Pages

Search This Blog

Friday, December 17, 2010

நின்ற சொல்லர் பேராசிரியர் வாழ்க! - க. திருநாவுக்கரசு -

(பேராசிரியர் அவர்களின் 89 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 19) இச்சிறப்புக் கட்டுரை)


அறிவு அவிழ இன்பந்தாக்கும் பேச் சாற்றலுக்குச் சொந்தக்காரரான பேரா சிரியர் பெருந்தகைக்கு (டிசம்பர் 19 ஆம் தேதி) 89 ஆவது பிறந்த நாள்! நமது இயக் கத்தவர் எவரும் அவரது இயற்பெயரைக் கூறுவதில்லை. எத்தனையோ பேராசிரி யர்கள் இருந்து இருக்கிறார்கள்; இருக் கிறார்கள்; எழுதுகிறார்கள்; பேசுகிறார் கள். அவர்கள் எல்லாம் நமக்குப் பேரா சிரியராகத் தெரிவதில்லை. அவர்களை நாம் எப்போதும் பேராசிரியர் என்று அழைப்பதும் இல்லை. இதற்குக் காரணம் என்ன? கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பை உண்டாக்கக் கூடிய பேச்சை மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் அவன் பொறுப்பை உணர்த்தக் கூடிய விதத்தில் கடந்த 75 ஆண்டுகளாய்த் தொண்டாற்றிவருபவர் நமது பேராசிரியர்! நம் சிந்தையைச் சிலிர்க்க வைத்து, நமது குருதியோட்டத்தை மேலும் சூடேற்றி கொள்கைத் தணலைக் குறையாமல் காத்து வருபவர். தமிழ்நாட்டு மக்களுக்குப் பேராசிரியர் என்றாலே இன்னார் என்று விளங்கி விடுகிறது. மொழி, இனம், நாடு என்பதில் தமிழர்கள் விழிப்பாய் இருக்க நாளும் உழைக்கும் பேராசிரியர் பல் லாண்டுகள் வாழ வாழ்த்துகின்றோம். இத்தருணத்தில் அவரைப் பற்றி மிகச் சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம்.

பேராசிரியரின் மூதாதையர்கள்

பேராசிரியரின் மூதாதையர் மயிலாடு துறை அருகேயுள்ள கொண்டத்தூர் எனும் ஊரினர். ஆனால், நமது பேராசிரியர் திருவாரூர் அருகே உள்ள காட்டூரில் மு.கலியாணசுந்தரம் - சொர்ணம்மாள் எனும் இணையர்க்கு 19.12.1922 இல் மூத்த மகனாகப் பிறந்தார். பேராசிரியரோடு சேர்த்து ஆண்கள் 5, பெண் ஒருவர் மட்டுமே. தந்தையார் அரசியல் ஆர்வலர். விடுதலைப் போராட்ட இயக்கமான காங்கிரசில் பணியாற்றியவர். கதர் கடையை நடத்தியவர். பெரியார் காங் கிரசைவிட்டு வெளியேறியபோது இவரும் வெளியேறியவர். அதோடு கதர் கடை நடத்துவதையும் நிறுத்திவிட்டார். அங் கேயே பல நாளேடுகளையும் வார, மாத ஏடுகளையும் முகவராக இருந்து விற் பனை செய்து வந்தார். அதேசமயத்தில் மயிலாடுதுறையில் சுயமரியாதை இயக்கக் கிளையையும் உருவாக்கினார். அரசியல் கட்சியான நீதிக்கட்சியை ஆதரித்தார். கலியாணசுந்தரனார் தமிழ்ப் பற்றுமிக்க வர். அவர் தமது பெயரை மணவழகர் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

தந்தையாரின் இயக்கப் பற்று, அரசியல் பற்று பேராசிரியர் சிறுவனாக இருக்கிற போதே அவரையும் கவர்ந்தது. அந்தக் கவர்ச்சி மெல்ல ஆனால், உறுதியாக வளர்ந்தது, அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்க வைத்தது. 1938 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் அறிஞர் அண்ணா பேசியதை முதன் முதலாகக் கேட்டார். அதனை மிக வியப்பாகப் பார்க் கவும் செய்தார் மாணவரான இராமையா. அவர் பேசுகிறபோது மூன்று பக்கமும் அவர் தலை சுழன்று கொண்டே இருப்ப தையும், அவர் பேச்சின் கருத்தையும் அந்த மாணவர் இராமையா பார்த்துக் கொண்டே மிக உன்னிப்பாகக் கேட்டார். அண்ணா அம்மாணவரின் அடிமனத்தைத் தொட்டார். அது முதல் அவர் அண்ணா வின் நினைவலைகளில் மிதந்தார். இராமையா 1941 ஆம் ஆண்டு அன்பழகன் எனத் தமது பெயரை மாற்றி வைத்துக்கொண்டார்.

இத்தருணத்தில் பேராசிரியரின் தந்தையார் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதற்காகச் சிதம்பரத்தில் குடியி ருந்தார். மணவழகர் அண்ணாமலையில் படித்து வந்த பார்ப்பனர் அல்லாத மாண வர்களுக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவி புரிந்து வந்து இருக்கிறார். 1941-1942 இல் சிதம்பரத்தில் நீதிக்கட்சி மாநாடு ஒன்று நடைபெற்றது. நமது பேராசிரியரின் பேச்சையும், மாநாட்டில் அண்ணா முதன்முதலாகக் கேட்டார். மாணவரான அவரைப் பெரிதும் ஊக்கப் படுத்தினார். பேராசிரியரின் தந்தையார் சிதம்பரத்தில் குடியிருந்தபோது அங்கே வந்து அறிஞர் அண்ணா தங்கிச் சென் றுள்ளார்.

