Pages

Search This Blog

Wednesday, December 1, 2010

யார் இவர்...?-பேராசிரியர் முனைவர் அழகேசன்

அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கு இனியர் என்னும் வாசகங்களைத் தமிழிலக்கியங் கண்டோர், மறந்திருக்க வாய்ப்பில்லை. அது போல அய்யா அவர்களால் ஆசிரியர் என்று அழைக்கப்பட்ட வரை பெரியாரின் அடியார்க்கு அடியார் என்பதில் மிகையில்லை.

65 ஆண்டு காலச் சமூகப் பணியில் ஒரே தலைவரைப் பின்பற்றுகிற ஒரே தலைவர் அவர்தான்.

பத்திரிகை ஆசிரியர், பகுத்தறிவாளர், இயக்கத் தலைவர், சமூகப் போராளி, சீர்த்திருத்தவாதி என்பவையெல்லாம்..... அவருக்கான புனித வாசகங் கள்தான். என்றபோதிலும், அய்யாவின் நாத்திகத் திற்காக ஊர்சுற்றும் சக்ரதாரி என்பதுவே பொருந் தும் வார்த்தை. அந்த வகையில் அவர் ஒரு சாரங்க பாணியுங்கூட...

அரவந் தெரியாமல் நூற்றுக்குமேல் நூலெழுதிய சமூக விழிப்புணர்வுடைய ஒரே அரசியல் தலைவர், அவர்தான். வள்ளுவரின் 643ஆவது குறள் அவருக் காக எழுதப்பட்டிருக்கலாம்.

கேட்டவரை ஈர்த்து கேளாதவரையும் கேட்கத் தூண்டுவதுவே பேசுங் கலை என்பார் வள்ளுவர்.

பத்துப் பேர் இருந்தாலும் பத்தாயிரம் பேர்... திரண்டாலும் பதறாமல் பேசுவது அவரது நாவின் போக்கு. கொள்கை பிறழாமல் கருத்துக் கூறுவது, அவரது நெஞ்சு துணிவு. இந்தியாவில் பகுத்தறிவுத் தலைவர் சிலருக்கு மட்டுமே இருக்கும் சீர்மிகு ஆற்றலிது.

அய்யாவைப் போலவே பேச்சிலும், எழுத்திலும் யாருக்காவும் தன்னை, தன் கோட்பாடுகளை அடமானம் வைக்காத மானமிகு போராளி. பெரியார் பெருந்தொண்டர் என்னும் ஒப்புயர் வெகுமானத்தைப் பலபேருக்கு உவந்தளித்துச் சொக்கவைத்த, எங்கள் சொக்கநாதர். அய்யாவைப் போலவே... உண்மைகளுக்கு ஒப்பனை செய்து, எழுதத் தெரியாத ஓர் எழுத்தச்சன். ஈரோட்டுப் புயலுக்கு ஈடாக யார் கிடைப்பார்கள் என்றிருந்த வேளையில் நமக்குக் கிடைத்த, மாற்றுக் குறையாத சூறாவளி. பேரறிஞர் அண்ணாவால்,

இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால் - என்று பாராட்டுப் பெற்ற ஞானசம்பந்தன்

அய்யாவிடத்தில்கூட ஒரு பரிந்துரைக் கடிதம் வாங்கி விடலாம். ஆனால், நம் ஆசிரியரோ அதற்கு, முயற்கொம்பு. ஆரம்பத்தில் இது எனக்கு விளங்காமற் போன இரவாய் இருந்தது. காலஞ் செல்லச் செல்ல அவரது கனமில்லா இதயத்தைக் கண்டு கொண்டேன்.

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி என்பது ஒரு தி.க. கோட்டை. திருவளர் பெருமையுடன் கழகம் பொலிவதற்கு டி.ஆர்.குப்புசாமியும் டி.ஆர். சுந்தரமும் பணியாற்றினர். பெரியார், பாவேந்தர், அண்ணா, ஆசைத்தம்பி, என்.வி.நடராசன் எனப் பலர் வருகை தந்த வீடு எங்கள் இல்லம்.

