Pages

Search This Blog

Tuesday, December 14, 2010

மதவாதம் + ஊழல் = பி.ஜே.பி.

 
20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல்!
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழலைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஆம், மத்திய அரசுக்கு வர வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்-வரும் 10 ஆண்டுகளில் ஏற்படவிருக்கும் செல்லுலர் தொலைபேசி ஊழல் தான் அது! இந்த நூற்றாண்டில் துவங்கு இவ்வூழல் அடுத்த 21 ஆம் நூற்றாண்டிற்கும் செல்லவிருக்கிறது. இது அரிய சாதனை தான்!
நல்ல பிரதமர், ஜென்டில்மேன்-பாலிட்டீஷியன் திரு.வாஜ்பேய் தலைமையில் உள்ள பி.ஜே.பி. ஆட்சியில்தான் இந்த ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது! ஊழலும் மதவாதமும் ஒருங்கே எப்படிக் கைகோர்த்து செல்லுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப் பூர்வ ஆங்கில வார ஏடான நியூ ஏஜ் (New Age) ஏட்டில் (ஜூலை 16-24) முன்பக் கத்தில், பிரதமர் உடந்தையாக இருந்து நடந்துள்ள அரசு கஜானாவின் மிகப்பெரிய கொள்ளை என்ற தலைப்பிட்டு, திரு.ஷமீன் ஃபெய்க் என்பவர் எழுதியுள்ள கட்டுரையினைக் கீழே தமிழாக்கித் தருகிறோம்.
ஊன்றிப்படித்து, ஊழலும், மதவாதமும் ஒருங்கே எப்படி டில்லியில் ராஜ நடை போடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
- கி. வீரமணி
50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு- பிரதமருக்குத் தொடர்பு
செல்லுலார் தொலைப்பேசி உரிமையாளர்கள், அடிப்படைத் தொலைப்பேசி வசதிகளைச் செய்து தருவோர் ஆகிய தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கான விதிமுறைகளில் கடந்த வாரம் மத்திய அரசு மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்தது.
லைசென்ஸ் கட்டணம் செலுத்துவது, வருமானத்தில் ஒரு பங்கை அளிப்பது என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு தனியார் தொலைப்பேசி உரிமையானர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கை யில் ஆறுமாதங்களுக்கான லைசென்ஸ் கட்டணத்தைத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதனால் அரசு வருவாயில் ரூ.3,800 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கையால் மிகப்பெரிய அளவுக்கு நன்மை அடைபவர்கள் யார் தெரியுமா? நான்கு மாநகரங்களில் (ஆநவசடிள) செல்லுலார் தொலைப்பேசியை இயக்குகின்ற எட்டு தனியார் தாம் இதனால் நன்மையாடைந்துள்ளனர். அந்த எட்டு பேர் மட்டுமே ஏகபோகமாகவும், தொடர்ந்து பல ஆண்டுக் காலத்திற்கும் வருவாயில் பங்கு (revenue Share formula) என்ற அடிப்படையில் செல்லுலார் தொலைப்பேசியை இயக்க லாம் என்று மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது. இதனால், லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டிய 10 ஆண்டுக்கால அளவில் அரசு ரூ.50,000 கோடியை இழக்கிறது.
இந்த மாறுதல்கள், அதனால் கிடைக்கின்ற நன்மைகளைப் பெறுவதற்காகத் தனியார் தொலைத் தொடர்புக் கூட்டத்தினர் கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்தே கடுமையான முயற்சி களைச் செய்து வந்தனர். அதாவது கஷ்மாசுவராஜ் டில்லிக்கு முதல்வராக அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, தொலைத் தொடர்பு அமைச்சகப் பொறுப்பைப் பிரதமர் வாஜ்பேயி எப்பொழுது எடுத்துக் கொண்டாரோ அப்பொழுதிலிருந்தே இந்த முயற்சிகள் நடந்து வந்தன.
அமைச்சர் ஜக்மோகன் எதிர்ப்பு!
9 மாத காலத்தில் தொலைத் தொடர்புக் குழுவினர் பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்புடன் ஜக் மோகனை ஒதுக்கிவைத்திருந்தனர். ஏனென்றால், 1999ஆம் ஆண்டுக்கான புதிய தொலைத்தொடர்புக் கொள்கையில் தேவையான மாறுதல்களைச் செய்ய வேண்டாமென்று அமைச் சரவையை வற்புறுத்தியதுடன், மாறுதல்களைச் செய்யா விட்டால் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை, ஏற்க முடியாதென்று ஜக்மோகன் மறுத்துவந்தார். புதிய தொலைத் தொடர்புக் கொள்கை அந்நியப் பங்கு முதலீடுகளுடன் கம்பெனிகளை நடத்திவருகின்ற தனியார்க்கு சலுகை செய்வதாகவும், அரசுக்குப் பேரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்ற காரணத்தினால்தான் ஜக்மோகன் அந்தக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.
