Pages

Search This Blog

Wednesday, December 1, 2010

உயிர் போனாலும் வரமாட்டேன்-தமிழர் தலைவர் கி.வீரமணி மீது தம்மம்பட்டியில் தொடுக்கப்பட்ட கொலை முயற்சி நிகழ்ச்சி

(தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உதவியாளர் சிங். குணசேகரன் தம்மம்பட்டியில் தமிழர் தலைவர்மீது தொடுக்கப்பட்ட கொலை முயற்சி நிகழ்ச்சியினை உணர்ச்சிப் பெருக்குடன் விவரிக்கிறார் இக்கட்டுரையில்...)

தம்மம்பட்டி

28-8-1987 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் உள்ள தம்மம்பட்டி என்ற ஊரில் ஒரு கொடூரமான - வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று நடந்தது.

தம்மம்பட்டி என்ற ஊரில் தமிழர் தலைவர் அவர்கள் உரையாற்றுவதற்கான ஒரு பொதுக் கூட்டம் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

MSM1751 என்ற எண் கொண்ட அம்பாசிடர் கார். மதுரை பே.தேவசகாயம் அவர்களுக்குச் சொந்தமான கார். வேகமாக, விரைவான சுற்றுப் பயணம் என்றால் தமிழர் தலைவர் அவர்கள் மேல் குழந்தை போல் தனது இறுதி மூச்சு அடங்குகிற வரை தனியாத பாசம் வைத்திருந்த மதுரை பே. தேவசகாயம் அவர்கள் தமிழர் தலைவருக்காக இந்தக் காரை அனுப்பி வைப்பது வழக்கம்.

மதுரை பே. தேவசகாயம் அவர்களுடைய காரில் வெளியூர் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தம்மம்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 28-8-1987 அன்று மதியம் மூன்று மணி வாக்கில் தம்மம்பட்டியில் உள்ள ஒரு சிறிய பயணியர் விடுதிக்குக் காரில் வந்து சேர்ந்தோம்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை அங்குள்ள உள்ளூர் தம்மம்பட்டி தோழர்களும், ஆத்தூர் தோழர்களும் வரவேற்றனர். இந்தப் பயணியர் விடுதி தம்மம்பட்டியிலிருந்து சிறிது தூரத்தில் ஒதுக்குப்புறத்தில் இருந்தது.

தமிழர் தலைவர் அவர்கள் ஓய்வெடுக்கவில்லை. சிறிது நேரம் தோழர்களிடம் அளவளாவினார். வழக்கம் போல் என்ன நிகழ்ச்சி; எத்தனை மணிக்குப் பொதுக்கூட்ட மேடைக்கு வரவேண்டும் என்று கேட்டார்.

தோழர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்தி ஊர்வலம் வந்து முடிந்தவுடன்- நீங்கள் சொன்னவுடன் நான் சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறேன் என்று தமிழர் தலைவர் அவர்கள் சொல்லி அனுப்பினார்.

நான் உடனே தோழர்களிடம் வரும்பொழுது ஃபிளாஸ்கில் அய்யா அவர்களுக்கு டீயும், மாலை பத்திரிகையும் யாராவது கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.

அதன்படி இடையில் தேநீர் வந்தது. தமிழர் தலைவர் அவர்களும் சாய்ந்து படித்துக் கொண்டிருந்தார். மாலை 6.20 மணி வாக்கில் ஆத்தூர் தோழர் முருகேசன் வந்தார். ஊர்வலம் புறப்படத் தயாராகிவிட்டது; ஊர்வலம் புறப்பட்டுப் போய் மேடையை அடையவும் நாம் ஒரு பத்து நிமிடத்தில் புறப்பட்டுப் போகவும் சரியாக இருக்கும் என்றார்.