1942-லேயே அறிஞர் அண்ணாவை அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்ற வைக்கவேண்டும் என்கிற எண்ணம் அன்பழகனாருக்கு இருந்தது. அண்ணாவைப் பேசுமாறு கோரினார். அண்ணா உடனடியாகச் சம்மதிக்க வில்லை. தமிழ் ஆசிரியர்களே அப்போது அண்ணா வந்து பல்கலைக் கழகத்தில் உரையாற்றுவதை விரும்பவில்லை. அண்ணா சம்மதிக்காததற்குக் காரணம் நமது தோழர்கள் - மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதே ஆகும்.

அண்ணாவோடு பிணைப்பு

1943 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் இராமாயண சொற்போர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அறிஞர் அண்ணாவும் - ரா.பி. சேதுப்பிள்ளையும் அதில் பங்கேற்றனர். இந்நிகழ்வு நடந்த மறுவாரம் திருவாரூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு அறிஞர் அண்ணா செல்லுகிறார். அப் போது அவரைச் சந்தித்துவிட வேண்டும் என்று எண்ணிச் செயல்படுகிறார் - பேராசிரியர்!

பஞ்சாப் பிரதமராக இருந்த சிக்கந்தர் ஹையத்கான் 1942 டிசம்பர் 27 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவ ருக்கு இரங்கல் கூட்டம் திருவாரூரில் ஏற்பாடாகி இருந்தது. இந்நிகழ்ச்சி யில்தான் 1943 ஜனவரி முதல் வாரத்தில் கலந்து கொள்கிறார் அண்ணா! ரயிலில் வருகிற அண்ணாவை சிதம்பரத்தில் பேராசிரியரால் சந்திக்க முடியவில்லை. மயிலாடுதுறையில் சந்தித்துப் பேசு கிறார். பேராசிரியர் அண்ணாவோடு நீண்ட உரையாடல் நடத்துகிறார். பேராசிரியரை அண்ணாவின் எளிமை கவர்ந்துவிடுகிறது. அண்ணா அவர்மீது செலுத்திய பரிவும், அன்பும் அவரை அண்ணாவோடு சேர்த்துப் பிணித்தது.

தந்தையும், மகனும்!

இந்நிகழ்வுக்குப் பிறகுதான் 27.2.1943 இல் தமிழ் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்களின் தலைமையில் அறிஞர் அண்ணா ஆற்றோரம் எனும் தலைப்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேசினார். (இப்பேச்சைக் கேட்ட பல்கலைக் கழகப் பேராசிரியர் களும், மாணவர்களும்) மறுநாள் ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றினார். தலைப்பு: ‘The World Old and New’ என்பதாகும். இந்நிகழ்ச்சிக்கு அப் போதைய துணைவேந்தராக இருந்த எம். இரத்தினசாமி தலைமை வகித்தார். இக்கூட்டம் நடந்ததற்குப் பிறகு பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் நமது போர் நோக்கம் எனும் தலைப்பில் அண்ணா பேசினார். இக்கூட்டத்திற்கு மூன்று இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டதையும் விளம்பரம் செய்து இருந்தனர். இக்கூட்டத்தைப் பேரா சிரியரின் தந்தை மு. கலியாணசுந்தர னார் ஏற்பாடு செய்திருந்தார். பல்கலைக் கழகக் கூட்டங்களை மகனும் வெளியே நடைபெற்ற கூட்டத்தை தந்தையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்ணாமலை பல்கலைக் கழகத் தில் அறிஞர் அண்ணா மாணவர்களி டையே பேசுவதற்குக் கூட்டத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்தவர் பேரா சிரியர்தான்! அதுபோலவே, இயக்கக் கருத்துகளை மேடையில் அங்கே துணிவாக எடுத்துக் கூறியவரும் அவரே! அதனால் அவரைப் பின்பற்றும் திராவிட இயக்க மாணவரணி ஒன்று பல்கலைக் கழகத்தில் உருவாகத் தொடங்கியது. பேராசிரியர் அண்ணாமலையில் படிக்கும் காலத்திலேயே அவரைப் பின்பற்றி நாவ லர் இரா. நெடுஞ்செழியன், அ.இராச கோபாலன், இராமசாமி, புலவர் நா.மு. மாணிக்கம், புலவர் மா. நன்னன், இரா. செழியன், திரையன், கணையன், பண்ணன், செம்பியன் போன்றவர்கள் முதல் கட்டத்தில் உருவானவர்களுள் ஒரு சிலர் ஆவர். இப்பட்டியலைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் அன் பழகன் அவர்களே ஆவார். இதனைப் பேராசிரியர் மா. நன்னனும், ஆனந்த விகடன் இதழுக்கு (10.7.1983) அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.


கல்லூரிப் பணி

1944 ஆம் ஆண்டு பேராசிரியர் பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1944 ஆம் ஆண்டு முதல் 1957 ஜூலை வரை பச்சையப்பனில் பணியாற்றினார். விரிவுரையாளராகவும் பின்னர் உதவிப் பேராசிரியர் பொறுப்பிலும் இருந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர் - டாக்டர் மு.வரதராசனார் அவர்கள். அ.ச. ஞானசம்பந்தம், அ.மு. பரம சிவா னந்தம், வி.எஸ். சுப்பிரமணிய ஆச் சாரியார், பண்டித ரா. நடேச நாயகர், பேராசிரியர் அன்பு கணபதி ஆகியோர் நமது பேராசிரியர் பணியாற்றிய காலத்தில் உடன் பணியாற்றியவர்கள்!