இந்த வகையில், ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரச் செலவுகளுக்காகப் பெரிய அளவில் நிதிஉதவி செய்வதாகத் தனியார் தொலைப்பேசி இயக்குநர்கள் உறுதி யளித்திருப்பதாகவும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒரு சிலர்க்கும், பிரதமரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் மிகப் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
வாஜ்பாய் அரசின் தொலைத் தொடர்புத்துறை ஊழலில (Telecom Scam) ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல் என்று விஷயமறிந்த வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகின்றது.
ஊழலின் விவரம்
1994-ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புக் கொள்கை யின்படி, செல்லுலார் தொலைப்பேசிகளை இயக்குதல், அடிப்படைத் தொலைப்பேசி வசதிகளைச் செய்தல் ஆகிய இரு பிரிவுகளிலும் தனியார் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அதற்காக பகிரங்க டெண்டர்கள் விடப்பட்டன. கூடுதல் தொகைக்குக் கேட்டவர்யாரோ அவர் செயல் படுவதற்குக் குறிப்பிட்ட வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டன.
செல்லுலார் இயக்கத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநகரத்திற்கும் (Metro City) இரண்டு கம்பெனிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தனியார் தொலைப்பேசி இயக்குநர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். மீதியுள்ள ஏழு ஆண்டு களுக்கும் வெவ்வேறு வகையில் உயர்த்தப்பட்ட கட்டணம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, மும்பையில் செயல்படுகின்ற தனியார் தொலைப்பேசிக்காரர்கள், முதலாவது, இரண்டாவது, மூன் றாவது ஆண்டுகளுக்கு முறையே ரூ.3 கோடி, ரூ.6 கோடி, ரூ.12 கோடி லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நான்காவது ஆண்டிலிருந்து, ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு நூறு தொலைப் பேச்சுக்கும் (For Each Hundred Phone Per Year) ரூ.5 இலட்சம் தனியார் தொலைப்பேசி இயக்குநர் களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். நான்காவது, அய்ந் தாவது, ஆறாவது ஆண்டுகளுக்கான குறைந்த அளவுக் கட்டணம் ஓர் ஆண்டுக்கு ரூ.18 கோடி; ஏழாவது ஆண்டி லிருந்து பத்தாம் ஆண்டு வரை ஓர் ஆண்டுக்குக் குறைந்த அளவு கட்டணம் ரூ.24 கோடி. அடிப்படைத் தொலைப்பேசி வசதிகளைச் செய்துதருகின்ற தனியாரைப் பொறுத்த வரையில், மொத்தமுள்ள பணிகளில் (of the total lines) பத்து சதவிகிதத்தை சமூகநல உதவியாக (ளடிஉயைட டீடெபையவடி) கிராமங்களுக்குச் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.
கட்டணம் செலுத்தவில்லை!
ஒப்பந்தம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் அநேகமாக எல்லா ஒப்பந்தக்காரர்களுமே லைசென்ஸ் கட்ட ணத்தை முறையாகச் செலுத்தவில்லை. அடிப்படைத் தொலைபேசி வசதிகளைச் செய்வதாக ஒப்பந்தம் செய்தவர்கள், அவர்கள் உறுதியளித் திருந்தபடி, சமூகநல உதவிப்பணி எதையும் செய்யவில்லை!
தனியார் தொலைபேசி இயக்குநர்கள் செலுத்த வேண்டிய கட்டணப் பாக்கி ஏறிக்கொண்டே வந்த நிலையில், இந்தியாவின் தலைமைத் தணிக்கை அதிகாரியிடமிருந்து (Comptroller and Auditor General of India) மீண்டும் மீண்டும் கண்டன அறிவிக்கைகள் (Strictures) அனுப்பப்பட்டன. மேலும், முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். தொடர்புடைய அதிகாரி களுக்கு எதிராக முன்னாள் பிரதமர் தேவகவுடா கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
நீதிமன்றத்தில் புகார்!
டில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் (Public Interest Litigations) தாக்கல் செய்யப்பட்டன. பொதுவான விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தனியார் தொலைப்பேசி இயக்குநர்கள் ஒன்றுசேர்ந்து சில சலுகை களைக் கோரினர். அவர்களுக்குத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் அவர்கள் செலுத்த வேண்டிய கட்டண பாக்கியைத் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். கட்டணம் செலுத்துவதற்கான கால அளவில் மாறுதல் செய்ய வேண்டுமென்றும், எந்தத் தேதியிலிருந்து லைசென்ஸ் கட்டணம் விதிக்க வேண்டும் என்பதையும் கூட அவர்கள் கோரிக்கையாக வைத்தனர்.
பாரதி செல்லுலார் லிமிடெட் கம்பெனியின் உரிமையாளரான சுனில் மிட்டல் என்பவர், தனியார் தொலைத் தொடர்பு இயக்கு நர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அரசை வழிக்குக் கொண்டுவரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சுனில் மிட்டலின் கம்பெனி 49 சதவிகித அந்நியப் பங்கு முதலீட்டைக் கொண்டது. அந்தப் பங்குமுதலீடு பெரும்பாலும் நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டவை.
தங்களுக்குச் சாதகமான சலுகைகளை வழங்கினால் அதற்குப் பிரதி உபகாரமாக ஆட்சியாளர் எதைக் கேட்டாலும் கொடுப்பதற்குத் தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்கள் தயாராக ஒன்றுபட்டு நின்றனர் என்று விஷயமறிந்த வட்டாரங் களிலிருந்து அறிய முடிகிறது.
