இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் சுதந்திரம் பெற்ற மிகப்பெரிய நாடுகள். மக்கள் தொகையில் முதல் இடத்தில் சீனா இருக்கிறது என்றால், இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது.
பண்டித ஜவஹர்லால் நேருவும், சூ என் லாயும் உடன்பிறவா சகோதரர்களாக ஒரு காலகட்டத்தில் ஒளி வீசினார்கள்.
பழைய காலத்து மன்னராட்சியில் ஏற்பட்டது போன்ற ஆக்கிரமிப்பு 20 ஆம் நூற்றாண்டிலும் கடைக்கால் போட்டு இரு பெரிய நாடுகளின் கைகளில் யுத்தப் பீரங்கிகள் வெடித்தன.
மக்களின் வாழ்வாதாரங்களை வளர்த்து சமத்துவ- சமதர்மத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய இரு நாடுகளும் யுத்தத்தில் மூழ்கியதன் மூலம் மக்களின் வளர்ச்சித் திசையைப் பின்னோக்கித் தள்ளிவிட்டன - சீனாவே இதற்கு முக்கியக் காரணம்.
இதன் பாதிப்பு மக்களிடத்திலே மட்டுமல்ல; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயேகூட பிளவை உண்டு பண்ணிவிட்டதே!
வருணமும், வர்க்கமும் இரட்டைப் பிள்ளைகளாகத் தவழும் இந்தியாவுக்கு உண்மையான பொதுவுடைமைக் கொள்கை தேவைதான். இதனைத் தந்தை பெரியார் உணர்ந்த அளவுக்கு மற்றவர்கள் உணர்ந்தார்கள் என்று சொல்ல முடியாது. வெறும் அரசியல் - தேர்தல் பாதையில் எடுத்த எடுப்பிலேயே காலை வைத்துப் பலகீனப்பட்டுப் போனது - இந்தியாவுக்கு நன்மை இல்லாமல் போய்விட்டது.
பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கப்பட்ட இந்தியாவில், சமூகநீதி என்பது எத்தகைய மாமருந்து - அதில் இவர்கள் எந்த அளவுக்கு அக்கறை காட்டினார்கள் என்பதே கேள்விக்குறி. இதிலும் கூட கேரளாவை ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். மேற்கு வங்க நிலைமை மிகப் பரிதாபமானது - இது உள்நாட்டுப் பிரச்சினை.
சீனாவைப் பொருத்தவரை பொதுவுடைமை நாடு என்பதற்கான அடையாளத்தை நாளும் இழந்து வரு கிறது. ஒடுக்கப்பட்ட இனத்துக்குக் குரல் கொடுக்கும் கொள்கையைக் கையில் ஏந்த வேண்டிய அந்தப் பொதுவுடைமை நாடு இலங்கையிலே தமிழினத்தை முற்றாக ஒழிக்கும் ஒரு பாசிஸ்ட் அரசுக்குத் தோள் கொடுத்துத் தீராப் பழியைத் தேடிக் கொண்டு விட்டது. இதுதான் பொதுவுடைமைச் சிந்தனையா என்று உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மிகக் கூர்மை யான வினாவைத் தொடுக்கும் அளவுக்கு சீனா சீழ்பிடித்துவிட்டதே!
2010 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு சீனாவின் லியூ ஷியோ போ என்பவருக்கு அளிக்கப் பட்டது. அவர் சீனாவில் சிறைக்கொட்டடியில் கிடக் கிறார்.
முற்போக்குச் சிந்தனையுடன் அந்தப் பரிசினை நேரில் பெற்றுக் கொள்வதற்காகவாவது சீனா அனுமதித்து இருக்க வேண்டும். இதற்கு முன் 1989 ஆம் ஆண்டு திபெத் விடுதலை இயக்கத்தின் தலைவர் தலாய் லாமாவுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அப் பொழுதும் சீனா எதிர்ப்புக் கணைகளைத்தான் ஏவியது.
ஜனநாயகக் குரல், எதிர்க் கருத்துக் குரல் சீனா வுக்குள் வெடித்துவிடக்கூடாது என்பதில் அந்நாட்டு அரசு வெகுகவனமாகவே இருப்பதாகத் தெரிகிறது.
இந்தியாவிலும், காஷ்மீர் மக்களுக்குத் தனியே விசா வழங்குவது, அருணாசலப் பிரதேசத்தில் ஊடுருவுவது போன்ற சில்லறைத்தனமான வேலை களில் ஈடுபடுவது ஒரு பொதுவுடைமை நாட்டுக்கு அழகல்ல.
பெண்கள் அழகுப் போட்டி நடத்தும் அளவிற்கு முதலாளித்துவத்தின் கெட்ட வாடை அங்கு வீச ஆரம்பித்து விட்டது. உலக மதங்களின் மாநாடுகள் நடத்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் சீனாவின் பொதுவுடைமை முகத்தில் முளைக்கும் விஷப் பருக்கள்.
இப்படித்தான் ருஷியா பயணித்து, கடைசியில் பெரும் பள்ளத்தில் குப்புறக் கவிழ்ந்தது. அதனைப் பாடமாகக் கொண்டு சீனா தத்துவார்த்த ரீதியில் பயணிக்க வேண்டும் என்பது முற்போக்குச் சிந்தனை யாளர்களின் பகுத்தறிவு - நாத்திக - மனிதநேயச் சிந்தனையாளர்களின் பெரு விருப்பமாகும்.
ருசியா போல் சீனாவும் வீழ்ச்சி அடைந்தால், உலகினை முதலாளித்துவம் மேய்ந்து குட்டிச் சுவராக்கிவிடும் என்ற கவலை நமக்குண்டு.
சீனப் பிரதமரின் வருகை இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயத்தை மலரச் செய்யட்டும் - வாழ்த்துகள்!
http://www.viduthalai.periyar.org.in/20101217/news01.html
No comments:
Post a Comment