தமிழர் தலைவரும் ஆத்தூர் மெடிக்கல் ஸ்டோர் ஜி.முருகேசன் (அண்மையில் மறைந்துவிட்டார்கள்) ஆத்தூல் செல்லமுத்து அவர்களும் கார் பின் இருக்கையில் அமர்ந்தார்கள். தமிழர் தலைவருக்கு எப்போதும் உதவி செய்கின்ற நானும் என் அருமை நண்பர் ஊட்டி இரா. தாமோதரனும் ஓட்டுநருக்குப் பக்கத்தில் வழமை போல் முன்னிருக்கையில் அமர்ந்திருந் தோம். ஒரு பதினைந்து நிமிடத்தைத் தாண்டியவுடன் தமிழர் தலைவரின் பச்சை நிற அம்பாசிடர் கார் தம்மம்பட்டி ஊருக்குள் நுழைந்தது. ஊரில் திரா விடர் கழகத் தோழர்களும், ஊர்க்காரர்களும், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

கூட்டம் இருக்கின்ற இடத்தில் கார் போய் நின்றது. நாங்கள் நம்மை வரவேற்கத்தான் கூடியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கூட்டத்திற்கு நெருக்கத்தில் காரைக்கொண்டு போய் நிறுத்தினோம். திடீரென்று பார்த்தால் ஒரே கலவரம். தள்ளு முள்ளு, அடிதடி திராவிடர் கழகத் தோழர்களும் தம்மம்பட்டி ஊர் தோழர்களும் மோதிக் கொள்ளும் காட்சி, வாக்கு வாதம், தகராறு நடப்பதைப் பார்த்தவுடன் ஆகா! கூட்டத்திற்குள் மாட்டிக் கொண்டோம். இது வரவேற்பு கொடுக்கிற கூட்டமல்ல. மாறாக கலவரம் நடத்துகிற கூட்டமாயிற்றே என்று நினைத்ததுதான் தாமதம்!

ஊரே திரண்டு பதற்றத்துடன் நிற்கிறது. தமிழர் தலைவரின் கார் வந்து நின்றவுடன் தோழர்களும் ஓடி வருகிறார்கள். அவர்களைத் தள்ளிவிட்டு காலிககள், ஆர்.எஸ்.எஸ். காலிகளும் காரை அடிக்கின்றனர். நான் ஓட்டுநர் அருகில் உட்கார்ந்திருக்கின்றேன். ஓட்டுநருக்கும் எங்களுக்கும் அதிர்ச்சி. தமிழர் தலைவரோ நடப்பதைக் கவனித்தார். ஏண்டா கடவுளே இல்லையா? கடவுளே இல்லை என்று சொல்லுகின்ற இவனுங்களை விடக்கூடாது. அடித்து நொறுக்குங்கடா, விடாதீங்கடா, கொல்லுங்கடா! என்று ஒரே சத்தம் எங்களைச் சுற்றி இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., காலிகள் தாக்குகின்றனர். ஒருவர் காரின் முன் பகுதியில் இருந்த தி.க. கொடிக்கம்பியை பிடுங்கிட ஆட்டுகிறார். காரை உருட்டுக் கட்டையால் முன்னும் பின்னும் தாக்குகிறார்கள். தமிழர் தலைவரோ இருய்யா, என்னங்கய்யா, என்ன பிரச்சினை என்று காரில் உட்கார்ந்து பதற்றத்துடன் கேட்கிறார்.

நாங்களும் காரில் இருந்து அவர்களை எச்சரித்து சத்தம் போடுகின்றோம். காரை டமார் டமார் என்று தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். காரின் முன் சீட்டில் உட்கார்ந்திருக்கின்ற எங்கள் மூன்று பேரையும் கூட்டத்தினர் அடிக்கிறார்கள். சட்டையைப் பிடித்து வெளியே இழுக்கிறார்கள் அடித்துக் கொண்டே. ஓட்டுநர் என்னைக் கால் முட்டியால் இடித்து என்ன, என்ன பண்ணுவது என்று லேசாகக் கேட்கிறார். நான் காரை பம்ப் பண்ணு கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு காரை முன்செலுத்து என்று சொன்னேன். காரை ஜர்க் பண்ணி வேகமாகப் புறப்பட ஆயத்தமாக ஆக்சிலேட்டரை சத்தத்துடன் ஓட்டுநர் அழுத்த கார் மிக வேகமாக உறுமல் சத்தம் போடுகிறதே தவிர கூட்டம் நகரவில்லை. காலிகள் கூட்டம் மேலும் தாக்குகிறது.