பாரதி செல்லுலார் லிமிடெட் கம்பெனியின் உரிமையாளரான சுனில் மிட்டல் அடிக்கடிப் பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று வரக்கூடியவர் என்றும் பிரதமரின் வளர்ப்பு மருமகனிடம் (adopted Son-in-law) நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
சாயிபாபாவின் பங்கு
ஆந்திர மாநிலத்தின் புட்டபர்த்தியில் உள்ள கம்பெனியின் தன்னைப் பகவான் என்று சொல்லிக்கொள்கின்ற சாயிபாபாவும் இந்தப் பேரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, சாயிபாபா டில்லி சென்றிருந்தபோது கோஷிகா, என்ற கம்பெனியின் உரிமையாளரான குல்வந்த்ராய் என்பவரின் இல்லத்தில் தங்கியிருந்தார். குல்வந்த்ராய் இன்னொரு தொலைத் தொடர்புக் கம்பெனியை இயக்குபவர் ஆவார். பிரதமர் வாஜ்பேயி சாயிபாபாவைத் தரிசிப்பதற்காக குல்வந்தராயின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
எஸ்ஸார் (Essar) கம்பெனியின் உரிமை யாளர்கள் மட்டுமல்லாமல், தொலைத் தொடர்புத்துறையைச் சேர்ந்த இன்னொரு பெரிய புள்ளியும் மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத் வானிக்கு மிக நெருக்கமானவர்கள். கடந்த செப்டம்பரில், தொலைத்தொடர்பு அமைச்சகத்தைத் தற்காலிகமாக வாஜ்பேயி தன் பொறுப்பில் வைத்துக்கொண் டிருந்தபோது, தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் கோரிக்கைகளைஅமைச்சரவை பரிசீலனை செய்தது; அதனைத் தொடர்ந்து, அயலுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைப் பின்னிருந்து இயக்கும் சக்தியாகக் கொண்டு ஒரு தொலைத் தொடர்பு குழு(Group of Telecommunication GoT) அமைக்கப்பட்டது.
தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களுக்கு உதவி செய்வதற்கான வழிவகைகளைக் கண்டுபிடிப்பதுதான் அந்தக் குழுவின் மிகப்பெரிய பணியாகும். அந்தக் குழு தனது பணியைச் செய்து கொண்டிருந்த போது, ஜக்மோகன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சர் (ஜக்மோகன்) பிரதமர் அலுவலகத்தால் தொடங்கிவைக்கப்பட்ட நற்பணியை (the good work) தொடர்ந்து நடத்துவார் என்றும், தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அட்டர்னி ஜெனரலின் மறுப்பு
ஆனால் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்கள் செலுத்தவேண்டிய லைசென்ஸ் கட்டணப் பாக்கி ரூ.300 கோடியில்; ரூ.3.5 கோடி மட்டுமே செலுத்தப் பட்டிருந்தது. லைசென்ஸ் கட்டணப் பாக்கியில் 20 சதவிகிதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று தொலைத்தொடர்புக் குழு (GoT) ஆலோசனை கூறியது. இது ஒரு இடைக்காலச் சலுகை நடவடிக்கைதான் என்று அட்டர்னி ஜெனரலிடம் கூறப்பட்டது.
ஆனால், ஒப்பந்த விதிமுறைகளில் மாறுதல் செய்வதற்கான ஆலோசனையை ஏற்க அட்டர்னி ஜெனரல் மறுத்துவிட்டார். அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி 1999, ஜனவரி, 6 ஆம் நாளிட்ட அவரது குறிப்பில் பின்வருமாறு கூறியிருந்தார்:
லைசென்ஸ்தாரர்கள், லைசென்ஸ் விதிமுறைகளை மீறுவது, மிக அதிக அளவுத் தொகையைப் பாக்கியாக வைத்திருப்பது, தவறான செய்லபாடுகளால் நிதிநெருக்கடி நேர்ந்து விட்டது என்பதைக் காரணமாகக் காட்டிப் பெரிய அளவிலான சாதகமான மாறுதல்களைச் செய்யக் கோருவது ஆகியவற்றுக்கு ஆதரவு காட்டுவதாக அரசின் நடவடிக்கை அமைந்துகூடக்கூடாது. கட்ட ணத்தைச் செலுத்தத் தவறியவர்களுக்குச் சாதகமாக, செலுத் தப்படாத பாக்கித் தொகையில் குறைந்த அளவே செலுத்தினால் போதும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கக்கூடாது.
- இவ்வாறு அட்டர்னி ஜெனரல் கூறியிருந்தார்.
தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களுக்குச் சலுகைகள் வழங்க வாஜ்பேயி அரசு திட்டமிட்டிருந்தது என்பது அட்டர்னி ஜெனரலின் குறிப்பிலிருந்து மேலும் வெளியாகிறது. சோலி சொராப்ஜி அதே குறிப்பில் மேலும் கூறியிருந்ததாவது:
லைசென்ஸ் கட்டணத்தைப் பாக்கியில்லாமல் செலுத்திய வர்களும் கட்டணத்தைச் செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பவர் களும் சமநிலையில் நடத்தப்படுவது அந்த ஏற்பாட்டில் இன்னொரு ஏற்கத் தகாத அம்சமாகும்.