பேராசிரியரின் மேடைப் பேச்சு மிக ஆழமானதாகவும் செறிவு மிக்கதாகவும் இருக்கும். எப்பொருளைப் பற்றி பேசு கிறாரோ அதைப்பற்றி கேட்போருக்கு விளக்கி அவர்களைத் தம் வசமாக்கும் இயல்பு அவரது பேச்சுக்கு உண்டு. வாதத் திறமை, வரலாற்று நிகழ்வுகள், இடனறிந்து பேசும் ஆற்றல், சமயங் கருதி சுருக்கி உரையாற்றுதல், பேச்சில் தோய்ந்துவிட்டால் அவர் எண்ணிய நேரத்திற்கும் அதிகமாகப் பேசி விடுதல், மேடை நாகரிகம், அதற்கான உத்தி, கூட்டத்தினரைக் கவரும் விதமான பேச்சு என மேடையை தனதாக்கிக் கொள்ளும் நயம் அவரிடம் அதிகமாக இருந்தது. பல்கலைக் கழகம் செல்வ தற்கு முன்பே மேடையேறி இருந்தாலும் இவரது இயக்க வழியான முதல் பேச்சு என்பது 1944 இல் நடைபெற்ற குடந்தை மாணவர் மாநாட்டைத்தான் குறிப்பிட வேண்டும்.

தமிழா கேள்!

இப்பேச்சுக்குத் திராவிட நாடு இதழ் தமிழா கேள்! எனத் தலைப்பிட்டு வெளியிட்டு இருந்தது. இத்தலைப் பிலேயே பேராசிரியரது மாநாட்டுப் பேச்சுகள் எல்லாம் தொகுக்கப்பட்டு பூம்புகார் பிரசுரத்தினர் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் அவர்களின் மேடைப் பேச்சை பலர் நீண்ட காலமாகக் கேட்டு வருகிறார் கள். அவர் எத்தகைய அடர்த்திமிக்க விசயத்தையும் எளிதாகப் புரியும்படி விளக்கும் ஆற்றல் உடையவர் ஆவார். அவ்விசயத்தை விளக்குகிற நமது நிலை என்ன என்பதையும் எடுத்துரைப்பார். எடுத்துக்காட்டிற்காக அவரது பேச்சி லிருந்து ஒரு சான்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

பிராமணர்களுக்கு வழிகாட்டி களான மிகப்பெரிய ஞானிகள் எனப் படும் ஆதிசங்கரர், இராமாநுஜர், மாத்துவர் என்ற இம்மூன்று பேருமாவது ஒரே கடவுள் தத்துவத்தைச் சொன் னார்களா?

சங்கரருக்கு விளக்கமான கடவுள் - தத்துவம் ஒரு வகை. இராமாநுஜருக்குப் புலனாகிய கடவுள், ஆன்மா உறவு ஒரு வகை. மாத்துவருக்குத் தெரிய வந்த கடவுள் ஒருவகை; ஒருவர் அத்வைதம்; அடுத்தவர் விசிஷ்டாத்வைதம்; இன் னொருவர் துவைதம்.

ஒருவர் கடவுளும், ஆன்மாவும் ஒன்றுதான் என்றார். இன்னொருவர் கடவுளும், ஆன்மாவும் வேறு வேறு என்றார். மூன்றாமவர் ஆன்மா, கடவுள் தன்மையை நெருங்கி அதன் அருட் பார்வையிலே இருக்கக் கூடியது என்றார்.

அப்படிப்பட்ட தத்துவ விளக்கங் களைக் கேட்டுப் பழகிய எங்களுக்கு ஆன்மாவும் தெரியாது, கடவுளும் புரியாது என்றால் ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்?

பேராசிரியர் தமது இடத்தில் இருந்து கொண்டு கொள்கை எதிரிகளைத் திறனாய்வுப் போக்கில் தாக்கி எவ்வளவு பெரிய செய்தியையும் மிக எளிதாக்கி விடுவார். கேட்போரை நம்மவர் ஆக்கி விடுவார். இதுபோல அவரது பேச்சு குறித்து எத்தனையோ நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட முடியும். அவர் பேச்சு குறித்தும், பலரின் மேடைப் பேச்சு குறித்தும் பல பேச்சாளர்களுடைய ஆற்றல்கள், மேடை நாகரிகம் பற்றியும் அவர் முத்தாரம் வார இதழில் கூறி வந்த நீங்களும் பேச்சாளராகலாம் எனும் தொடர் நிரம்பச் சம்பவங்களை விளக்கக் கூடியதாக இருக்கிறது. பூம்புகார் பிரசுரம் அதே தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறது. அந்நூலைத் திராவிட இயக்கத் தோழர் கள் வாங்கிப் பயன் அடையலாம். இது வரை பேராசிரியர் எழுதிய கட்டுரைகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. வகுப்புரிமைப் போராட்டம், கலையும் வாழ்வும், விடுதலைக் கவிஞர், உரிமை வாழ்வு, தமிழ்க் கடல் அலை ஓசை, விடிவெள்ளி, இவர்தாம் பெரியார் போன்றன அவர் எழுதிய நூல்களாகும். அவரின் சிறப்புக்குரிய பல பேச்சுகள் சிறுசிறு நூல்களாகத் தோழர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். தொடக் கக் காலத்தில் அவர் அழகரசி எனும் நாவலையும் எழுதினார்.