அடுத்து தமிழர் தலைவருக்கு அடிவிழாமல் தடுக்க என்னுடைய ரைட்டிங் பேடை எடுத்து வைத்துக் கொண்டே. தமிழர் தலைவரிடம் லேசாகத் திரும்பி அய்யா என்ன பண்ணுவது என்று சிக்னல் மூலம்நான் கேட்க - உடனே தமிழர் தலைவர் லேசாகத் திரும்பி கார் பின்புறம் உள்ள கண்ணாடி ஸ்கிரீனை விலக்கி உடனே Reverse - Reverse வா என்று சொல்ல, காட்டுக் கூச்சல் ஆர்.எஸ்.எஸ். காலிகளின் தாக்குதலை சமாளித்துக் கொண்டே சொன்ன நொடிப்பொழுதுதான் தாமதம்.

சீக்கிரம், சீக்கிரம், ரிவர்ஸ் எடு ரிவர்ஸ் எடு என்று நான் டிரைவரை துரிதப்படுத்த இன்னொரு பக்கம் அடி விழுந்து கொண்டேயிருந்தது. கன்னா பின்னாவென்று ஏச்சுப் பேச்சுகள். தமிழர் தலைவர் மிக சாதுரியமாக, அவர் அமர்ந்திருக்கின்ற இடத்தின் பின்புறமுள்ள கார் ஸ்கிரீனை இழுத்துவிலக்கிவிட, நான் எகிறி பின்புறம் பார்க்க, ஓட்டுநரும் பார்க்க உடனே ரிவர்ஸ் எடுக்க ஆரம்பித்தார்.

ஸ்டேரிங்கைப் பிடித்து டிரைவரை வெளியே இழுக்கிறார்கள். பின்னாலும் ஆட்கள் நின்று பின்பகுதி கார் டிக்கிப் பகுதியைத் தாக்குகிறார்கள். கார் திடீரென்று பின்னால் புறப்பட அடித்துக் கொண்டேஇருந்தார்கள். நான் ஹாரனை அழுத்திப் பிடித்தேன். கடுமையான சத்தம். டிரைவரை போ, போ என்று பின்னாலே கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டே விரைவு படுத்தினேன். பதற்றத்துடன் கார் காலிகள் மீது மெதுவாக இடிக்க இடிக்க கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தனர். இன்னும் வெறியோடு கூட்டம் தாக்கியது.கார் பின்னால் செல்ல வேகம், வேகமாகப் போக, ஓட்டுநர் ஃபுல் ஆக்சிலேட்டரை அழுத்துகிறார்.கார் பின் பக்கமாக பயங்கர சத்தத்துடன் ஓடுகிறது. கார் முன்புறம் செல்லும்போது போடும் சத்தத்தை விட அதிக சத்தம் போடுகிறதே தவிர, வேகமில்லை. இதுதான் காரின் தன்மை என்று பிறகு ஓட்டுநர் கூறினார். ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் அவர்களோடு சேர்ந்த அப்பாவி மக்களும் எங்களைத் துரத்திக் கொண்டே ஓடி வருகிறார்கள்.

ஒருவன் குறுக்கே சைக்கிளைப் போட்டான்

எங்களது காரை மறிக்க ஒருவன் குறுக்கே சைக்கிளைப் போடுகிறான். ஓட்டுநர் வீரபத்திரன் காரை அதிலேயும் சாமார்த்தியமாக ஒடித்து பின்னாலேயே ஓட்ட வெகு தூரம் போய்க் கொண்டிருக்கிறது. காலிக் கூட்டமோ, வேட்டி லுங்கியை மடித்துக் கொண்டு ஓடி வருகிறது. எங்கள் காரைத் துரத்திக் கொண்டே கார் பின்னாலேயே வேகமாகப் போகிறதே இவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று ஆத்திரத்துடன் ஊர்காரர்கள் கற்களையும், செருப்புகளையும் கண்டதையும் எறிந்து கொண்டு ஓடி வருகின்றார்கள். பின்னால் கார் போய்க் கொண்டேயிருக்கிறது. அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்படி செல்லுகையில் ஒரு குறுகிய பாலம். அதையும் மெல்ல - அதே நேரத்தில் வேகமாகக் கடந்த போது ஓட்டுநர் சாமர்த்தியமாக, வேகமாக முன்பக்கம் செல்ல ஸ்டேரிங்கை அவசரமாக ஒடித்து காரை முன்னுக்குத் திருப்பினார்.

