Pages

Search This Blog

Friday, December 17, 2010

கொல்லைப்புற வழியாகக் கொள்ளையோ, கொள்ளை!

சமூகநீதியை - போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை கீழ்வேலைகளில் இறங்கி வேரை வெட்டும் வேலையில் பார்ப்பன சக்திகள் இறங்கி இருப்பதை உணராவிட்டால், தடுக்காவிட்டால் ஒரு கையில் பெற்று இன்னொரு கையால் இழக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவோம்.

இந்தச் சதிப் பின்னலுக்கு நீதிமன்றங்கள் கூடத் துணை போவது வெட்கக்கேடாகும்.

(1) எடுத்துக்காட்டாக மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். தேர்வுகளில் நடத்தப்படும் சட்டவிரோத செயலாகும்.

திறந்த போட்டி (Open Competition) தான் எடுத்த எடுப்பி லேயே பூர்த்தி செய்யப்படவேண்டும். அதிக மதிப்பெண்கள் பெறும் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதியினர் போட்டியிடும் இடம் இது. இதுதான் சட்டத்தின் நிலை.

ஆனால், அண்மைக்காலமாக என்ன நடக்கிறது? திறந்த போட்டியில் அதிக மதிப்பெண் பெற்று இடம் பெற் றுள்ள தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரை - தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீட்டுக்குள் கொண்டு வந்து, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களில் இடம் பெற்றோர் வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த சட்ட விரோத செயலுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிற்று என்கிற அவலத்தை, அநீதியை எந்த விலை கொடுத்தேனும் தடுத்து நிறுத்தவேண்டும். கடந்த பல ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சட்ட விரோத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எதுவாக இருக்க முடியும்?

(2) அய்.ஏ.எஸ்., தேர்வு முறையில் கொண்டுவரப் பட்டுள்ள மாற்றமாகும்.

இதுவரை முதல் நிலைத் தேர்வில் முதல் தாள் என்பது பொது அறிவு குறித்து இருக்கும். இரண்டாவது விருப்பப் பாடமாக இருந்து வந்தது. பொது அறிவுக்கு 150 மதிப் பெண்களும், விருப்பப் பாடத்துக்கு 300 மதிப்பெண்களும் அளிக்கப்பட்டு வந்தன.

விருப்பப் பாடம் என்கிற பொழுது, வரலாறு, பொரு ளியல், இலக்கியம், கால்நடை மருத்துவம், வேளாண்மை போன்ற 23 பாடங்களில் எதை வேண்டுமானாலும் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக அடித்தட்டு மக்கள் தாங்கள் பட்டப் படிப்பில் படித்த ஒரு பிரிவை எடுத்துக்கொண்டு தேர்வு எழுதிட வாய்ப்புக் கிடைத்தது - அதன்படி வெற்றி பெற்றும் வந்தனர்.

பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? முதல்நிலைத் தேர்விலேயே (பிரிலிமினரி) இந்த அடித்தட்டு மக்களை அடித்துத் தூக்கி எறிந்துவிட்டால், இரண்டாவது கட்டத் தேர்வுக்கு (மெயின்) வர முடியாமல் ஆக்கிவிடலாமே என்ற சூழ்ச்சிப் பொறியை இப்பொழுது கொண்டுவந்துவிட்டனர்.

விருப்பப் பாடம் என்ற பகுதியை அகற்றிவிட்டு பொதுத் திறனறித் தேர்வுத் தாள்(General Aptitude Test) ஒன்றை அறிமுகப்படுத்திட உள்ளனர்.

வங்கித் தேர்வு போன்றவற்றில் கையாளப்படும் முறை இது.

கிராமப்புறத்து மாணவர்கள் தனிப் பயிற்சிகளில் சேர்ந்து படிப்பது, அதற்காகச் செலவு செய்வது என்பதெல் லாம் இயலாத காரியமாகும். அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் படித்துவரும் மாணவர் களால்தான் இந்தத் தேர்வுகளைச் சந்திக்க முடியும்.

கிராமச் சூழல், தக்க ஆசிரியர்கள் இல்லாமலும், சோத னைச் சாலை, நூலகம் போன்ற வசதிகள் இல்லாமலும் எப்படியோ படித்து வெளியில் வரும் மாணவர்கள், இந்தப் புதிய முறை தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பே!

கடந்த சில ஆண்டுகாலமாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய தேர்வாணையத் தேர்வுகளில் பாராட்டத்தக்க அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். குறிப்பாக 2009 இல் நடைபெற்ற அய்.ஏ.எஸ்., தேர்வில் இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 236; இதில் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்திட்ட இடங்கள் 95.

இந்த நிலையை வீழ்த்திடத்தான் சூழ்ச்சி வலையைப் பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் பின்னியுள்ளன.

ஏற்கெனவே கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தி யிலே இடைவெளி பெரிய அளவில் உள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது; சமூகநீதியாளர்கள் வீதிக்கு வந்து வீழ்த்தாவிட்டால் நாம் போராடிப் பெற்ற உரிமைகளுக்குப் பொருளே இல்லாமல் போய்விடும் - எச்சரிக்கை!

(3) தொடர்ந்து சமூகநீதியாளர்கள் போராடியதன் காரணமாக மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும் இட ஒதுக்கீடுக்கு வழி செய்யும் சட்டம் (93 ஆவது சட்டத் திருத்தம் - சரத்து 15(5)) இயற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதத்தை ஒரே ஆண்டில் கொடுக்க முடியாது - ஆண்டு ஒன்றுக்கு 9 சதவிகிதமாக 3 ஆண்டுகளில் அளிக்கப்படும் என்றனர்; அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் முடியாது என்றனர்.

தாழ்த்தப்பட்டோரையும், பிற்படுத்தப்பட்டோரையும் பிரிக்கும் பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் தாழ்த் தப்பட்டோருக்கு மட்டும் தனியே மாநிலங்களவையின், கடைசிக் கூட்டத்தின் கடைசி நாளில் மசோதா ஒன்றை தாக்கல் செய்தனர் (2008 டிசம்பர் 23) எந்தவிதமான விவாதமின்றியே இரண்டே நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதில் என்ன கொடுமை தெரியுமா? முக்கியத்துவம் வாய்ந்த 47 கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடை யாது என்ற விஷமத்தை சன்னமாக நுழைத்துவிட்டனர். இதனை எதிர்த்துத் திராவிடர் கழகம்தான் போராட்டம் நடத்தியது.

எது எதற்கெல்லாமோ நாடாளுமன்றத்தை முடக்கு பவர்கள் இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாகக் கையாண்ட விஷமத்தனத்தைக் கண்டு கொள்ளாதது ஏன்?

போராடிப் பெற்ற உரிமைகள் கொல்லைப்புற வழியாகக் கொள்ளை அடிக்கப்படுகின்றன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
http://www.viduthalai.periyar.org.in/20101216/news14.html

No comments:


weather counter Site Meter