புதுவாழ்வு எனும் மாத இதழ்

பேராசிரியர் பச்சையப்பனில் பணி யாற்றுகிறபோது புதுவாழ்வு எனும் மாத இதழினை நடத்தினார். அவருக்குத் துணை ஆசிரியராக கே.ஜி. இராதா மணாளன் பணியாற்றினார். புதுவாழ்வு இதழ் 1/8 டெம்மி அளவில் வெளிவந்தது. இந்த ஏடு ஒன்பது மாதங்கள்தான் வெளிவந்தது. அவ்வேட்டில் டாக்டர் மு.வரதராசனார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டாக்டர் ஏ.சி. செட்டியார், கே.ஏ. மதியழகன், க. அறிவழகன், கே.ஜி. இராதாமணாளன், சர்.கே.வி. ரெட்டி நாயுடு, உமாமகேசுவரன் பிள்ளை ஆகியோரின் எழுத்துகள் இடம்பெற்று இருந்தன. பேராசிரியரும் எழுதி வந்தார். காந்தி சுடப்பட்டு மரணமடைந்தபோது அவரைப் பற்றி 83 அறிஞர்களின் கருத்து களைத் தொகுத்து புது வாழ்வு வெளி யிட்டது.

புது வாழ்வு குறைந்த இதழ்களே வெளிவந்தன. 1948 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி நவம்பர் இதழோடு நிறுத்தப்பட்டது. இவ்விதழில் பேராசிரியர் தொடர்ந்து தலையங்கப் பகுதியில் எழுதி வந்தார். டாக்டர் ஏ.சி. செட்டியாரின் தாய்மொழி வழியாக உயர்தரக் கல்வி கற்பித்தல் எனும் தலைப்பில் எழுதினார். கே.ஏ. மதியழகனின் புரட்சி வீரன் புருனோ, கிரேக்க நாட்டின் கீர்த்தி எனும் கட்டுரைகள் இரண்டு இதழ்களில் வெவ்வேறு மாதங்களில் (1948 ஜூலை, நவம்பர்) இடம்பெற்று இருந்தன. அரங்கண்ணலின் வாழ்க அய்.நா. சபை நாவலரின் களம் நோக்கிக் காளைகள் எனும் கட்டுரைகளும் தொடர்ந்து வெளிவந்தன.

பேராசிரியரின் புதுவாழ்வு சிறப்பான ஒரு பணியைச் செய்தது. புதுவாழ்வு வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில், அறிஞர் அண்ணா மூன்று வானொலி உரைகளை நிகழ்த்தி இருந் தார். சென்னை வானொலி நிலையத்தில் அறிஞர் அண்ணா 31.12.1947 இல் மேடைப் பேச்சு உன்னாலும் ஆகும் எனும் தலைப்பில் பேசினார். இப்பேச்சு புதுவாழ்வு முதல் இதழிலேயே இடம் பெற்றது. அடுத்த இதழிலும் பேச்சு தொடர்ந்து வெளியிடப்பட்டது. அண்ணா மீண்டும் சென்னை வானொலியில் 17.5.1948 இல் ஸ்தாபன அய்க்கியம் எனும் தலைப்பில் உரையாற்றினார். இப்பேச்சு புது வாழ்வு ஆறாவது இதழில் (ஜூன் 11, 1948) இடம்பெற்றது. திருச்சி வானொலி நிலையத்தில், 10.6.1948 இல் அறிஞர் அண்ணா பொதுக் கல்வி ஸ்தாபனங்கள் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இப்பேச்சுக்கு வீட்டுக்கொரு புத்தகச் சாலை என்று தலைப்பிட்டு புதுவாழ்வு தனது ஏழாவது இதழில் (ஜூன் 16, 1948) வெளியிட்டது. இப்படி அறிஞர் அண்ணாவின் வானொ லிப் பேச்சுகளை முதன் முதலாக வெளி யிட்ட பெருமை பேராசிரியரின் புதுவாழ்வு இதழுக்கே உண்டு.

காந்தியார் மரணத்தைப்பற்றி புது வாழ்வில் பேராசிரியர் தலைங்கம் எழு தினார். அத்தலையங்கத்திற்கு இமயம் சரிந்தது என்று தலைப்பிட்டு இருந்தார். இலக்கிய ஆய்வுகள் புது வாழ்வில் இடம்பெற்றன. சிறுகதை இலக்கியங் களும், புதுவாழ்வில் வெளிவந்தன. அறிஞர் அண்ணாவின் ஜெபமாலை, தி.கி. நாகம்மாளின் நிர்மலா, சரசா நாதனின் அவள், இராதாமணாளனின் உறைந்த இரத்தம், புதுவெள்ளம் போன்ற சிறுகதைகளையும் புதுவாழ்வு வெளி யிட்டது. இராதா மணாளனின் புதினம் இந்தக் குறுகிய காலத்தில் புது வாழ்வில் வெளியாயிற்று. இப்புதினத்தை டாக்டர் மு.வ. தமது இலக்கிய வரலாற்றில் பாராட்டிச் சிறப்பித்திருக்கிறார்.

புது வாழ்வில் புத்தக விமர்சனமும் இடம்பெறத் தவறவில்லை. அறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுப்பு, டாக்டர் மு.வ.வின் கள்ளோ காவியமோ? கலைஞர் எழுதிய பிள்ளையோ பிள்ளை ஆகிய சிறுகதைகள், நூல்கள், விமர்சனம் செய்யப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்று இருந்தன. 1948 நவம்பருக்குப் பிறகு புதுவாழ்வு வெளிவரவில்லை. நின்று போயிற்று. மீண்டும் இந்த ஏட்டை ஈ.வெ.கி. சம்பத் பொறுப்பேற்று சில காலம் நடத்தினார்.

பேராசிரியர், பொதுவாகவே எழுதுவது என்பது மிகவும் குறைவு. புது வாழ்வுக்குப் பிறகு அவர் இதழுக்கு என்று மீண்டும் தொடர்ந்து எழுதியது இன முரசு ஏட்டிற்குத்தான்! அதுவும் சில காலம்!! அவையும் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவந்து இருக்கிறது. தொடக்க காலத்தில் பொங்கல் மலர்களுக்குச் சிறப்புக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். திராவிட நாடு, முரசொலி இதழ்களில் அவ்வப்போது அத்திபூத்ததுபோல கட்டு ரைகள் இடம்பெற்று இருக்கின்றன. தொடர்ச்சியாக எழுதுகிற பழக்கம் அவ ருக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். நூல்களுக்கு அணிந்துரை எழுதுவதும் நூலாசிரியர்கள் பொருத்தும் நூலின் உள்ளடக்கத்தைப் படித்தும் முன்னுரை, அணிந்துரை ஆகியவற்றை ஆராய்ச்சியு ரையாய் எழுதித் தருவார். தேவையா னால் ஆசிரியரிடத்திலே விவாதித்து எழு தித் தருவது உண்டு. திருத்தங்களும் கூறு வார். அவை சரியானதாகவே இருக்கும்.

காஞ்சீபுரமும் திருப்பனந்தாளும்

போராசிரியரின் பேச்சு பெரியாரைக் கவர்ந்து இருக்கிறது. அறிஞர் அண் ணாவை ஈர்த்து இருக்கிறது. கலைஞரின் இதயத்தைத் தொட்டு இருக்கிறது. அத னால்தான் கலைஞர் ஒரு முறை பேராசிரி யரின் பேச்சைப் பற்றிக் குறிப்பிடுகிற போது, என்னைப் போன்றவர்கள் எல் லாம் உங்களுக்காகப் பேசுகிறோம். பேரா சிரியர் அவர்கள் என்னைப் போன்றவர்க ளுக்காகப் பேசுகிறார் என்றார். ஒரு முறை, பெரியார், அண்ணாவைப் பற்றி பேராசிரியர் பேசுகிறபோது,

சிந்திக்க வேண்டியதையெல்லாம் சொன்னவர் பெரியார்.எளிதில் விளங்கி ஏற்கக் கூடிய வற்றையே சொன்னவர் அண்ணா.அந்த முறை வேறுபடினும் அவர் தம் நோக்கம் ஒன்றாகவே இருந்ததை நாம் மறுத்தல் ஆகாது
என்றார். மற்றொரு மேடையில் பேசுகிற போது பேராசிரியர் சொன்னார்:

நாம் மதத்துறையினரில் உள்ள ஜாதியினரில் பார்ப்பனர்களை மட்டும் தான் கண்டிக்கிறோம் என்று எவரேனும் கூற முடியுமா? காஞ்சி காமகோடி பீடா திபதி ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமி கள் பவனிவரும் போது அவர் பார்ப்பனர் தலைவர் என்பதால் அவரை மட்டுமே கண்டித்து, தருமபுரமானாலும், திருப்பனந் தாளானாலும் திருக்கைலாயப் பரம்பரை யின் திருவுருவம் என்பதால், அவர்கள் பல்லக்கு பவனி வரும் போது, நாம் பாசுரம் பாடிப் பரவசம் அடைவதுமில்லை, பவனி யைக் கண்டிக்காமல் இருப்பதும் இல்லை. ஜகத்குருவின் பணியை மட்டுமே கண்டிக் கிறோம் என்று எவரும் கூற முடியாது.

ஜகத்குருவும், ஜீயரும் பார்ப்பனர் என்பதால் கண்டித்துப், பண்டாரச் சன்ன தியும், தம்பிரானும் தமிழர் என்பதால் நாம் ஆதரிப்பது இல்லை. இரு சாராருடைய சுகபோக நித்தியானந்த வாழ்வையுந்தான் கண்டிக்கிறோம். இருவகை மடங்களுக் கும் சென்று அடி வருடுபவர்களுக்குத் தான் அறிவு கொளுத்த முயலுகிறோம்.

ஸ்மார்த்தப் பார்ப்பனரைக் கண்டித்து விலக்கி தேசிகரைப் புரோகிதத் தொழி லுக்கு நாங்கள் அழைக்கவில்லை, தீட்ச தரை நீக்கிக் குருக்களைக் கூப்பிடச் சொல்லவில்லை. பஞ்சாங்கத்தவனை நிந்தித்துப் பண்டாரத்தைப் பாராட்ட வில்லை, பிராமணன் ஜோஸ்யம் பொய், வள்ளுவன் ஜோஸ்யம் மெய் என்றும் வாதாடவில்லை. புரோகிதர்களைக் கண் டிக்கும் நாம் பூசாரிகளை ஆதரிக்க வில்லை; வாழ்த்தவில்லை.

பண்டைத் தமிழ் மரபினரான பார்ப் பனர் அல்லாதார் ஆயினும், அவர்களது நடைமுறை செயல்கள், வாழ்க்கை வழிகள், அறிவுக்குப் பொருந்தவில்லையானால், அவற்றையெல்லாம் கண்டிக்கிறோம். ஆனால் பார்ப்பனர் அல்லாதாரைவிடப் பார்ப்பனர் தான் நாம்மீது குற்றம் சாற்றப் பழிதூற்றத் துடித்துக் கொண்டுள்ளார் கள். அதிலுள்ள சூட்சமம்தான் என்ன? பார்ப்பனியம் ஒரு தன்னல ஏற்பாடு, சூதுப்பொறி, சுரண்டல் தந்திரம், ஜாதிச் சதித்திட்டம், பழைமைப் படுகுழி, வைதீகச் சாக்கடை, சநாதனப்புற்று! எனவேதான் அதைக் காக்க விரும்புவர்களுக்கு அந்த அளவு கடுஞ்சித்தமும், கடுஞ்சொல்லும் பழிமொழியும் தேவைப்படுகிறது

பேராசிரியர் அவர்களின் இப்பேச்சு எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்று பாருங்கள். ஏன் இவ்வாறு பேராசிரியர் பேசுகிறார்? திராவிட இயக்கம் என்பது, வர்ணாசிரம சநாதன தர்மத்தை ஒழித்து, சாதிகளற்ற, தமிழிய சமத்துவப் பூங் காவை அமைக்க பாடுபடுகிற அமைப்பா கும் என்பதால் பேராசிரியர் அப்படிப் பேசுகிறார். பேராசிரியர் சமூகத் தளத் தில் மட்டுமல்ல, இம்மாறுதலை அரசியல் தளத்தில் இருந்தும் மேற்கொள்ளத் தொடங்கினார்.