எங்களைத் துரத்திக் கொண்டே ஓடி வருகிறார்கள். சாலையின் இருபுறம் உள்ள மக்களோ வேடிக்கை பார்க்கிறார்கள். கூட்டத்திலிருந்து தப்பி கார் பறந்து கொண்டிருக்கிற வேளையில் உடனே தமிழர் தலைவர் காவல் நிலையத்துக்குப் போ என்று கூறுகிறார். காரை நொடிப் பொழுதில் நிறுத்தி காவல் நிலையம் எங்கே இருக்கிறது என்று விசாரித்து விரைந்தோம். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் எங்கே, போலீஸ்காரர்கள் எங்கே என்று கேட்டால், ஒரு சென்ட்ரி டியூட்டி, இன்னொரு போலீஸ்காரர் மட்டும்தான் டூட்டியில் இருந்தார்கள். காரை விட்டு இறங்கி என்னய்யா டூட்டி பார்க்கிறீர்கள். வாங்கய்யா தலைவருக்கு ஆபத்து அழைக்கிறார் என்றவுடன் இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள். எஸ்.அய். எங்கே என்றால் அவர் சரஸ்வதி பூசையை ஒட்டி அரைநாள் லீவு போட்டுவிட்டுப் போய்விட்டார். நாங்கள் இரண்டு பேர்தான் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்று அவர்கள் தயக்கத்துடன் சொல்கிறார்கள்.

முதலில் போலீஸ் காம்பவுண்டுக்குள் யாரையும் விடாதீர்கள் என்று அறிவுறுத்தி அங்க துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரரை நிறுத்தி கட்சிக்காரர்களையும் பாதுகாப்பாக நிற்க வைத்தோம்.

காரில் இருந்து தமிழர் தலைவர் இறங்கினார். காவல் நிலையத்தில் இருந்த ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டேன். அய்யா, இப்பொழுது இங்கிருந்து புறப்பட்டு, இந்தக் கூட்டத்திலிருந்து தப்புவதுதான் சரியானது. முதலில் உங்களைப் பாதுகாக்க வேண்டும். புறப்படுங்கள், தாமதிக்க வேண்டாம் என்றேன். அப்புறம் எப்பொழுது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவருக்கோ இன்னும் அதிகமாகக் கோபம் வந்து பேசினார். நான் செத்தாலும், என் உயிர் போனாலும் இந்த ஊரில் அதே இடத்தில் பேசாமல் பிரச்சாரம் செய்யாமல் வரமாட்டேன் என்று உறுதியாகக் கோபமாகச் சொல்லிவிட்டார். எனக்கு அவரைப் பற்றித் தெரியும். இப்படி உறுதியாகச் சொல்லி விட்டார். இனி மாறமாட்டார் என்று தெரிந்து போய்விட்டது. உடனே புகார் எழுதிக் கொடு என்றார். நான் காவல் நிலையத்தில் வெள்ளைத் தாளை வாங்கி நானே புகார் எழுதினேன்.

