Pages

Search This Blog

Tuesday, December 7, 2010

நாடாளுமன்றத்தை முடக்குவது சரியா?நியாயமா?டிசம்பர் 10 திக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரையில் கடந்த ஞாயிறன்று (5.12.2010) நடைபெற்ற தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு முக்கிய தீர்மானம் வருமாறு:

தொலைத்தொடர்புத் துறையில் ஊழல் என்று கூறி, இதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இரு வாரங் களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை நடக்க விடாமல், வாக்களித்த மக்களுக்காக நாடாளுமன்றங்களில் கருத்து களையும், கோரிக்கைகளையும், விவாதங்களையும் நடத்து வதற்கு மாறாக, நாடாளுமன்றங்களையே நடத்தவிடாமல் சண்டித்தனம் செய்து மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது, மக்கள் நாயக அமைப்பு முறைக்குப் பெரும் கேடும், இழுக்கும் என்று இம்மாநாடு திடமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படி நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுக்கும் நிலையில், உறுப்பினர்களுக்கான படிகளோடு, சம்பளத்தை யும் நிறுத்தவேண்டும் என்று, குடிமக்கள் என்ற முறையில் மத்திய அரசையும், நாடாளுமன்ற இரு அவைத் தலைவர் களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினைபற்றிய விவாதத்தை எழுப்பும் வகையிலும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை 10.12.2010 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானம் என்பது ஏதோ திராவிடர் கழகம் ஒரு கட்சிக் கண்ணோட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானமாகக் கருத முடியாது.

பொதுமக்களின் பரவலான கருத்தினை உள்ளடக்கித்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால், பொதுநலனில் கொண்ட அக்கறையின் காரணமாக திராவிடர் கழகம் கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம்.

நாடாளுமன்றம் நடைபெறவேண்டுமானால், நிமிடம் ஒன்றுக்கு ரூ.23,083 செலவாகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.1.23 கோடி செலவாகிறது என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து குளிர்காலக் கூட்டத் தொடர் 18 ஆவது நாளாக நேற்றுவரை முடக்கப்பட்டுவிட்டது. இதனால் குடிமக்களின் வரிப் பணம் எந்த அளவுக்கு கரியாக்கப்படுகிறது என்பது முக்கியமானதாகும்.

மக்களின் பிரதிநிதிகள் அவர்களுக்கான அவைகளில் தங்கள் கருத்துகளை எடுத்து வைக்கலாம்; குற்றச்சாற்றுகளை முன்வைக்கலாம் - விரிவான விவாதங்களை நடத்தலாம். அதனை விட்டுவிட்டு அவைகளையே நடத்த விடக்கூடாது என்ற மூர்க்கத்தனத்தில் ஈடுபடுகிறார்கள்; அவைத் தலைவர் களை முற்றுகையிடுகிறார்கள் என்றால் இது என்ன மக்கள் நாயகம்?

இன்னும் சொல்லப்போனால், தாங்கள் விரும்புவது நடக்கவில்லை என்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் ஒருவகையான வன்முறை வெறியாட்டம் அல்லாமல் வேறு என்னவாம்?

2010 ஜூலையில் விலைவாசிகள் உயர்வு குறித்துப் பிரச் சினைகளை எழுப்பி நாடாளுமன்ற அவையின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்று அப்பொழுது கூறப்பட்டது. தொடர்ந்து அவைகள் முடக்கப் பட்டதால் - அதுதான் சந்தர்ப்பம் என்று அந்தச் சட்டம் மீண்டும் ஊறுகாய் ஜாடிக்குள் சென்றுவிட்டது.

இப்பொழுதும் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிறுத்தப்படும் மோசமான ஒரு நிலையை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாகத் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. வாக்காளர்கள் அவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தார்மீகமான சினம் நாளும் கூர்மை பெற்றுதான் வருகிறது என்பதை எதிர்க்கட்சியினர் உணர்ந்து கொள்ளா விட்டால், அதன் பலனை எதிர்காலத்தில் வட்டியும் முதலுமாக அனுபவிக்க நேரிடும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

விவாதத்துக்குத் தயார் என்று ஆளும் கட்சித் தரப்பில் வெளிப்படையாகச் சொல்லும்போது, அதனை ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வராததன் மூலம் தெரிவது என்ன?

அவர்கள் பக்கம் வலுவான காரணங்கள், நியாயங்கள் இல்லை - எனவே விவாதம் நடத்த அஞ்சுகின்றனர் என்று தானே பொருள்படும்?

இன்றைக்கு ஊழலோ ஊழல் என்று ஊது சங்கெடுத்து முழங்குபவர்கள் ஆட்சியில் - குறிப்பாக பா.ஜ.க. ஆட்சியில் எத்தனை எத்தனை ஊழல்கள்? அப்பொழுதெல்லாம் இப் பொழுது இவர்கள் முன்வைக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமனம் செய்திருந்தால் இவர்கள் உத்தமர்கள்தான்; அக்மார்க் ஜனநாயகவாதிகள்தான் என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பார்வை, எதிர்க்கட்சி யாகி விட்டால் இன்னொரு பார்வை என்றால், இதுபற்றி வாக்காளப் பெருமக்கள் சிந்திக்கமாட்டார்களா?

இடதுசாரிகளை நினைத்தால் நகைச்சுவையாகவும் இருக்கிறது; இன்னொரு பக்கத்தில் வேதனையாகவும் இருக்கிறது.

டிசம்பர் 6 - என்பது அயோத்தியில் பா.ஜ.க. சங் பரிவார்க் கூட்டம் பாபர் மசூதியை இடித்த நாள் (1992). அந்த நாளில் காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தில் அப்பிரச்சினை குறித்துக் குரல் கொடுத்த நேரத்தில் இடதுசாரிகள் பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி குரல் கொடுக்கிறார்கள். இடதுசாரிகளின் நிழலில் பா.ஜ.க.வினர் பதுங்குவதை என்னவென்று சொல்லுவது?

எல்லாவற்றையும் அம்பலப்படுத்த வரும் 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்திட கழகத் தோழர்களே ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!
http://www.viduthalai.periyar.org.in/20101207/news16.html

No comments:


weather counter Site Meter