அறிஞர் அண்ணா பேராசிரியரின் பண்புகளை அவரின் இயல்பை நமக்கு படம் பிடித்துக் காட்டி இருக்கிறார். எவ்வளவு அழகாகக் குறிப்பிட்டு இருக் கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்.

பேராசிரியர்பற்றி அறிஞர் அண்ணா

பிரச்சினைகளை அலசி, எளிதாக் கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன என்னும் வகையினதான கருத்துகளையும் பிணைத்து, ஆசிரியர் போல எடுத்துக்கூறிக் கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்ற எண்ணம் தோன்றும் போது, பல ஆண்டு கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழா சிரியர் பணிபுரிந்து, இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திக ழும் அன்பழகன் அழைக்கப்பட வேண் டும் என்று தோன்றுகிறதல்லவா? திராவிடநாடு, (2.10.1960)

நான் ஓய்வு விரும்பும்போது சென் னையில் எனக்கு இல்லம் அவர் (அன் பழகன்) இல்லம். கனிவு இருக்கும்; குழைவு இருக்காது - தெளிவு இருக்கும் பேச்சில்; நெளிவு எழாது. எத்தனையோ தோழர்கள் இதனை எடுத்து எப்படிக் கூறுவது என்று எண்ணி இருப்பதுண்டு - இருவர் என்னிடம் தமது மனத்தில் பட்டதை மெருகும் ஏற்றாமல் எடுத்து ரைப்பர். இவர் அதில் ஒருவர்; மற்றொரு வர் காஞ்சி கலியாணசுந்தரம் காஞ்சி (4.4.1965)


தன்னைப் பற்றி பேராசிரியர்

அறிஞர் அண்ணா குறிப்பிடுவது போல ஒரு முறை பேராசிரியர் தம்மைப் பற்றி,

முதலில் நான் மனிதன்; இரண்டா வது நான் அன்பழகன்; மூன்றாவது நான் ஒரு பகுத்தறிவுவாதி; நான்காவதாக நான் அண்ணாவின் தம்பி; அய்ந்தாவதாக நான் கலைஞரின் நண்பன்; இந்த வரிசை எப்போதும் என்னோடு இருக்கும். இதை என் சாவு ஒன்றுதான் அழிக்க முடியும் என்று கூறினார்.

இப்படிப்பட்ட கறார் பேர்வழி ஒரு வகையில் அரசியலுக்கு ஏற்றவர் இல்லை தான்! ஆனால் அவர் அரசியலில் நீடித் தார். நீடித்துக் கொண்டும் இருக்கிறார். அதைவிட ஒரு வியப்பு 1989 ஆம் ஆண்டு ஹளனைந எனும் ஆங்கில ஏட்டிற்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர் ஐ யஅ டிவ ய யீடிடவைஉயை என்று கூறினார். அதற்கான காரணங்களை எடுத்து வைத்தார். பேராசிரியர், ஆனால் அதை அப்பத் திரிகையாளர் மறுத்தார். அப்பேட்டியில் அவர் சில வினாக்களுக்கு அளித்த பதில் பவுதீக தராசில் மருந்தை நிறுத் தது போல் இருந்தது. அவற்றிலிருந்து சில கேள்வி - பதில்களைக் கீழே தருகிறோம்.

(?) மக்கள் உங்களை நாணயமான அரசியல் தலைவராகப் பார்க்கிறார்கள். உங்களுடைய கட்சியினிடத்தில் பற்றும், பொறுப்பும் கொண்டு நீங்கள் இயங்கு வதில் எவரும் கேள்வி கேட்க முடியாது. அமைச்சராக நீங்கள் உங்கள் கடமை களை நிறைவேற்றுவதால் முயற்சியுடைய அதிகாரிகளைக் கொண்டு பணியாற்றி வருகிறீர்கள். அரசியல்வாதியான உங்கள் பேச்சும், நடவடிக்கைகளும் தவறுகள் இல்லாமல் இருக்கின்றன. இப்படி இருந்தும் கட்சியில் நீங்கள் முதல் இடத்திற்கு வர முடியவில்லையே, அது எப்படி? இது உங்களின் ஊக்கமற்ற அர சியல் தன்மையாலா அல்லது உங்களைப் போன்ற அரசியல் தன்மையுள்ளவர்கள் இந்தக் காலத்தில் வெற்றி பெற முடியாதா?