லைசென்ஸ் கட்டணத்தை முழுமையாக-முறையாகச் செலுத்தாதவர்களுக்கும் அரசுக்குமிடையே நடைபெறுகின்ற பேச்சுவர்த்தைகளைப் பற்றி அறிந்துகொண்டபிறகு முழுமையாகக் கட்டணம் செலுத்தியவர்கள் செலுத்தும் கட்டண அளவும் குறைந்து கொண்டேவருவதாக நான் அறிகிறேன்.
அட்டர்னி ஜெனரலின் கருத்து உண்மையானதுதான் என்று நிரூபணமாகியிருக்கிறது. கோஷிகா கம்பெனி உள்ளிட்ட 2 கம்பெனிகள், கட்டணத் தொகையில் 20 சதவிகிதத்தைக் கூடச் செலுத்த மறுத்துள்ளன. பாக்கித் தொகையை முழுமையாகத் தள்ளுபடி செய்வதற்கான வழிவகைகளைக் காண்பதில் அவை ஈடுபட்டுள்ளன. இவ்வாறு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சர் ஜக்மோகன் மறுப்புத் தெரிவித்தார். தனியார் தொலைத் தொடர்பு இயக்கு நர்களிடமிருந்து பாக்கித்தொகை முழுமையாக வசூலிக் கப்பட வேண்டுமென்று வற்புறுத்தினார். ஒப்பந்த விதிமுறைகளில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்ற ஆலோசனையையும் அவர் கடுமையாக எதிர்த்தார்.
அமைச்சர் ஜக்மோகனின் 11 கேள்விகள்
லைசென்ஸ் விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான முயற்சி குறித்து அமைச்சர் ஜக்மோகன் எழுத்துவடிவில் தனது கோப்பில் 11 கேள்விகளை எழுப்பினார். அந்தக் கேள்விகள்:
1. டெண்டர் போட்டி முறையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டபிறகு, அந்த ஒப்பந்த உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பது சட்டரீதியாக, (Legally), அரசியல் சட்டப்படி (Constitutionally), நிதி வருமான ரீதியாக (financially), வணிக ரீதியாக (commercially), ஒழுக்கரீதியாக (morally) நியாயமானது தானா?
2. அரசுப் பணத்தில் ரூ.4000 கோடி அளவுக்கு வசூல் செய்யப்படாமல் இருப்பது குறித்து மக்களும், பத்திரிகைகளும், நாடாளுமன்றமும், ஆடிட்டர் ஜெனரலும், நீதிமன்றங்களும் என்ன கருதுவார்கள்?
3. சில கம்பெனிகள் அவற்றின் பங்கு முதலீட்டை விற்று மிகப்பெரிய அளவுக்கு இலாபம் அடைந்துள்ள நிலையில், அவர் களுடைய தொழில் (business) நன்றாக நடைபெறவில்லை என்று சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அந்தக் கம் பெனிகள் சலுகைகளைக் கோரி இப்பொழுது கொடுத்து வருகின்ற நெருக்கடி, பங்கு முதலீட்டை அதிகரித்துக் கொள்வதற்குரிய ஒரு ஏமாற்று வேலை அல்லவா?
4. பெரும்பாலான, அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்கான முதலீடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் - எதிர்காலத்தில் வரு மானத்தைச் சேர்த்துக் கணக்கிட வேண்டிய நிலையில், சந்தா தாரர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடிக்கொண்டே போகின்ற நிலையில்- இந்தக் கால கட்டத்தில் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று அந்தக் கம்பெனிகள் சொல்வது என்ன நியாயம்?
5. லைசென்ஸ்தாரர்கள், அவர்கள் சொல்வதைப்போல நஷ்டம் அடைந்திருப்பார்களானால், அவர்களில் ஒருவர் கூட லைசென் சைத் திருப்பிக் கொடுக்க (to surrender) முன்வராதது ஏன்? ஒரு தொழில் முயற்சியில் நஷ்டத்தைப் பெருக்கிக்கொண்டே இருப்பார் என்று சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இருக் கிறதா?
6. ஒரு தொழில் சரியில்லையானால் அந்தத்துறையில் புதிய லைசென்ஸ்கள் பெறுவது எப்படி முடியும்? தொலைப்பேசி அடிப் படைச் சேவைக்காக 1998 மார்ச்சில் ஷியாம் டெலிலிங்க் கம்பெனி யும் செல்லுலார் சேவைகளுக்காக 1998 மே மாதத்தில் சிறீநிவாஸ் செல்காம் கம்பெனியும் புதிய லைசென்ஸ் களைப் பெற்றது எப்படி?
7. தொடக்கத்தில் கணக்கிடப் பட்டதைவிட அதிக இலாபத்தை அந்த லைசென்ஸ்கள் தந்திருக்குமானால், கூடுதல் இலாபத்தை அரசுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் முன்வருவார்களா?
