- கலி. பூங்குன்றன் -
பொதுவாழ்க்கையில் தந்தை பெரியார் எவ்வளவு நாணயச் சுத்தமாக நடந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.வைக்கம் சத்தியாக்கிரகத்துக்காக காங்கிரசிலிருந்து ரூபாய் ஓராயிரம் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் கணக்கைப் பெரியார் காட்டவில்லை என்பது குற்றச்சாற்று.
உண்மை என்னவென்றால், இரண்டு முறை துல்லியமாகக் கணக்கு ஒப்படைத்தார் என்பதுதான். ஒருமுறை அனுப்பப்பட்ட கணக்கு காங்கிரஸ் ஆபீசில் தவறிவிட்டது என்றனர். இன்னொரு முறை முத்துரங்க முதலியாரையே நேரில் அனுப்பினார்கள். துருவித் துருவிப் பார்த்தார்; ஒரு குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த அளவுக்குத் துருவித் துருவி ஆய்ந்தார்கள் தெரியுமா?
யார் யாருக்கெல்லாம் பணம் கொடுத்ததாகப் பெரியார் குறிப்பிட்டுள்ளாரோ அவர்களையெல்லாம் விசாரித்திருக்கின்றனர். பெரியாரிடம் பெற்றது உண்மைதான் என்று அத்தனைப் பேரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதேநேரத்தில், காங்கிரஸ் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன?
இந்தச் சுவையான நிகழ்வுகள் எல்லாம் குடிஅரசு இதழ் (24.11.1935) கருவூலத்திலிருந்து இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தோழர் ஈ.வெ.ரா. வைக்கம் சத்தியாக்கிரக நிதி விஷயமாய் வாங்கிய பணத்துக்குக் கணக்கு கொடுக்கவில்லை என்பதற்குச் சமாதானம் சொல்லி ஆக வேண்டுமல்லவா? குச்சிக்காரி மாதிரி நீ மாத்திரம் யோக்கியனா என்று சொன்னால் போருமா? அல்லது பெரிய காரியத்தில் இதெல்லாம் கவனிக்கக் கூடாது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாமா? அல்லது சகலத்தையுந் துறந்த தேச பக்த தியாகிகள்தானே கையாடினார்கள் என்று சொல்லலாமா? கணக்குச் சொல்லித்தானே ஆக வேண்டும். எனவே, வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அட்வான்சாக ரூபாய் ஆயிரம் (19000 அல்ல) ஈ.வெ.ரா. பேருக்கு வைக்கத்துக்கு அனுப்பியது உண்மை. அப்பணத்துக்கு ஈ.வெ.ரா.வால் 2 தடவை கணக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் கூறுகிறோம்.
முதலில் 2 தடவை ஏன் கணக்கு கொடுக்கப்பட்டது என்பது ஒரு கிளைக் கேள்வி ஆகலாம். ரசீதுகளுடன் முதல் தடவை கொடுத்த கணக்கு காங்கிரஸ் ஆபீசில் கை தவறி விட்டது. இரண்டாம் தடவை கணக்கு கேட்டதற்கு ஈ.வெ.ரா. முதலிலேயே வவுச்சருடன் கணக்கு அனுப்பி ஆய்விட்டது என்று பதிலெழுதினார். பிறகு தோழர் முத்துரங்க முதலியார் ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். (பக்தவச்சலம் அவர்களின் மாமனார்) அந்த சமயம் ஈ.வெ.ரா. காங்கிரசை பலமாக தாக்கிக் கொண்டிருந்த சமயம். ஆதலால் முத்துரங்கத்தைப் பிடித்து அவர் மூலமாக ஈ.வெ.ரா. மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தயாரிக்க சூழ்ச்சி செய்து அதற்கு ஆக எவ்வளவோ தூரம் பழங்கணக்குகளை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து ஆபீசில் பரிசீலிக்கப்பட்டு, இந்த ஒரு விஷயம் அதாவது, 1000க்கு கணக்கு அனுப்பாமல் இருக்கும் விஷயத்தைக் கண்டுபிடித்து கணக்கு அனுப்பும்படி ஈ.வெ.ராவுக்கு ரிஜிஸ்டர் நோட்டீசு அனுப்பி, கணக்கு கேட்கப்பட்டது. கணக்கு அனுப்பாவிட்டால் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும் என்று அதில் எழுதி இருந்தது. அதற்குப் பதிலாக மறுபடியும் ஒரு தடவை கணக்குகளை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பப்பட்டது.
இந்தக் கணக்கின் பேரில் அக்கணக்கில் கண்ட நபர் ஒவ்வொருவருக்கும் எழுதி அதில் கண்ட பணம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்று காங்கிரஸ் ஆபீசிலிருந்து எழுதிக் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் பெற்றுக் கொண்டதாக ஆபீசுக்குத் தகவல் எழுதியும் இருக்கிறார்கள்.
