செல்வி உமாபாரதி பா.ஜ.கட்சியிலிருந்து விலகி வேறு ஒரு புதிய அமைப்பைத் தொடங்கினார். மீண்டும் பா.ஜ.க.வில் சேரப்போகிறார் என்ற செய்தி அவ்வப் போது வந்து வந்து போகும்.
உண்மையைச் சொல்லப்போனால் உமாபாரதி விடயத்தில் பா.ஜ.க. பெரும் துரோகம் செய்துவிட்டது என்பதில் எள் மூக்கு அளவுக்கும் கூட அய்யப்பாடு கிடையவே கிடையாது.
பா.ஜ.க. வளர்ச்சிக்கு உமாபாரதி மிக முக்கியமான வர்; அதிலும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்கு அவர்தான் உயிர் நாடி போன்றவர்.
2003 இல் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்று உமாபாரதி முதல் அமைச்சர் ஆனார். 1994 இல் கருநாடக மாநிலத்தில் ஹூப்ளியில் நடைபெற்ற மதக் கலவரம் தொடர்பாக உமாபாரதி மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது - அதாவது பத்தாண்டுகள் கழித்து.
பா.ஜ.க. சங் பரிவார்க் கும்பலில் ஆதிக்கக் கூட்ட மான பார்ப்பனர்கள், இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உமாபாரதி பதவி விலகவேண்டும் என்று கூச்சல் போட்டார்கள். (பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளியான அத்வானி - இந்தியாவின் துணைப் பிரதமராகவே இருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.) வேறு வழியின்றி, செல்வி உமா பாரதி பதவி விலகினார். (உமாபாரதி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை கவனத்தில் கொள்க!)
நீதிமன்றத்தில் உமாபாரதி குற்றவாளியல்ல என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தார்மீகப் பண்புக்கே மொத்த குத்தகையைத் தாங்களே எடுத்துக் கொண் டுள்ளதாக டமாரம் அடிக்கும் பா.ஜ.க. தலைவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? செல்வி உமாபாரதியை மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்த்தியிருக்க வேண்டும் அல்லவா - அதுதானே நியாயம்?
தற்காலிகமாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தப் பட்ட பாபுலால் கவுரையே முதலமைச்சராகத் தொடரும் படிச் செய்தனர். அது செல்வி உமாபாரதிக்கு இழைக்கப் பட்ட மாபெரும் அநீதியல்லவா? பிற்படுத்தப்பட்டோருக் குள் மோதவிடச் செய்யும் பார்ப்பனிய நரித் தந்திரம் அல்லவா?
பொதுவாக பா.ஜ.க.வில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம் குறித்து மிக வெளிப்படையாகவே உமாபாரதி சொன்னதுண்டு.
1990 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில் உமாபாரதி கூறியது என்றைக்குமே முக்கியமானது.
எங்கள் கட்சியை மக்கள் பார்ப்பனர் கட்சியாகத் தான் பார்க்கிறார்கள். கல்யாண்சிங், வினய்கட்டியார், நான் எல்லோருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான். ஆனாலும் எங்களையும் மக்கள் பார்ப்பனர்களாகத்தான் பார்க்கிறார்கள்.
பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க.வுக்குள் அடிமட்டத் தொண்டர்களாக இருந் தாலும் கூட ஒதுக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டி யிட பிற்படுத்தப்பட்டோருக்கு டிக்கெட் கொடுப் பதில்லை.
இந்த அநீதியை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தில் நான் போராடினேன். ஆனால் அது எடுபடவில்லை. இந்து மதம் என்று நாங்கள் பேசினாலே அது பார்ப்பன ஆதிக்கம் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்குப் பா.ஜ.க. பார்ப்பனக் கட்சியாகிவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினருக்காக பி.டி.சர்மா போராடினார். அவரை பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் துக்காரர்கள் போட்டு உதைத்தார்கள். இந்த ஒரு சம்பவத்தால் மத்தியப் பிரதேசத்தில் 40 தொகுதிகளை நாங்கள் இழந்தோம்.
தோல்வி அடைந்த பிறகும் கூட ஜாதி ஆதிக்கம் போகவில்லை. மத்தியப் பிரதேச சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விக்ரம் வர்மாவை தேர்ந்தெடுக்க முயற்சிக்காமல், மத்தியப் பிரதேச மக்கள் ஆதரவே பறிபோகக் காரணமாக இருந்த சுந்தர்லால் பட்வாரியையே கட்சித் தலை வராக்க முயற்சி நடந்தது. அவர் வேண்டாம் என்று மறுத்த பிறகுதான் விக்ரம் வர்மா தேர்ந்தெடுக்கப் பட்டார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடம் அளிக்க வேண்டுமென்று 1996-லேயே நான் போராடினேன். பிற்படுத்தப்பட்டவர் சொன்னால் அம்பலம் ஏறுமா? என்று இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே உமாபாரதி கூறினார்.
இவ்வளவுக்குப் பிறகும் பா.ஜ.க.வுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று அவர் கருதுவாரேயானால் அது கடைந்தெடுத்த - அரசியல் பதவி சார்ந்த சுய நலமாகத்தானே இருக்க முடியும்?
பா.ஜ.க.வின் உயர்ஜாதி பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் இயக்கம் ஒன்றை அவர் நடத்து வாரேயானால், அது மிக உபயோகமான பெருந் தொண்டாக இருக்கமுடியும்- செய்வாரா?
http://www.viduthalai.periyar.org.in/20101228/news04.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment