Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

செய்தியும் சிந்தனையும்! யாகம் என்னும் கலாச்சாரம்!


யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம்.

ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் தோன்றினார்கள். சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது.

வடபுலம் என்று வீரப் பராக்கிரமம் காட்டி கனக விசயன் தலையில் கல்லேற்றி வந்த வீராதி வீரன் செங்குட்டுவன் மாடல மறையோன் என்னும் பார்ப்பன நஞ்சு, ஊட்டிய மதப் போதையில் சிக்கி யாகம் நடத்தி, மானம் கெட்டான்.

பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார்.

ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.

தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், காட்டு விலங்காண்டித்தனமானது. வெட்டுண்ட குதிரைகளுடன் தசரதனின் பட்டத்தரசிகள் கட்டிப் புரண்டனர் என்பது என்னே கண்ணராவி!

யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் உச்சகட்டம்.

ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும்.

குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.

அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நர மேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.

இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம்.

எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.

வேத வேள்வியை நிந்தனை செய் துழல்

ஆத மில்லிய மனோடு தேரரை

வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே

வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தன்.

யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்.

இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா?

இதோ ஒரு செய்தி:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம்.

இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்துகொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).

150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம்.

எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்?

உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா?

வேதப் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள்.

சிந்திக்கும் திறனிருந்தால் சிந்தியுங்கள்!

- கருஞ்சட்டை -
http://www.viduthalai.periyar.org.in/20101227/news04.html

No comments:


weather counter Site Meter