Pages

Search This Blog

Friday, December 24, 2010

இராசா எங்கே - அத்வானிகள் எங்கே?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் சி.பி.அய். தனது விசா ரணையை ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சோதனை கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து சம்பந் தப்பட்டவர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

சோதனைகள் நடந்தபோது முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று சி.பி.அய். அதிகாரிகளே கூறியிருக்கின்றனர். அதேபோல, விசாரணைக்கும் போதிய ஒத்துழைப்பை அளிப்பதாக கூறியிருக்கின்றனர்.

அதே நேரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?

பாபர் மசூதி இடிப்பு வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே - போதிய ஒத்துழைப்புக் கொடுத்திருந்தால் இந்த வழக்கு விசாரணை முடிந்து பா.ஜ.க.வின் பெரும் தலைவர்கள் சிறைக் கொட்டடியில் கிடந்திருக்கவேண்டிய நிலைகூட ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டே!

குற்றங்கள் என்ன சாதாரணமானவையா? இந்திய குற்றவியல் சட்டம் 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகள் ஆயிற்றே!

கலகம் விளைவித்தல் மக்களிடையே குரோத உணர்ச்சிகளைத் தூண்டுதல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், பீதியை உண்டாக்குதல் என்கிற குற்றங்கள் சாதாரணமானவையா?

ஊழலை விட பன்மடங்கு அபாயகரமான குற்றங் களாயிற்றே!

இதில் வெட்கக்கேடு என்னவென்றால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட திருவாளர் எல்.கே. அத்வானி அதிகாரத்தில் இருந்த காரணத்தால், தொழில்நுட்பக் காரணங்களைச் சொல்லி இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாரே! ஆகா, எவ்வளவுப் பெரிய யோக்கிய சிகாமணிகள்; அதிகாரத்தைச் சற்றும் துஷ்பிரயோகம் செய்யாத உத்தம சீலர்கள் இவர்கள் - அப்படித்தான் மற்றவர்களும் நம்பித் தொலைக்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!

மேல்முறையீட்டின் காரணமாக அலகாபாத் உயர்நீதிமன்றம் மீண்டும் அத்வானியை வழக்கில் இணைக்கும்படி நேர்ந்தது.

அதேபோல, பாபர் மசூதி இடிப்புக் குறித்த நீதிபதி லிபரான் ஆணையத்தின் விசாரணையில் இதே அத்வானி எப்படியெல்லாம் நடந்துகொண்டார்?

அத்வானியைக் குறுக்கு விசாரணை செய்தவர் அரசு வழக்கறிஞர் அனுபம் குப்தா என்பவர். இவரின் கேள்வி களுக்கு முன் அத்வானி நிலை குலைந்து போனார். நேர்மை இல்லாத இடத்தில், இத்தகைய இடர்ப்பாட்டைச் சந்திக்கத் தானே நேரும்?

அத்வானி நீதிபதி லிபரானிடம் சரணடைந்த நிலையில், நீதிபதியே அரசு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுங்கள் என்று கேட்டுக் கொள்ளவில்லையா?

லிபரான் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி பெயரும் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், என்ன சொன்னார்கள் இந்த உத்தமப் புத்திரர்கள்? வாஜ்பேயியை எப்படி சேர்க்கலாம் என்று எகிறிக் குதிக்கவில்லையா?

ஒரு நீதிபதியின் தலைமையில் அமைந்த ஆணையம் சங் பரிவார்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடனம் ஆட வேண்டுமா? இதுதானே இந்தக் கூட்டத்தின் எதிர்பார்ப்பு?

இப்படி விசாரணைக்கும், நீதிமன்றத்திற்கும் ஒத்துழைக்காது அடம்பிடித்த ஆசாமிகள் எங்கே?

2ஜி அலைக்கற்றை விசாரணைக்கு எல்லா வகைகளிலும் ஒத்துழைப்புக் கொடுத்துவரும் இராசாக்கள் எங்கே?

விசாரணைக்குத் தயார் - எந்தத் தேதியில் சி.பி.அய்.க்கு வசதிப்படுகிறதோ அந்தத் தேதியில் நேரில் வரத் தயார் என்று மிகவும் நேர்மையாகப் பதில் தந்துள்ள இராசாவைப் பார்த்து கைநீட்டிப் பேச அத்வானி வகையறாக்களுக்குக் கிஞ்சிற்றும் தகுதி உண்டா என்று சவால் விட்டுக் கேட்கின்றோம்.

பா.ஜ.க.வைப் போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் நடந்து கொள்கிறார். இவர்மீது சாற்றப்படாத ஊழல் குற்றச்சாற்றா?

நீதிமன்ற நடவடிக்கைகளை முடக்குவதிலும், கால தாமதத்துக்கு ஆளாக்குவதிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர் இவர்.

இந்த அம்மையார் ஊழலைப்பற்றிப் பேசினால், அது கடைந்தெடுத்த நகைச்சுவைப் பெரும் விருந்தாகத்தான் இருக்கும்.

ஊழல் வண்ணத்தால் கறைபடிந்த மனிதர்களும், நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத பேர்வழிகளும், வெறும் யூகத்தின் அடிப்படையில் இழப்பு ஏற்பட்டது என்று கூறி ஆ.இராசாமீது சேறு வாரி இறைக்கத் தகுதி உடையவர்கள்தானா?

சி.பி.அய். விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கும் இராசாமீது, விசாரணைகளுக்கு ஒத் துழைக்காத பேர்வழிகள் விமர்சனம் செய்யக்கூடத் தகுதி அற்றவர்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்களாக!
http://www.viduthalai.periyar.org.in/20101222/news05.html

No comments:


weather counter Site Meter