Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

தமிழர் தலைவர் கி.வீரமணி- தந்தை பெரியார் கண்டெடுத்த நல்மணி!

1944 ஆம் ஆண்டு ஆகத்து 27ஆம் நாள் சேலம் மாநகரில் எழுச்சியோடும், தந்தை பெரியாரே எங்கள் தலைவர் என ஏழை எளியோர் ஏராளமாகக் கூடிய நீதிக் கட்சி 16ஆம் மாநாடு சிறப்புடன் நடந்தேறியது.

இயக்க வரலாற்றில் திருப்புமுனையாக நீதிக்கட்சி என்ற பெயரை நீக்கித் திராவிடர் கழகம் என மாற்றுப் பெயரைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றியதற்குப் பிறகு மக்கள் இயக்கமாக மலைக்கத் தக்கவகையில் வளர்ந்து ஓங்கியது.

திராவிட இயக்க வரலாற்றில் 1944 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்களிடையே ஏற்பட்ட புதிய எழுச்சியும்,புத்துணர்ச்சியும் குறிப்பிடத்தக்கவை.

திராவிடர் கழகம் முழுக்க முழுக்க ஏழை, எளிய, பாட்டாளிகளும், பாமர மக்களும் நிரம்பிய கட்சி என்ற பெயர் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் பெரியார் அண்ணா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டுக் கழகத்தில் வந்து சேரலாயினர்.

பேரறிஞர் அண்ணா அவர்களைக் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு அழைக்கத் தொடங்கின. மேடைப் பேச்சிலே அண்ணா பாணி என்ற ஒன்று ஏற்பட்டது. அந்தப் பாணியிலேயே மாணவர்களெல்லாம் பேசத் தலைப்பட்டனர்.

திராவிடர் கழகத்திற்கு நாவன்மை மிக்க ஒரு பேச்சாளர் பட்டாளமே கல்லூரிகளிலிருந்து வெளிப்பட்டது.

திராவிட இயக்க உணர்ச்சியும் எழுச்சியும் தமிழகத்தில் பொங்கி வழியத் தொடங்கின. அது ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். அப்போதுதான் முளைவிட்டுச் செடியாக வெளிவந்தது. வீரமணி என்னும் ஒரு வீர விதை. அந்தச் செடிக்கு நீரூற்றி உரமிட்டு வளர்த்தவர் கடலூர் ஆ.திராவிடமணி என்பவர் ஆவார்.

பள்ளி ஆசிரியரான ஆ.திராவிடமணி அவர்கள் சாரங்கபாணி என்னும் மாணவ மணிக்கு வீரமணி எனத் தனித்தமிழ் பெயர் சூட்டி நாடெங்கும் அழைத்துச் சென்று கொள்கை மணம் கமழச் செய்தார்.

பன்னிரண்டு வயதுச் சிறுவன் வீரமணி பேச்சைக் கேட்க வாரீர்! என்று அந்தக் காலத்தில் துண்டறிக்கைகளை அச்சடித்து விளம்பரம் செய்வார்கள். சிறுவன் வீரமணி வீர முழக்கமிடுவதைக் கேட்க ஒவ்வோர் ஊரிலும் மக்கள் கூடுவார்கள்.

அந்தக் காலகட்டத்தில் எங்கள் ஊரான திருக்காரவாசலுக்கு அருகில் உள்ள ஆலத்தம்பாடி என்னும் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த சேஷைய ராசு, ஆசிரியர் சண்முகம், தையற்கடை வைத்திருந்த அப்பாண்ட ராஜன் ஆகியோருடன் நானும் சேர்ந்து வீரமணியை அழைத்து கழகப் பொதுக் கூட்டம் நடத்தினோம்.

1946ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாள் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அன்றைக்கு முந்திய நாள் காலை திருத்துறைப்பூண்டியில் தஞ்சை மாவட்ட மாணவர் கழக மூன்றாவது மாநாடும், பிற்பகல் முதலாவது கருஞ்சட்டை மாநாடும் நடைபெற்றன.

அந்த மாநாட்டில் கலந்துகொண்ட காஞ்சி கலியாணசுந்தரம், கடலூர் ஆ.திராவிடமணி, கடலூர் வீரமணி, கவிஞர் கருணாநந்தம் ஆகியோரை ஆலத்தம்பாடிக்கு அழைத்து வந்து அந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

அன்று மாலை தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப்படத்தை ஏந்தியவாறு கால்நடையாக ஊர்வலம் நடத்தினோம். எங்களுடன் அந்த ஊர்வலத்தில் சிறுவன் வீரமணியும் நடந்துவந்தார்.

அன்று அந்தச் சிற்றூர் மக்களெல்லாம் சிறுவன் வீரமணியின் வீர முழக்கம் கேட்டு வியந்தும் மகிழ்ந்தும் பாராட்டினர்.

அன்று அவர் பந்தலிலே பாகற்காய் என்னும் குட்டிக் கதையை உவமையாக எடுத்துச் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

அதாவது, ஓர் இழவு வீட்டில் ஒப்பாரி வைத்துப் பெண்கள் அழுது கொண்டிருந்தபோது அந்தத் துக்கத்தில் கலந்துகொள்ள இரண்டு பெண்மணிகள் அந்த வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டின் உள் முற்றத்தில் பாகற்காய் நிறைய காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அந்தப் பெண் மணிகளில் ஒருவர் தமது ஒப்பாரியோடு ஒப்பாரியாகப் பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய் என்று பட ஆரம்பித்தார். அதைக் கேட்டு மற்றொரு பெண்மணி போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பறிச்சுக்கலாம் என்று ஒப்பாரியோடு சேர்த்துப் பாடினாராம்.

இப்படிப் பல குட்டிக்கதைகளையும் அடுக்கடுக்கான உவமைகளையும் சொல்லி மேடையில் சிறுவன் வீரமணி ஆற்றிய உரை பாமர மக்களின் உள்ளத்திலெல்லாம் நமது கொள்கையைப் பதியம்போடச் செய்தது என்றால் மிகையாகாது.

பவள விழா கண்ட வீரமணியும், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் திருமதி மோகனா வீரமணி அவர்களும், அவர்தம் பிள்ளைச் செல்வங்களும் பல்லாண்டு பல்லாண்டு எல்லா நலமும் இனிதே பெற்று வாழ்க என முத்துவிழா கண்ட நான் வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்று பன்னிரண்டு வயது சிறுவனாக நான் பார்த்த வீரமணிதான் என்னுடைய 80 ஆவது பிறந்தநாள் விழாவிலும் 81 ஆவது பிறந்தநாள் முத்து விழாவிலும் கலந்துகொண்டு என்னை வாழ்த்திச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(கடந்த 2.12.2010 அன்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள்.)

(நன்றி: மீண்டும் கவிக் கொண்டல் - டிசம்பர் 2010)
http://www.viduthalai.periyar.org.in/20101228/news05.html

No comments:


weather counter Site Meter