Pages

Search This Blog

Saturday, December 25, 2010

நாத்திகமே நன்னெறி

கவிஞர் வாலி அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் ஒரு தொடரை எழுதிக் கொண்டு வருகிறார். எளிய தமிழில் சுவையாகவே இருக்கிறது. அவர் ஓர் ஆன்மிக வாதி என்பது அவரது தோற்றத்தைப் பார்த்தாலே எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வார இதழில் இரண்டு நாத்திகர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் - அவரது ஊர்க் காரர் - இளமைக்காலந் தொட்டுப் பழகி வந்த நண்பர் நடராஜசுந்தரம்.

சிறீரங்கம் கழுதை மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி. ஒரு நாள் வாலியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்த போது, வாலியின் பின்னால் வந்த கோதுமை நாகத்தை அடித்துக் கொன்று வாலியை மரணத்திலிருந்து நடராஜசுந்தரம் காப்பாற்றினாராம்.

அந்த நண்பர் - நடராஜ சுந்தரம் சிறீரங்கம் பொதுக் கூட்டத்தில் பேசினாராம். பாம்பையும், பாப்பானையும் கண்டால் முதலில் பாப்பானை அடி எனப் பேசி னாராம்.

ஆனால் மறுநாள் வாலி என்ற பாப்பானை பாம்பு கடிக்க வந்தபோது, அவரது நண்பரான நடராஜசுந்தரம் வாலியை அடிக்காமல் பாம்பை அடித்து, அதன் மூலம் வாலியான பார்ப்பனரைக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்தப் பழமொழி பெரியார் சொன்னதாக அவர் கூறியுள்ளார். அதுகூடத் தவறுதான். தந்தை பெரியார் அப்படிக் கூறியதாக எந்த இடத்திலும் இல்லை; இன்னும் சொல்லப்போனால் அது வட இந்தியாவி லிருந்து வந்த ஒன்று என்ற ஒரு கருத்துக்கூட இருக்கிறது.

பார்ப்பான் பணக்காரனாக ஆவது பற்றி எனக்குக் கவலையில்லை. அவன் உயர்ஜாதிக்காரனாகவும், இன்னொருவன் தாழ்ந்த ஜாதியாகவும் நிலவும் நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுதான் தனது கருத்து என்று பார்ப்பான் பணக்காரனானால் என்னும் கட்டு ரையிலே குடி அரசில் (9.11.1946) தந்தை பெரியார் எழுதியுள்ளார்.

நீ சினிமாவுல ஒரு பெரிய ஆளா வருவே! என்று தமது நாத்திக நண்பர் சொன்னது இப்பொழுது பலித்துவிட்டது என்று எழுதும் கவிஞர் வாலி , நடராஜ சுந்தரத்தின் வாக்கு தெய்வ வாக்காகப் பலித்தது; நான் சினிமாவில் பெரிய கவிஞனாக வளர்ந்து விட்டேன். அதைப் பார்க்க அவன்தான் இல்லை என்கிறார்.

நாத்திகரான நடராஜசுந்தரம் கூறியது ஒரு கணிப்பே தவிர, அது தெய்வவாக்கு என்பது நடராஜ சுந்தரம் ஏற்றுக் கொண்ட கருத்தை ஒரு வகையில் கொச்சைப் படுத்துவதாகவே கருதவேண்டும்.

இதற்கு முன்பேகூட இதே தொடரில் (17.11.2010) பின்வருமாறு எழுதியுள்ளார்:

சுப்பிரமணிய துதியமுது பாடிய பாவேந்தர் - பின்னாளில் பகுத்தறிவைப் பாடினாலும் - அதையும் அவர் உள்ளிருந்து ஓதிய எம்பிரான் முருகன் எனலாம் என்று எழுதியுள்ளார். இதுவும் தன் கருத்தை புரட்சிக் கவிஞர் மேல் திணிக்கும் முறையாகும்.

1926 இல் சுப்புரத்தினமாக இருந்த நிலையில், சிறீ மயிலம் சுப்பிரமணியன் துதியமுது நூலை எழுதியது உண்மைதான். 1928 இல் தந்தை பெரியார் கொள் கையை ஏற்றுக் கொண்ட நிலையில், 1933 இல் ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னையில் நடை பெற்ற நாத்திகர் மாநாட்டின் பதிவேட்டில், நான் ஒரு நிரந்தர நாத்திகன் என்று எழுதி கையொப்பமிட் டுள்ளார் புரட்சிக்கவிஞர்.

அத்தகைய புரட்சிக் கவிஞரை வாலி அவர்கள் பாடபேதம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மானமிகு கலைஞர் அவர்களைப் பற்றிக்கூட இதே பாணியில் கவிஞர் வாலி கூறியதுண்டு. அதே போல எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கைப் பற்றிக் கூறும்போது ஒரு காலத்தில் அவர் நாத்திகராக இருந்தார். இப்பொழுது குருத்துவாரத்தில் சரண டைந்தார் என்று எழுதியுள்ளார்.

ஆனால், குஷ்வந்த் சிங் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்து டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் (28.11.2010) வெளிவந்துள்ளது. அதில் தன்னை, அக்னாஸ்டிக் என்றே குறிப்பிட்டுள்ளார். அதாவது கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ கூறாத - நம்பாத ஒரு நிலையினர் ஆவார்.

இந்த வார ஆனந்த விகடனில் (29.12.2010) இன் னொரு நாத்திகரைக் குறிப்பிட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் என்னைச் சந்தித்து, எனக்குப் பேச்சு வரும் என்று சொல்லி, அவர் சொன்ன சொல் பலித்தது என்று சொன்னேனே - அவர் ஒரு நாத்திகர். அவர்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு திரு. வீரமணி அவர்கள் என்று கூறியுள்ளார்.

தமது கருத்தை இந்த நாத்திகர் மீது திணிக்காதது வரவேற்கத் தக்கது.

இந்தத் தொடரில் ஒரு கருத்தை கவிஞர் வாலி பதிவு செய்துள்ளார்.

நாணயமான ஒரு நாத்திகன், நாணயமற்ற ஓர் ஆத்திகனை விட நூறு மடங்கு மேலானவன் என்று எழுதியுள்ளார்.

உண்மைதான். நாணயமான மனிதராக வாழ நாத்திகமே நன்னெறி!
http://viduthalai.periyar.org.in/20101225/news02.html

No comments:


weather counter Site Meter