Pages

Search This Blog

Sunday, December 19, 2010

அய்யப்பர்களின் ஒழுக்கம்!

பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தா சம்பந்தம் கிடையவே கிடையாது. பக்திக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று.

கடவுள்பக்தி இருந்தால்தான் பாவம் செய்யப் பயப்படுவார்கள்.அது இல்லாவிட்டால் அவிழ்த்து விட்ட மாதிரி மக்கள் குற்றங்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்று சமாதானம் கூறுவதுண்டு.

ஆனால் நடைமுறை உலகம் எப்படி இருக்கிறது? அன்றாடம் ஏடுகளில் வெளிவரும் செய்திகள் என்ன?

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் எந்த முடிவுக்கு வரவேண்டும்?

குளித்தலையில் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் சுருண்டு விழுந்து கிடந்த அய்யப்ப பக்தரை, திராவிடர் கழகத் தோழர்கள், தண்ணீரை ஊற்றி, போதையைத் தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பினர் என்ற செய்தி விடுதலையில் வெளிவந்தது நினைவில் இருக்கலாம்.

நேற்று ஒரு செய்தி பரவலாக ஏடுகளில் வெளி வந்தது. தூத்துக்குடியில் அய்யப்ப பக்தர்கள் 12பேர் அன்னதானம் வழங்கப்போவதாகக் கடைக்குக் கடை சென்று நன்கொடை திரட்டியுள்ளளனர். சாமி விஷயம் என்றால்தான் மூட மக்கள் அள்ளி அள்ளிக் கொடுப்பார்களே!

இவர்கள் நடத்தையில் சந்தேகப்பட்ட பொதுமக்கள் காவல்துறையில் பிடித்துக் கொடுத்துள்ளனர். இவர் கள் புதுக்கோட்டை மாவட்டம் குலைவாழைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

இதே ஊரைச் சேர்ந்த 19 பேர் அய்யப்பன் விரத உடையில் இருவர் இருவராகப் பிரிந்து ஊரில் வசூல் செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு தங்கும் விடுதி யில் அறை எடுத்துக் கொண்டு சூதாட்டம் நடத்தி யுள்ளனர். காவல் துறையினரின் சோதனையின்போது வசமாகச் சிக்கிக் கொண்டனர். இதற்கு முன்பும் இதே பக்தி போர்வையில் இவர்கள் இறங்கி மக்களிடம் வசூலித்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பக்தி விளைவிக்கும் யோக்கியதை ஒழுக்கம் எந்தத் தரத்தில் உள்ளது என்பதற்கு இதைவிட ஓர் எடுத்துக் காட்டும் தேவையாக இருக்காது. பக்தி வந்தால் ஒழுக்கம் வளரும் தவறு செய்யப் பயப்படுவார்கள் என்று சொல்லுவதெல்லாம் அப்பட்டமான மாய்மாலம் என்பதையும் பொதுமக்கள் உணரவேண்டும்.

எல்லா மதங்களிலுமே பாவ மன்னிப்பு, பிராயச் சித்தம், தொழுகை என்று வைத்துக் கொண்டு தானிருக்கின்றன. செய்த பாவங்களுக்கு எளிதாகப் பரிகாரம் வைத்திருந்தால், கொள்ளை லாபம், குறைந்த முதலீடு என்ற கண்ணோட்டத்தில்தானே மக்களின் சிந்தனையும் செயல்பாடும் அமையும்.

12 வருடங்கள் செய்த பாவம் மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால், அத்தருணமே போகும், புண்ணியம் கிடைக் கும் என்றால் தவறு செய்ய யார்தான் தயங்குவார்கள்?

12 வருடங்களில் எத்தனை எத்தனைக் குற்றங்களை ஒரு மனிதன் செய்திருப்பான்? அவனுக்குத் தண்டனை ஏதுமின்றி, ஒரு முழுக்கு மூலம் தப்பிவிடுவான் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! அதனால்தான் உலகத் தலைவர் தந்தை பெரியார் கூறினார் - பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து என்றார். கடவுளை மற- மனிதனை நினை என்றார்.

ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேக ரேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்?

நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியமில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு தனி நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் இல்லை. (கல்கி, 8.4.1958)

சங்கராச்சாரியார் சொல்லுகின்ற அந்தக் கடவுள் கள் கூட யோக்கியமாகப் படைக்கப்பட்டுள்ளனவா? அவர் எந்த மதத்துக்குத் தலைவர் என்று கருதப்படு கிறாரோ, அந்த இந்து மதத்தில் உள்ள எந்தக் கடவுளிடத்திலாவது ஒழுக்கம் உண்டா? சண்டை போடாத கடவுள் உண்டா? கொலை செய்யாத கடவுள் உண்டா? கற்பழிக்காத கடவுள் உண்டா?

படைத்தல் கடவுள் பிரம்மா என்று சொல்லுகிறார் களே, அவன் யோக்கியதை என்ன? பெற்ற மகள் சரஸ் வதியையே பெண்டாட்டியாகக் கொண்டவன்தானே! இதற்கு மேலாகவா எடுத்துச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்?

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யின் யோக்கியதை என்ன? அவர் எந்தக் குற்றத்தில் சிக்கி இப்பொழுது ஜாமீனில் நடமாடுகிறார்? அவர் ஏன் சிறைக்குச் செல்ல நேர்ந்தது?

பக்தர்கள் ஒரே ஒரு நொடி இவற்றையெல்லாம் கண்முன் நிறுத்திக் கருத்தோடு சிந்தித்தால், மதமும் அது காட்டும் வழியும் மக்களுக்கு ஆபத்தானது என்பதை விளங்கிக் கொள்ளலாம் அல்லவா!
http://www.viduthalai.periyar.org.in/20101218/news04.html

No comments:


weather counter Site Meter