எனக்கோ பதற்றம்! உடனே கடகடவென்று நடந்த சம்பவத்தை எழுதி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளரைக் கொல்ல முயற்சி - கார் தாக்கப்பட்டது. காரில்இருந்த இன்னின்னார் தாக்கப் பட்டனர் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று நடந்ததை அப்படியே எழுதினேன். தமிழர் தலைவர் அவர்கள் மெல்லிய விளக்கொளியில் அதைப் படித்துப் பார்த்து அவரே கையெழுத்திட்டு தேதியையும் போட்டார். நாங்களும் கையெழுத்து போட்டோம். மனுவை காவல் துறையினரிடம் கொடுத்தோம். கூட்டமோ வெளியில் நின்று எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழர் தலைவர் காவல் நிலையத்தில் திறந்த வெளியில் அமர்ந் திருந்தார். ஊர் மக்கள் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். என்னை அழைத்தார். உனக்கு வேறு சட்டை இப்ப இருக்கிறதா? என்று கேட்டார். வேறு கலர் சட்டை போட்டுக் கொண்டு வெளியே போய் நடந்த சம்பவத்தை பெரியார் திடலில் உள்ள பூங்குன்றனை அழைத்து தொலைபேசியில் சொல்லிவிட்டு வா என்றார். கார் டிக்கியில் என் பெட்டியில் இருந்த வெள்ளை சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே போனேன்.

தம்மம்பட்டி தோழர் செல்வராஜ் என்பவரை அழைத்துக் கொண்டு நான் போன் செய்யச் சென்றேன். இரண்டு இடத்தில் எஸ்.டி.டி. ஃபோன் வசதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.பிறகு ஒரு இடத்தில் ஃபோன் போடுகிறேன், போடுகிறேன். கிடைக்கவில்லை. சார் லைட்னிங் கால் ஒன்று இருக்கிறது. அதைப் போட்டால் கிடைக்கும் என்றார்கள். அப்படியே போட்டுக் கொடுங்கள் என்று சொன்னேன். பெரியார் திடலில் வாட்ச்மேன் ஃபோனை எடுத்தார். ஓடி போய் மாடியில் இருக்கிற கலி.பூங்குன்றன் அவர்களைக் கூப்பிட்டு வாருங்கள் ஆசிரியர் அவசரமான செய்தியைச் சொல்லச் சொல்லியிருக்கிறார் ஓடுங்கள் என்று அவரை விரைவுபடுத்தினேன். அவர் ஓடி கலி.பூங்குன்றனை அழைத்துவந்தார். அவரிடம் நடந்த சம்பவத்தை விரைவாகச் சொன்னேன். எப்படியாவது ஆசிரியரைப் பாதுகாப்பாக அழைத்து வருவதைப் பாருங்கள் என்று கலி.பூங்குன்றன் சொன்னார். நான் சொன்னேன். நான் செத்தாலும் வரமாட்டேன் இந்த ஊர்பொதுக் கூட்டத்தில் பேசாமல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். உங்களைஅவசரமாக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.யிடம் பேசச் சொன்னார். மற்றதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து தமிழர் தலைவர் அவர்களிடம் பேசியதை அப்படியே சொன்னேன். உடனே பூங்குன்றன் பெரியார் திடலிலிருந்து வேனை எடுத்துக் கொண்டு சென்றிருக்கின்றார். விடுதலை ராதாவும் உடன் சென்றார். தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி மற்றும் டி.ஜி.பி.யிடம் பேசிய பிறகு ஒயர்லஸ்ஸில் இருந்து தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் வந்து கொண்டிருந்தது.

தி.க.பொதுச் செயலாளர் வீரமணி கூட்டத்தில் கலாட்டாவாம். அவரைத் தாக்கியிருக்கின்றனர். உடனே தம்மம்பட்டி பொதுக்கூட்டம் நடக்க ஆத்தூர் போலீசார் புறப்படுங்கள், சேலம் போலீசார் புறப்படுங்கள், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனா? உடனே வேனில் புறப்பட்டு பாதுகாப்பு கொடுங்கள் என்று சரமாரியாக ஒயர்லஸ்ஸில் இருந்து முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக தகவல்கள் வந்து கொண்டேயிருந்தது.

உடனே நான் தம்மம்பட்டி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த செல்வராசை அழைத்து உடனடியாக பொதுக்கூட்ட ஏற்பாட்டை தோழர்களுடைய ஒத்துழைப்போடு மீண்டும் செய்யுங்கள். அய்யா அவர்களிடம் சொல்லி விட்டுப்புறப்படுங்கள் என்று சொன்னேன்.

பொதுக்கூட்டத்தை நடத்தி பேசிவிட்டுத்தான் போவேன் என்பதை அவர்களிடமும் உறுதியாகச் சொல்லி விட்டார் தமிழர் தலைவர். பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்த தோழர்கள் சிறிது நேரத்தில் அவசரமாகத் திரும்பி வந்தனர்.நடந்த தாக்குதல் கலவரத்தில் மைக் செட்டுக்காரர் மைக் செட்டைக் காப்பாற்றினால் போதும் என்று எடுத்துக் கொண்டு ஓடியேவிட்டார் என்று சொன்னார். வேறு மைக் செட்டைப் பாருங்கள் என்று சொன்னேன். அது கிராமம், இருட்டில் சென்று வருவது சாத்தியப்படாது கஷ்டம் என்று கூறினார். இதை அய்யாவிடம் சொல்லுங்கள் என்று சொல்லி அழைத்து வந்து சொல்லச் சொன்னேன். மைக்கே வேண்டாம்யா; கூடியிருக்கிற மக்களிடம் மைக் இல்லாமலே பேசுகிறேன் போங்கள் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் தமிழர் தலைவர்.

போலீஸ் வேன் நான்கைந்து மட,மடவென்று சரமாரியாக வந்து இறங்கியது. 50, 60 போலீசாருக்கு மேல் வந்து வண்டியில் இருந்து குதித்து இறங்கினர்.போலீஸ் வந்து குவிந்ததும் ஊர்க்காரர்கள் மடமடவென்று கடைகளை அடைத்து விட்டனர். பிறகு ஒரு கிராமத்திலிருந்து மைக் செட் சைக்கிள் மூலம் கொண்டு வரப்பட்டது. போலீஸ் பந்தோபஸ்துடன் ஒரு டேபிளில் பெட்ரமாக்ஸ் லைட்டு வைத்து தமிழர் தலைவர் முகம் மட்டும் தெரியும் அவ்வளவுதான். அதிலேயும் ஒன்னேகால் மணி நேரம் பேசினார். என்னால் செய்தி எழுதக்கூட முடியவில்லை. பேச்சை டேப் செய்தேன். இரவு 11.45 மணி வாக்கில் பொதுக் கூட்டம் முடிந்தது. ஊர் பொதுமக்களும் அதுவரை இருந்தனர். தோழர்கள் போலீசாருக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டார் தமிழர் தலைவர். துறையூர் தோழர்கள் காரில் பாதுகாப்பாக பின் தொடர்ந்தனர். ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு வழியில் கடைகள் இருந்த இடத்தில் அப்பா நீங்க, டிரைவர் எல்லாம் சாப்பிடுங்க என்று கூறினார் தமிழர் தலைவர். அய்யா சாப்பிட உங்களுக்கு என்ன வாங்கி வருவது என்று கேட்டேன். டிபன் வேண்டாம். வாழைப்பழம் இருந்தால் பார். லைட்டாக டீ வாங்கி வா போதும் என்றார். நான், தாமோதரன், ஓட்டுநர் மூன்று பேரும் டீ மட்டும் சாப்பிட்டோம். துறையூர் தோழர்கள் சாப்பிட வற்புறுத்தினார்கள். வேண்டாம் என்று நாங்களும் மறுத்துவிட்டோம் சாப்பிட மனமில்லை. காரணம் அவ்வளவு டென்ஷன். காரில் 100 கி.மீ. வேகத்தில் பறந்தோம் விடியற்காலை இரண்டே முக்கால் மணிக்கு தஞ்சாவூர் வல்லம் வந்தடைந்தோம்.

இப்படியெல்லாம் இயக்கத்திற்காகவும், மக்களுக்காகவும் போராடிய தமிழர் தலைவர் அவர்களின் உயிர் மூச்சான கொள்கையை உழைப்பை இந்த உலகமே போற்றுவது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். அவர் தமிழினத்திற்காக தொடர்ந்து தொண்டாற்றி நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டுமென்று விரும்புகிறோம். உயிரையும் பொருட்படுத்தாது தொடரட்டும் அவரது தொண்டறப் பிரச்சாரம்.
http://www.viduthalai.periyar.org.in/20101201/news29.html

No comments:


weather counter Site Meter