அண்ணா ஓர் அறிவாளி. ஆனால், கலைஞரோ திறமைசாலி என்று அய்யாவால் அனுமானிக் கப்பட்டு, அருளாசி வழங்கிய இடம், எங்கள் வீட்டோரந்தான் என்ற போதிலும், பகுத்தறிவுப் பாதையைப் பற்றாமல் திரிந்தது பாழும்.... மனம்.

பகுத்தறிவிற்குப் பாராமுகமாய் இருந்த என்னை, பக்குவஞ் செய்து, பயணிக்கச் சொன்ன வாஸ்கோட காமா. நெல்லை, மதுரை, சென்னைத் தெருவோரப் பேச்சுக்களால், என்னைப் போல எத்தனையோ பேரை மாற்றிக் காண்பித்த ஒரு மாற்றும் திறனாளி.

ஒரு நாள், ஆசிரியர் நெல்லையிலே சொன்னார் - எழுதுங்கள்... பேசுங்கள்... பிரகாசிக்கலாமென்று ஆற்றுப்படுத்தியது... அந்த மனசு. அடுத்தடுத்து அய்யாவின் எழுத்துப் பொழிவுகளால், ஊறிப் போனது - உள்ளம். ஆசிரியரின் கருத்தூற்றுக்களால் உயிர்த்தெழுந்தது நெஞ்சம். சில வருடங்களுக்குப் பிறகு... மதுரை வணிக மண்டபத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் வேங்கடபதியார் முன்னிலையில் ஆசிரியர் என்னையும் முழங்கச் செய்தார்.

பிறகென்ன?

பேச்சை ரசித்தார்கள் என்பதைவிட, என்னை விசாரித்தார்கள் என்பதுவே இன்றெழுத வேண்டிய உண்மை. திராவிடமணியால் வளர்க்கப்பட்ட சாரங்கபாணி போல, பெரியாரிய சக்கரத்தால் வார்க்கப்பட்ட சக்கரபாணி ஆனேன்.

ஆக...

அந்த வகையில் சரியானவர்களை இனங்கண்டு, ஏற்றி வைத்த சரியான அண்ணா...

பகவத் கீதைக்கு அவரெழுதிய உரை விளக்கம், கரை கடந்து ஒளி வீசுகிற கலங்கரை விளக்கம். ழநயன யனே ஹஉவஎந ஆயளவநச என்று ஆச்சார்யார், அய்யாவுக்குச் சொன்னதைத் தனக்காகவும் ஆக்கிக் காட்டிய தனக்குவமை இல்லாதான்.

நினைவாற்றலில் நாவலருக்கு இணையாக ஊர், பெயர், தேதி, வருஷம், வரலாறு... என எவற்றையும் மறக்காத கணினி. தமிழகத்தின் தனிப் பெருங் கல்லூரியான அமெரிக்கன் கல்லூரிக்கு, ஒரு நாள் வந்தது அவரது பவனி, இளைஞர்களை இழுத்தது அவரது பேச்சுப் பாணி.

சாமி, சமயத்தில் நாட்டங் கொண்ட மாணவர் களை, நம்ம ராமசாமியையும் நினையுங்கள் என்று சொல்லிய நல்லதொரு சொல் - மேய்ப்பர். நகைச்சுவை அவருக்குக் கைகட்டி சேவகம் செய்யும்.

எழுத்தால் ஒருவனைச் சிரிக்க வைக்க முடியுமா? அவனையே அழ வைக்க இயலுமா? முடியும். ஆசிரி யர் எழுதிய பெரியார் அடிச்சுவட்டின் ஈற்றயல் பகுதிகளைப் படித்துப் பாருங்கள். உணர்வீர்கள்.

முடிப்பாக ஒரு கருத்து. அய்யாவைப் பற்றி அண்ணா எழுதிய வாசகத்தை ஆசிரியருக்காக நான் எழுத வேண்டியிருக்கும்.

எங்கள் குடும்பம் கண்டதும்

கொண்டதும் ஒரே தலைவரைத்தான்

அந்த ஒரே தலைவர்

நம் ஆசிரியரே...!
http://www.viduthalai.periyar.org.in/20101201/news39.html

No comments:


weather counter Site Meter