8. தனியார் துறைத் தொழில் உரிமையாளர்கள் அரசின் தலையீட்டை விரும்புவது எந்தவகையில் நியாயம்?
9. ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித் தனியே வெவ்வேறு வட்டாரங்கள் செயல் பாட்டுக்காகப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கம்பெனியும் தனித்தனியே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் ஒன்றுபட்டு ஒரே வகையான கோரிக் கையை எழுப்புவது நியாயமா?
10. லைசென்ஸ் விதிமுறைகள் உறுதியாகப் பின்பற்றப்படா விட்டால் அது ஒரு தவறான முன்மாதிரி ஆகிவிடாதா? வேறு துறைகளில் உள்ள தொழில் முனைவோர்களும் ஒப்பந்த விதிகளை மீறும் வகையில், இந்தக் கோரிக்கை அல்லது அந்தக் கோரிக்கை என எந்தக் கோரிக்கையையாவது எழுப்பமாட்டார்களா? மேலும் டெண்டர் விதிமுறைகளைச் சாதாரணமாகக் கருதமாட்டார்களா?
11. சந்தைப் பொருளாதாரத்தில் (Market Economy) நம்பிக்கை வைத்துள்ள வேறு எந்த நாட்டிலாவது, பகிரங்க டெண் டர்களின் அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் விதிமுறைகள் மீறப்பட்டதற்கும் அந்த ஒப்பந்தங்களில் இடையீடு நிகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டதற்கும் உதாரணம் உண்டா?
இந்த 11 கேள்விகளும் தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்களுக்கும் அவர்களின் காப்பாளர்களாகப் பிரதமர் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கும் உடலில் குத்திய முள்ளாக ஆகியிருக்கின்றன.
அமைச்சர் ஜக்மோகன் மசியவில்லை
அமைச்சர் ஜக்மோகனை வழிக்குக் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், அவர் , அதற்கு இடம் கொடுக்க வில்லை. அதற்கு மாறாக 20 சதவிகிதப் பாக்கித் தொகையைக் கூடச் செலுத்தத் தவறிய 2 கம்பெனிகளின் லைசென்ஸ்களை ரத்துச் செய்துவிட்டார்.
எட்டுப் பெரிய சுறாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சர் ஜக்மோகன் ஆழமாகச் சிந்தித்துவந்தார். அந்த எட்டுப் பெரும் கம்பெனிகளில் பாரதி செல்லுலார் லிமிடெட் கம்பெனி ரூ.28.74 கோடியும் பி.பி.எல். கம்பெனி ரூ.26.45 கோடியும், ஸ்டெர்லிங் கம்பெனி ரூ.19.73 கோடியும் ஹட்ச்சிசன் கம்பெனி ரூ.29.29 கோடியும் 1999 ஜனவரி 31 வரை பாக்கி வைத்துள்ளன.
ஜக்மோகனை நீக்க சதி!
தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் அமைச்சரின் மறுப்பு ஒரு பெரிய விஷயமாகிவிட்டது. தொலைத் தொடர்பு அமைச்சகத் திலிருந்து அமைச்சர் ஜக்மோகனை அப்புறப்படுத்திவிட நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
அமைச்சர் ஜக்மோகனைத் தொலைத்தொடர்புத் துறையி லிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
இது தொடர்பான பொதுநல மனுமீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய மிகப்பெரிய புள்ளிகளில் ஒருவர், செய்தியாளர்களிடம் கூறினார்: ஜக்மோகன், இந்த அமைச்சகத் திலிருந்து நீக்கப்படுவதற்கு இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறதென்று எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறார் இவ்வாறு கூறினார். டில்லியிலிருந்து வெளியாகும் ஒருநாளிதழ், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அந்தத் துறையிலிருந்து வெளியேறு கிறார் என்று செய்தி வெளியிட்டது. அடுத்தநாளே அதாவது ஜூன்-8 ஆம் நாள் அமைச்சர் ஜக்மோகன் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்குத் தூக்கியடிக்கப்பட்டார்! அதன்பிறகு, தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்களுக்கு அந்த அமைச்சகம் திறந்தமடமாக ஆகிவிட்டது!
பிரதமரின் உடந்தை!
தொலைத் தொடர்புத் துறையைப் பிரதமரே தம்முடைய பொறுப்பில் எடுத்துக் கொண்டார். தனியார் தொலைத் தொடர்பு இயக்குநர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற் றும் வகையில் புதிய கொள்கையை வரையுமாறு பிரதமர் அலு வலகத்தில் உள்ள செயலாளர் ஒருவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
ஒப்பந்தத்தில் மாறுதல்கள் செய்வதற்கு எதிராக அட்டர்னி ஜெனரல் அவரது ஜனவரி மாத அறிக்கையில் கருத்துக் கூறி யிருந்ததால், அவருடைய வேறுவகையான கருத்துத் தேவைப்பட்டது. அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி அவருடைய விடு முறையைக் கழிப்பதற்காக இங்கிலாந்து சென்று தங்கியிருந்தார். அவர் உடனே திரும்பிவருமாறு அழைக்கப்பட்டார். புதிய கொள்கைக்குப் பொருந்தும் வகையில் புதிய கருத்தை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அமைச்சரவை கூடியது; தொலைத் தொடர்புக் கொள்கையில் செய்யப்பட்ட மாறுதல்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதாவது, பெரும்பாலும் பெரிய நகரங்களிலிருந்து செயல்பட்டுக் கொண் டிருந்த தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் என்ற பெரிய முதலைகளிடம் அநேகமாக அரசு சரண் அடைந்துவிட்டது. இந்த நிலையில், அமைச்சரவை ஒப்புதலளித்த ஒவ்வொரு அம்சத் தையும் நிதியமைச்சகத்தின் துணை அறிக்கை எதிர்க்கிறது.