பதில்: அரசியலில் எதுவும் நடந் தாலும் ஒரு மனிதனுடைய இயற்கைப் போக்குதான் அவனது நடவடிக்கை களைத் தீர்மானிக்கின்றன. என்னுடைய போக்கு என்பது பெரும்பாலும் சமூகத் தொண்டாற்றுவது சமுதாயச் சீர்த் திருத்தம் செய்வது என்பதுதான்! நான் அரசியலில் அதிக நம்பிக்கை கொண் டவன் அல்ல, இயற்கையாகவே சமு தாயச் சீர்திருத்தத்தில் அதிக விருப்பம் உடையவர்களுக்கு அரசியலில் முன் னேறுவது என்பது குறைவான விருப் பத்தை உடையதே ஆகும். மேலும் பொதுப்பணி ஆற்றுகிற இடத்தில் ஒன் றாம் இடம், இரண்டாம் இடம் என்பதில் நம்பிக்கையில்லாதவன் நான்! எது ஒருவருக்குப் பொருத்தமான பணியாக இருக்கிறதோ அதை அவர் ஆற்ற வேண்டும். இதில் எங்கே ஒன்றாவது இடம், இரண்டாவது இடம் இருக் கிறது? நான் கோஷ்டி அரசியலில் நம் பிக்கை இல்லாதவன். இயற்கையாகவே பெரும்பான்மை கருத்தோடு நான் ஒத்துப்போகிறவன். ஆகையினால் கட்சியில் எனக்கு இருக்கிற அந்தஸ்து பற்றி பிரச்சினை இல்லை.

உண்மையில் நீங்கள் மிக ஆவ லோடு என்மீது இவ்வினாவைத் தொடுத்து இருக்கிறீர்கள்.

ஒன்றைச் சொல்லுகிறேன். யாரோ டாவது எனக்கு மிகப்பெரிய கருத்து வேறுபாடு தோன்றுமானால் மக்கள் பணியாற்றுவதன் மூலம் அதை மிக எளிதாக எடுத்துக் கொள்வேன். சிறிய கருத்து வேறுபாடுகள் எனக்கு ஒரு பிரச்சினை அல்ல. இலட்சியத்தில், கொள்கைகளில் மாறுபாடுகள் தோன்று மானால் அது பிரச்சினைக்குரியது தான்! என்னுடைய உணர்வுகளுக்கு ஏற்றாற்போல கொள்கை பொருந்தி வருவதால் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். எனக்குப் பேராவல் எதுவும் இல்லை. மக்கள் உன்னை ஏற்றுக் கொண்டால் நீ ஒரு தலைவன். அப்படி இல்லையானால் எது உனக்குச் சரியென்று படுகிறதோ அந்தச் செய லினைச் செய்.

தி.மு.க.வும் - பேராசிரியரும்

(?) தி.மு.க.வில் உங்கள் முக்கியத் துவத்தைப் பற்றி சொந்த மதிப்பீட்டைக் கூற முடியுமா? நீங்கள் இல்லையென் றால் கட்சியில் என்ன வேறுபாடு தோன்றக்கூடும்?

பதில்: உண்மையிலேயே என் நெறிமுறைகள் கட்சிக்குக் கூடுதலான பலத்தைக் கொடுக்கிறது. அதாவது அரசியல் பேராவல் இல்லாத ஒருவர் இவ்வளவு சிறப்பைப் பெற முடிவதோடு கட்சிக்கு என்னால் ஓர் அடையா ளத்தை வழங்க முடிந்து இருக்கிறது. நான் இல்லாத தி.மு.க எந்தவித வேறுபாட்டை உருவாக்கும் என்பதை நான் எண்ணிப் பார்க்கவில்லை.

(?) நான் என்ன கூறுகிறேன் என் றால் சூழ்நிலைகள் உந்தித் தள்ளி உங்கள்மீது முதல்வர் பொறுப்பு திணிக்கப்படுமானால்...?

பதில்: நான் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறேன். அப்படிச் சிலர் நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்று கேட்டால், நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சூழ்நிலைகள் உந்தித் தள்ளி பொறுப்பு என்மீது திணிக்கப்படுமா னால் நான் என் தோள்மீது சுமப்பேன். எந்தப் பிரச்சினைகளாக இருந்தாலும் கட்சியில் நலனுக்காக, மக்களுக்காக என்றால் நான் நல்லதைச் செய்வேன்.

இப்பேட்டியில் பேராசிரியரின் நேரிய தன்மை இழையோடுவதையும் அதில் கட்சி நலன் மக்களின் மீது பரிவு இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய இயல்புடைய பேராசிரியர் 1957 முதல் சட்டமன்றம், நாடாளுமன்றம், கட்சி ஆகியவற்றில் முக்கியப் பொறுப்புகளில் அங்கம் வகித்து செயலாற்றுவது எண்ணிப் பார்க்க வியப்பளிக்கக் கூடியதாகும். பேராசிரியர் 1957, 1971, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006 என பத்து முறை சட்டமன்ற தேர்தல்களில் நின்று வெற்றி பெற்று இருக்கிறார். 1962 - ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1967 இல் நாடாளுமன்ற உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கலைஞரின் அமைச்சரவையில் 4 முறை அமைச்சராகப் பணியாற்றியவர். பணியாற்றிக் கொண்டும் இருப்பவர். தி.மு.க. மிக வேகமாக வளர்ந்த நிலையிலும் கட்சிக்குள் எழுந்த சர்ச்சைகளைத் தீர்க்கும் பொருட்டும் அறிஞர் அண்ணா 1960 இல் மூன்றாம் முறையாகக் கழகப் பொதுச் செயலா ளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது போது கழகத்தில் பல அணிகள் உரு வாக்கப்பட்டன. தொழிற்சங்க அணி யின் செயலாளராக அச்சமயத்தில் பேராசிரியர் அவர்களை அறிஞர் அண்ணா நியமனம் செய்தார். 1977 முதல் கழகப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். தி.மு.கழகத்தின் சார்பாகப் பல அறப்போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். ஈழத் தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் (கலை ஞரோடு சேர்ந்து) சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியவர்.

