரவேற்பும், சந்தையும் உற்சாகம் அளிப்பதாக இல்லை. சமீபத்தில் நீல் சன் ஆய்வு நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற வாடிக்கையாளரிடம்கூட 5 இல் ஒருவர் மட்டுமே 3ஜி-க்கு மாறத் தயாராக உள்ளனர். இந்த நிலையில் 2ஜி-சேவை மூலம் தற்போதைய நிலையில் நிரந்தர வருவாய் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அளவில் வருவாயை ஈட்டிக் கொடுக்கக்கூடிய இந்த வருவாயில் பங்கு என்ற இந்த சிறப்பான திட்டத்தை CAG தன்னுடைய கவனத்தில் கொள்ளாதது மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இராசா அவர்களின் காலத்தில்...

இராசா அவர்கள் பொறுப்பேற்றபொழுது தொலைப்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 29 கோடி; ஆனால் இன்று 73 கோடி தொலைத் தொடர்பு அடர்த்தி - 100 பேருக்கு 75 பேர்கள் என்ற அளவில் உள்ளது. 2007 இல் ஒரு நிமிடத்திற்கு ரூ.1/- என்றிருந்த கட்டணம் இன்று 0.30 பைசாவாகக் குறைந்துள்ளது. மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. உலகில், இந்தியா மொத்தத் தொலைத் தொடர்பு எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் கட்டண அடிப்படையில், உலகிலேயே மிகக் குறைந்த கட்டணம் இந்தியாவில்தான் உள்ளது. இந்திய அரசின் மொத்த வருவாயில் 25 சதவிகிதம் தொலைத் தொடர்பு துறை மூலம் கிடைக்கிறது. 2007 இல் மாதம் ஒன்றுக்கு 7.5 லட்சம் புதிய இணைப்புகள் என்ற நிலை மாறி இன்று மாதம் ஒன்றுக்கு 1.75 கோடி இணைப்புகள் கொடுக்கப் படுகிறது. மூடி மறைக்கப்பட்டு, போட்டியை உருவாக் காமல் ரகசிய பரிவர்த்தனையாக இருந்த அலைக் கற்றையை கவனத்திற்குக் கொண்டு வந்தவர் இராசா அவர்கள்தான்.

எதிர்ப்புகளுக்கு இடையில், இரண்டு ஆண்டு களுக்கு முன்பே 3ஜி ஒலிக்கற்றை சேவையை தனியார் போட்டிகள் நிறைந்த சூழலில் பொதுத் துறை நிறுவனங்களான BSNL/MTNL நிறுவனங்களுக்கு வழங்கி, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கச் செய்து, மக்களுக்கு வழங்கினார். இதனால் 3ஜி சேவையில் நுழைய உள்ள தனியார் நிறுவனங்களின் உயர் கட்டண வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது அமைச்சர் இராசாவின் பொதுத் துறைக்கு ஆதரவான நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

BSNL பங்கு விற்பனையை தடுத்து நிறுத்தியதின் மூலம் தனியார் ஆதிக்கத்தை தனியார் நுழைவை தடுத்து BSNL - அய்ப் பாதுகாத்தார்.

தொலைத் தொடர்பு ஊழியர்களைப் பொறுத்தவரை பொறுப்பேற்ற காலம் முதல் ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படி இணைப்பு, புதிய ஊதிய உயர்வு, புதிய பதவி உயர்வு, பென்சன் பிரச்சினைகள்,ITS அதிகாரி களை நிறுவனத்திற்குள் கொண்டு வருதல், ஊழியர் களின் சங்க சந்தாவை சம்பளத்தில் பிடித்தம் செய்தல் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் நலத் திட்டங் களுக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் செயல்பட்டு தான் தலைவர் கலைஞர் அவர்களின் உண்மைத் தம்பி என்பதை நிரூபித்து ஊழியர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

யாருக்கு இழப்பு?

பல்லாண்டுகளாக தொலைபேசி உயர் கட்டணம் மூலமாக இந்திய மக்களைக் கொள்ளையடித்து வந்த ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தை, புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் தகர்த்தெரிந்து கட்டணக் குறைப்பிற்கு வழி வகுத்த காரணத்தால் கொள்ளை லாபம் அடித்த அந்த கும்பலுக்குத்தான் வருவாய் இழப்பு. இந்தியாவிலுள்ள 110 கோடி மக்களில் 70 கோடி மக்கள் இன்றைக்கு தொலைபேசி வசதியை, உலகிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி வரும் ஒரு மாபெரும் புரட்சியை இராசா நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஆனால், தங்கள் ஆதிக்கத்தை இழந்த தனியார் நிறுவனங் களுக்கும், இதை பூதாகாரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சில அரசியல் கட்சிகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வணிக நோக் கோடு பரபரப்போடு வெளியிட்டு அற்ப சந்தோசப்படும் ஊடகங்களுக்கும் வேண்டுமானால் இராசாவின் செயல்பாடுகள் இழப்பாகத் தோன்றலாம். ஆனால் அரசுக்கோ, இந்திய மக்களுக்கோ அல்ல.

வே. சுப்புராமன்

செயலாளர், தொ.மு.ச. பேரவை

அகில இந்தியப் பொதுச்செயலாளர்,

தொலைத்தொடர்பு தொ.மு.ச.
http://www.viduthalai.periyar.org.in/20101223/news29.html

2 comments:

Unknown said...

எல்லாம் சரிதான். இதைத்தான் ராசா சம்பத்தபட்டவர்கள் எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்களே. எதிர் கட்சிகள் கேட்பது போல JPC அமைத்து இந்த உண்மைகளை சொல்லி மக்களுக்கு தெளிவு படுத்துவதில் ஆளும் கட்சிக்கு என்ன நஷ்டம் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

அசுரன் திராவிடன் said...

சி பி ஐ விட jpc விசாரணை யை நம்புகிரிர்களே? அதுவும் உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.jpc என்பது அரசியல் லாபத்திற்காக எதிர் கட்சிகள் நடத்தும் ஒரு நாடகம்.ஒரு நபர் விசாரணை,முரளி மனோகர் ஜோசி தலைமையில பொது கணக்கு குழு விசாரணை ,சிபியி விசாரணை இதை விட இன்னும் விசாரணை தேவை என்கிறார்கள் சற்று யோசியுங்கள்.


weather counter Site Meter