400 கோடி ரூபாய் இழப்பு!
மத்திய அரசு மேலும் ஆறுமாதங்களுக்கு லைசென்ஸ் காலத்தை நீட்டியுள்ளது. அந்தக் காலகட்டத்திற்குரிய கட்ட ணத்தில் மிகப்பெரும் பகுதியைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரதி (பிரிட்டிஷ் டெலிகாம்), எஸ்ஸார் (ஸ்விஸ் காம் ஷிவ ஷங்கேரன்), ஹட்சிசன் (ஹாங்காங்கிலும் வேறு பல நாடுகளிலும் செயல்படுகின்ற தொலைத் தொடர்பு நிறுவனம்), பி.பி.எல் (அமெரிக்கா-மேற்கு) ஆகிய கம்பெனிகள் உள்ளிட்ட- 4 மாநகர் களில் செயல்படுகின்ற கம்பெனிகளே இதனால் மிகுதியும் பயன் பெற்றவையாகும். தொலைத்தொடர்புத்துறையின் மொத்தப் பணப்புழக்கம் (Total Turn Over) ரூ.12,000 கோடியாகும். இதில் 60 சதவிகிதம் 4 மாநகர்களின் செல்லுலார் தொலைப்பேசி இயக்குநர்களுக்குச் செல்கிறது.
லைசென்ஸ் கட்டணம் ஒழிக்கப்பட்டுவிட்டது; லைசென்ஸ் தாரர்கள் வருவாய் பங்கீட்டு முறைக்கு (Revenue Share System) மாறிக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.
பத்தாண்டுகளில் இழப்பு ரூ.50 ஆயிரம் கோடி!
ஒப்பந்தம் செய்து கொண்ட நான்காம் ஆண்டிலிருந்து தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்கள், ஒரு சந்தாதாரருக்கு ரூ.6.023 வீதம் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இப் பொழுது நான்காமாண்டுக் கட்டணத்தில் செய்துள்ள மாறுதலால் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்படுகிறது. மேலும் பத்தாம் ஆண்டுவரை கட்டம் கட்டமாகக் கூடிவரும் கட்டணத் தொகை ரூ.50,000 கோடியாகும். (நான்காம் ஆண்டிலிருந்து லைசென்ஸ்தாரர்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு நூறு சந்தா தாரர்களுக்கும் கட்டணமாக ரூ.5 இலட்சம் செலுத்த வேண்டும்).
வருவாய் பங்கீட்டுமுறையின் விவரங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை, அது தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் பணி என்ற இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்க மைப்புக்குழு (Telecom Regulatory Authorities Of India- TRAI) அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புத் துறையை (Department Of Telecom- DoT) அய் ஒட்டுமொத்தமாகத் தனியார் மயமாக்குகின்ற ஒரு முயற்சிதான் இது. அது, புதிய கட்டண விகிதத்தை அறிவித்துள்ளது. அதன்படி, முதலாண்டில் ரூ.1900 கோடியும் அடுத்த ஆண்டில் ரூ.3500 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்புகள் உண்மையில் தொலைத் தொடர்பு துறை (DoT) சாகடித்துவிடும்.
இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்புக் குழு (TRAI) அமைப்பு தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் லாபத்தைப் பற்றியே கவலைப்படுகிறது. சேவையை மேம்படுத்துவ தற்கான புதிய திட்டம் ஒன்றை வரையப்போவதாக 1997 இல் அந்த அமைப்பு உறுதியளித்தது. சமூகநல உதவி (Social Obligation) என்ற திட்டத்தை 1998 இல் அறிவித்தது. இரண் டிலும் அந்த அமைப்பு தோல்வியடைந்தது. ஆனால், தனியார் தொலைத்தொடர்பு இயக்குநர்களின் நன்மைக்கான ஒரு கொள்கையை வரைந்து கொடுப்பதில் மிகவும் அக்கறையுடன் நடந்து கொண்டது.
புதிய நடைமுறை ஜூலை 6 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. ஜூலை 10 ஆம் நாள் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்புக் குழு (TRAI) அமைப்பு கொள்கையைத் தயார் செய்தது. அதேநாளில் தொலைத்தொடர்பு இயக்குநர்கள் சங்கத் தினருடன் நடத்திய கூட்டத்தில் சமூகநல உதவித்திட்டத்தை அரசு நீக்கிவிட்டது. அதே நேரத்தில், கிராமங்களுக்குப் பொதுத் தொலைப்பேசி வசதிகளைச் செய்வது தொடர்பாக தொலைத் தொடர்புத் துறை (DOT) தொடர்ந்து இழப்பைச் சந்திக்கும். தனியார் இயக்குநர்கள் இலாபத்தை அடைவார்கள். அவர்கள் சமூகநல உதவி என்ற வகையில் கிராமங்களுக்கு 10 சதவிகித தொலைத் தொடர்பு வசதிகளைச் செய்து தர வேண்டியதில்லை.