அதாவது 1000 ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாக்கிரக காரியதரிசிக்கு கொடுக்கப்பட்டதும், பாக்கி 300 இல் பாலக்காடு சவுரி ஆச்சிரமத்துக்கு கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியதும், மீதி நூத்திச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்குக் கொடுக்கப்பட்டதும் ஆகிய கணக்குகளை மேல்கண்டபடி இரண்டு தடவை அனுப்பப்பட்டிருக்கிறது. கதர் நிதி
மற்றபடி கதர் நிதி பண்டு 500 ரூ. விஷயமாய் ஈரோடு பொறுத்தவரை எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரைத் தோழர் சந்தானமய்யங்காரே பல தடவை நடந்து கேட்டு பகுதி வசூல் செய்யப்பட்டு, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டு விட்டார்கள் இது அவருக்கும் நன்றாய்த் தெரியும்.
மற்றபடி திலகர் நிதி விஷயம் ஒன்றும் கிடையாது. ஜில்லா ஆபீசு கணக்கு விஷயமாய் ஈரோடு ஜில்லா கமிட்டி காரியதரிசியிடமிருந்து கோயமுத்தூர் ஜில்லா கமிட்டி காரியதரிசி கணக்குப் பார்த்து நேர் செய்து வரவேண்டிய ரூபாய்கள் பூராவும் பெற்றுக்கொண்டு கணக்கில் கையொப்பம் செய்துவிட்டுப் போயிருக்கிறார். இவைகளில் எதற்கும் ஈ.வெ.ராமசாமிக்கு நேரில் சம்பந்தமில்லை.
இந்த உண்மைகள் இன்றும் யார் வேண்டுமானாலும் ஆதாரங்களோடு அறிய தக்க சவுகரியம் இருக்கிறது. இவை எப்படியோ இருந்தாலும் காங்கிரஸ் பணம் பாழாயும் கொள்ளை போயும், இருப்பதை ஈ.வெ.ராமசாமி கணக்கு கொடுக்கவில்லை என்று எழுதும் குற்றச்சாட்டு எப்படி சமாதானப்படுத்தும் என்பது விளங்கவில்லை.
பிரகாசம் 10,000
பிரகாசத்துக்கு கொடுத்த 10,000 பத்து ஆயிரம் ரூபாய் மோசம் செய்யப்பட்டது என்பதற்குச் சொன்ன சமாதானம் மிகவும் மோசமானதாகும். என்னவென்றால், பிரகாசம் 10,000 ரூ. கடன் வாங்கினார். கொடுப்பதாகச் சொன்னபடி கொடுக்கவில்லை. பிறகு அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள கமிட்டி தீர்மானித்தது. தோழர் சீனிவாசய்யங்கார் தலைவராய் வந்ததும் அதை மெள்ள நழுவ விட்டார். பிறகு இவ்விஷயம் காந்தியார் தகவலுக்கு எட்டச் செய்யப்பட்டது.
பிறகு ஏதோ தவணையின் மீது கொடுப்பதாக பிரகாசத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது. கடைசியில் ஸ்வஹா செய்து கொள்ளப்பட்டது. ஆகவே, பிரகாசம் பத்திரிகை நடத்தி நஷ்டப்பட்டதற்கும், காங்கிரசிடம் கடன் வாங்கி பஞ்சாயத்து செய்து கடைசியாக காந்தியார் முன்னிலையில் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஏமாற்றினதற்கும் என்ன சம்பந்தம் என்பதை பொது ஜனங்களே யூகித்துக் கொள்ள வேண்டும். ராஜகோபாலாச்சாரியார் 19000
தவிர, ராஜகோபலாச்சாரியார் அவர்களிடம் அட்வான்சாகக் கொடுத்த 19,000க்கு கணக்கு இல்லை என்று சொன்னால் அதற்கு சமாதானம் - செலவு விவரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அப்பத்திரிகை எழுதுகிறது.
எத்தனை வருஷமாகக் காத்திருப்பது? அந்தப் பணம் எந்த மாதிரி செலவு செய்யப்பட்டது? (ஆச்சாரியார் எடுத்துக் கொள்ளவில்லை; ஆனால்)
சத்தியமூர்த்தி தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டதா? அல்லது வேறு என்ன காரியத்துக்குச் செய்யப்பட்டது என்பதைப் பல வருஷங்களாகியும் காங்கிரஸ்காரரே தெரியும்படியான நிலைமை ஏற்படவில்லையானால், அப்பணம் யோக்கியமாய் செலவழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?
அல்லது பண விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் கவலையுடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
கடைசியாக இந்த தவறுதல்களுக்கு அப்பத்திரிகை சொல்லும் சமாதானம் தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகிவிட்டால் மூழ்கிப் போவது ஒன்றும் இல்லை என்று எழுதியதாகும்.
(வளரும்)http://www.viduthalai.periyar.org.in/20101208/news07.html
No comments:
Post a Comment