கலைஞர் அவர்கள் ஆற்றியிருக் கின்ற தொண்டினையும், அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்ற தியாகத்தையும், அவர் உருவாக்கியிருக்கின்ற வரலாற்றையும், அவர் மூலமாக ஏற்பட்டிருக்கின்ற உணர்வையும் காப்பாற்றித் தீர வேண்டிய கடமை நமக்கு எல்லாம் இருக்கின்றது. இங்கே வீற்றிருக்கின்ற உங்களுக்கெல் லாம் எனில், எதிர்காலத்தில் வாழ்ந்திட வேண்டிய இளைய தலைமுறைக்கெல்லாம் இருக்கின்றது என்ற உண்மையை நீங்கள் உள்ளங் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இயக்கமும், தனிநபரும்

ஒரு தனி மனிதனுடைய ஆற்றலை நாம் விரும்புகிற காரணத்தால் தான் புகழ்கி றோம் என்பது உண்மையே தவிர, அந்த ஆற்றல் மட்டுமே ஒரு சமுதாயத்தை வாழ வைப்பதற்குப் போதுமானது என்ற கார ணத்தாலே தான் ஓர் இயக்கம் தேவைப் படுகிறது.

தந்தை பெரியார் அவர்களுக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் ஓர் இயக்கம் தேவைப்பட்டது. எந்த ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதியாக இருந் தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும் ஓர் இயக்கத்தின் மூலமாகத்தான் தங்களுடைய இலட்சியத்தை - கடமையை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.

அந்த முறையில் இன்றைய தினம் கலைஞருடைய ஆற்றலுக்கு வெற்றி தேடித் தருகிற இயக்கமாகத் தி.மு.கழகம் அமைந்திருக்கிறது. தமிழ்ச் சமுதாயத் திற்காக - மொழிக்காக - நாட்டிற்காக - அந்த வெற்றியைத் தேடுகிற கடமை நமக்கெல்லாம் ஏற்பட்டிருக்கிறது என்பதை உள்ளங்கொண்டு அந்த வெற்றிக்குப் பாடுபடுவதிலேதான் கலைஞரை வாழ்த்துவதற்குப் பொருள் இருக்கிறது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞரை வாழ்த்துகிறபோது, தந்தை பெரியார் அவர்களை - பேரறிஞர் அண் ணாவை - புரட்சிக் கவிஞர் பாவேந்தரை எந்தக் குறிக்கோளோடு வாழ்த்தி னோமோ அந்தக் குறிக்கோள் வெற்றி பெறவே அந்த இலட்சியத்தைக் காத்து நிற்கும் கலைஞரை வாழ்த்துகிறோம்.

அதனுடைய பொருள் இந்தத் தமிழ் நாட்டை வாழ்த்துவதற்கு வாழச் செய்வ தற்கு அடையாளமாகத்தான் கலைஞரை வாழ்த்துகிறேன்.

கலைஞர் வாழ்க என்றால்....

கலைஞர் வாழ்க! என்று சொல்லு கிறபோது, கலைஞர் கொண்டிருக்கிற கொள்கை வாழ்க! அவர் ஏற்றிருக்கிற இலட்சியம் வாழ்க! அவர் நடத்திச் செல்கிற இயக்கம் வாழ்க! அவர் தாங்கி நிற்கிற தமிழ் மக்கள் வாழ்க! அவருடைய உணர்விலே இடம் பெற்ற இந்தச் சமுதாயத்தினுடைய எதிர்கால நல்வாழ் வுக்கான திட்டங்கள் வாழ்க! என்ற உணர்வோடுதான் வாழ்த்துகிறோம்.

குறிப்பாகச் சொன்னால், கலைஞர் வாழ்க! என்று வாழ்த்துகிற நாம், நம்மை நாமே வாழ்த்திக் கொள்கிறோம் என்று தான் பொருள். நம்முடைய எதிர்காலச் சந்ததியை வாழ்த்துகிறோம் என்று பொருள்.

பேராசிரியர் கலைஞரை வாழ்த்திப் பேசியுள்ள இவ்வுரையில் இறையாண்மை ஓங்கியுள்ளதை நீங்கள் பார்க்கலாம். தலைமைப் பண்பு என்பது எது என்பதையும் அதற்குக் கருவியாகிற இயக்கத்தையும் பேராசிரியர் சுட்டிக் காட்டுகிற பாங்கு அவரது சான்றாண்மையை இமயமாய் நிற்கச் செய்கிறது. அவர் அய்ந்து கால் ஊன்றிய தூணாக நமக்கெல்லாம் தெரிகிறார். அது என்ன - அய்ந்து கால் ஊன்றிய தூண்? ஒருவர் சான்றோர் என மதிக்கப்படுகிறவர், மதிக்கத்தக்கவர் என்பதானால் அவருக்கு அய்ந்து பண்பு கள் இருக்கவேண்டும் என்று வள்ளுவன் கூறுகின்றான். அன்புடைமை, பழி செய்ய நாணுதல், உலகியல் பாங்கு அறிந்து ஒழுகுதல், அருள் புரிதல், உண்மையையே பேசுதல் ஆகிய அய்ந்து பண்புகள் தூண் களாகி சான்றாண்மை எனும் மாளிகைக்கு அழகு சேர்க்கின்றன. அந்த அழகுக்குரிய வர் நமது பேராசிரியர் அன்பழகனார்! அதுமட்டுமில்லை. நற்றிணையில் தலை வன் மீது தலைவி வைத்து இருக்கிற நம்பிக்கையை அவள் தோழியிடம் வெளிப் படுத்துகிறபோது நின்ற சொல்லர் என்று பாராட்டுவாள். அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய நின்ற சொல்லர் நமது பேராசிரியர் அவர்கள்! அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

(நிறைவு)
http://www.viduthalai.periyar.org.in/20101217/news02.html
http://www.viduthalai.periyar.org.in/20101218/news05.html

No comments:


weather counter Site Meter