ஊழல் கூவுது! ஊரே நாறுது!
கட்சி சாரா ஏடான ஜூனியர் விகடன் ஏட்டில் (28.07.1999) ஊழல் கூவுதுஎன்ற தலைப்பில் (பக்கம் 20, 21-இல்) வந்துள்ள ஒரு புதிய ஊழல் பற்றிய கட்டுரையை அப்படியே அதில் வெளியாகியுள்ள படியே இங்கு வெளியிடுகிறோம். மதவாதமும், ஊழலும் கைகோத்து ராஜநடை போடுகின்றன என்பதற்கு இந்தக் கட்டுரையும் சான்றாகும். தமிழ்நாட்டில் திருச்சியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, திடீரென்று கட்சி தாவி அமைச்சரான திருவாளர் ரங்கராஜன் குமாரமங்கலம், பிரதமருக்கு எழுதிய சிபாரிசு கடிதம் அப்படியே வெளியாகியுள்ளது. பி.ஜே.பி. கட்சி நலனுக்கு ஆட்சி இயந்திரத்தினை எப்படித் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அந்தக் கட்டுரை யிலிருந்து தெரிய வருகிறது.
வாஜ்பேயி நல்ல பிரதமர் என்ற பிரச்சாரத் தட்டியைத் தூக்கிச் சுமக்கும் அவருடைய புதிய சீடகோடிகள் - கூட்டணி யினர் ஏதோ ஊழலை ஒழிப்பதற்காகத்தான் அங்கே போய்ச் சேர்ந்திருக்கிறோம் என்று கூறுவது எவ்வளவு மோசடிப் பிரச்சாரம் என்பதை வாக்காளர்கள் - வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை உணர்வார்களாக !
பத்தொன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள மின் உற்பத்தி திட்டத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு பற்றிப் படர்ந்து கொண்டி ருக்கிறது. இந்தத் திட்டத்தில் தனி நபர் ஒருவருக்கு பி.ஜே.பி. அரசு சலுகை காட்டியிருப்பதாக மத்திய மின்துறை அமைச்ச கத்துக்குக் கோபக் கடிதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. தமிழக பாரதிய ஜனதா கட்சியிலும் இதனால் அரசியல் மோதல்!
மின்சாரத்தின் தேவை நாடெங்கிலும் கூடிக் கொண்டே போக, சூரிய ஒளி, காற்று மற்றும் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் புதுப்புது திட்டங்களை மத்திய மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சகம(Ministry of Non- Conventional Energy Sources) ஊக்கப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தால் மின் தேவையைப் பெரிய அளவில் சமாளிக்க முடியாது என்றாலும் இயற்கை மாசுபடுவதைத் தடுக்க இவை ஓரளவு உதவும் என்பதால் பல்வேறு மாநிலங்களும் இந்தத் திட்டத்தை ஆதரித்தன.
அய்க்கிய முன்னணி ஆட்சி தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விலங்குகள் மற்றும் விவசாயக் கழிவுகளிலிருந்தும், பழங்களைப் பதப்படுத்தும் போது உண்டாகும் கழிவிலிருந்தும், பெரும் நகரங்களில் சேரும் குப்பை போன்றவற்றிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவித்து அறிவிப்பு வெளியானது. இந்தத் திட்டங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு சேர விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றது அன்றைய மத்திய அரசு.
இதில் கோழியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க தான் தயாராக இருப்பதாக தமிழகத்திலிருந்து ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் மதிதிய மின்துறைக்குச் சென்றது. நாமக்கல்லில் இதற்கான பிளான்ட்டை நிறுவ இருப்பதாகவும், இதன் மூலம் மாதத்துக்கு அய்ந்து லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் திட்ட மதிப்பு சுமார் பத்தொன்பது கோடி எனவும் தெரிவித்தது அந்த விண்ணப்பம்.
மொத்த திட்ட மதிப்பில் அய்ம்பது சதவிகிதத்தை அதாவது சுமார் ஒன்பதரை கோடி ரூபாயை அரசாங்கம் மானியமாகத் தரவேண்டும் என்று அந்த விண்ணப்பம் கேட்க... அதை ஏற்க மறுத்தனர் மத்திய மின்துறை அமைச்சக அதிகாரிகள். ஒரு மெகாவாட் திறன் கொண்ட பிளான்ட்டுக்கு அதிகபட்சம் மூன்று கோடி ரூபாய் மானியம் தரலாம் என்பது விதிமுறை. இந்த நிறுவனம் 1.2 மெகாவாட் திறன் கொண்டது. எனவே இதற்கு 3.6 கோடி ரூபாய் தரலாம் என்று அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரைத்தார்கள்.
இதில் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்கும் முன்பாகவே அய்க்கிய முன்னணி அரசு கவிழ்ந்துவிட, விஷயம் கிடப்பில் போடப்பட்டது. பி.ஜே.பி. அரசு பதவியேற்றதும் மறுபடி முயற்சிகள் தொடங்கியது. (விண்ணப்பம் செய்த அந்த நிறுவனத்தின் ஒரு இயக்குநர் தமிழக பி.ஜே.பி.-யில் மாநிலப் பொறுப்பில் இருப்பவர். ஒட்டுமொத்த உரிமையாளரே இவர்தான் என்ற தகவலும் உண்டு).
மத்திய மின்துறை அமைச்சராக ரங்கராஜன் குமாரமங்கலமே இருந்தாலும், இதில் மரபு சாரா எரிசக்தி துறையை மட்டும் பிரதமர் வாஜ்பேயியே வைத்துக்கொண்டார். இந்த நேரத்தில், நிறுவனத்தின் வேண்டுகோள் கடிதத்தைப் பரிந்துரைத்து ரங்கராஜன் குமாரமங்கலம் பிரதமர் வாஜ்பேயிக்கு ஒரு கடிதம் எழுதினார். இப்போதும் அதே விதிமுறைகள் குறுக்கிட எந்த முடிவும் எடுக்காமல் தவிர்த்தார் பிரதமர். இது நடந்தது 1998 நவம்பரில்.
1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதவாக்கில் தன்னுடைய வேலைப்பளு காரணமாக மரபு சாரா எரிசக்தித்துறையையும் ரங்கராஜனிடமே வழங்கினார் பிரதமர் வாஜ்பேயி. ஃபைல் இந்த முறை எடுத்துக் தூசு தட்டப்பட்டதுமே, ராங்கராஜனிடம் இதில் உள்ள சிக்கல்களைச் சொல்லி எச்சரித்தார்கள் துறை அதிகாரிகள்.
இந்த நிலையில்தான் , கோழி கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை ஏற்று, புதிய ஒப்பந்தமும் (Memorundum of Understanding) கையொப்பமானது என்ற தகவல் பி.ஜே.பி.-யினர் மத்தியில் பரவியது. மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் ஒருவர் வாரம் டில்லி அசோகா சாலையிலுள்ள பி.ஜே.பி. தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். இந்தத் திட்டம் பற்றிய கடிதப் போக்குவரத்துகள் அடங்கிய ஃபைலை பல பிரதிகள் எடுத்து தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் சிலரிடம் கொடுத்து வேதனைப்பட்டார்.
இதில் கடும் விமரிசனத்துக்குள்ளானது ரங்கராஜன் குமாரமங்கலம் நவம்பர் 1998 இல் பிரதமர் வாஜ்பேயிக்கு எழுதிய பரிந்துரைக் கடிதம் தான்.
நமது கட்சியின் தனிப்பட்ட நன்மைக்காக என்று தன் கைப்பட அந்தப் பரிந்துரையில் குறிப்பு எழுதியிருக்கிறார். ரங்கராஜன். ஒரு தனிப்பட்ட நபருக்கு உதவும் போது ஒட்டுமொத்த கட்சியின் பெயரை ரங்கராஜன் பயன்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பிவிட்டுப் போனாராம் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்!
மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தாலும், உற்பத்தியாகும் மின்சாரத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டியது தமிழக மின்சார வாரியம்தான். எனவே, இப்படிப்பட்ட திட்டங்களை தமிழக மின்சார வாரியத்துக்கும் முறைப்படி தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்பே அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அதன்படி இந்த நாமக்கல் திட்டம் பற்றி ஆரம்பத்தில் தமிழக மின்சார அதிகாரிகளுக்கும் இந்த பி.ஜே.பி. பிரமுகர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். திட்டம் தொடர்பாக தமிழக மின்வாரியம் இவரிடம் கேட்ட விவரங்களை இதுவரை அளிக்கவில்லை. நிலைமை இப்படியிருக்க, மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தந்துவிட்டது என்ற செய்தி வந்ததும் திகைத்துப் போயிருக்கிறது தமிழக மின்வாரியம்.
அலுவல் நிமித்தமாக டில்லி வந்திருந்த தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் மின்உற்பத்திப் பிரிவு உயர் அதிகாரி ஒருவரை சந்தித்துப் பேசினோம். இந்தத் திட்டத்தைக் குறிப்பிட்டுக் கேட்டதுமே மளமளவென பேச ஆரம்பித்துவிட்டார். இந்த திட்டம் ஏட்டளவில் விவாதிக்கப்பட்டு வருகிறதே தவிர செயல் திறன் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்று மட்டும் கூறி ஆதங்கப் பெருமூச்சுவிட்டார் அந்த அதிகாரி
சர்ச்சைக்குரிய இந்தத் திட்டம் பற்றி மரபுசாரா எரிசக்தித் துறையின் அமைச்சக அதிகாரிகள் நம்மிடையே நேரடியாக வாய்திறக்க மறுக்கிறார்கள்.
(விடுதலை, 24.7.1999 மற்றும் 25.7.1999)
http://www.viduthalai.periyar.org.in/20101212/news01.html

No comments:


weather counter Site Meter