ஒடுக்கப்பட்ட மக்கள் போராடி பெற்ற சமூக நீதிக்கான உரிமைகளை பார்ப்பன அதிகாரவர்க்கம் கொல்லைப்புறம் வழியாகத் தட்டிப் பறிக்கும் சதியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இதனைப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
எடுத்துக்காட்டாக மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் குழு ஒரு முடிவை எடுத்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கல்வி உட்பட எந்தக் கல்வியிலும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் வகையில் தனி சட்டமே இயற்றப்பட்டு விட்டது.
அகில இந்திய மருத்துவக் குழுவின் நுழைவுத் தேர்வினை ஏற்கும் வகையில் இருந்த மத்திய அரசும்கூட, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்குப் பிறகும், முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் குறுக்கீட்டுக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக நடக்கும் வழக்கில் திமுக அரசு தம்மையும் இணைத்துக் கொண்ட நிலையில் மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது.
இத்தகு நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று முன்னாள் (13.12.2010) வழங்கிய தீர்ப்பில் அகில இந்திய மருத்துவக் குழுவின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று கூறியிருப்பது - ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் மத்தியில் பேரதிர்ச் சியை ஏற்படுத்தி விட்டது.
அரசின் எத்தனை எத்தனையோ கொள்கை முடிவுகளில் தலையிட்டுள்ள நீதிமன்றங்கள், சமூக நீதிப் பிரச்சினை என்று வருகிறபோது மட்டும் இப்படியெல்லாம் வழுக்கிக் கொண்டு போவதைக் கவனிக்க வேண்டும்.
பொது நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழி வகுத்தால் - பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் தான்.
இந்தப் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் மாணவர் கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய மருத்துவக் குழு, உச்சநீதிமன்றம் போன்றவை - அதன் உயிர் நாடியின் கழுத்தில் சுருக்குப் போடும் வகையில் நடத்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
இந்த நுழைவுத் தேர்வினை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதலாம் என்கிற வாய்ப்பு - ஏற்பாடு வட இந்திய மாணவர்களுக்குக் கூடுதல் சலுகைகளை அளிக்கக் கூடியதாகி இந்தி பேசாத மக்களை வஞ்சிக்கும் இன்னொரு வகையான சதியாகும்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களைச் சேர்க்கும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்ட கேடுகள் என்னவென்று மருத்துவக் குழுவோ, உச்சநீதிமன்றமோ விளக்குமா?
நெருக்கடி நிலை காலத்தில் (1976) கல்வியை மாநில அரசின் பட்டியலிலிருந்து பொதுப் பட்டிய லுக்குக் அபகரித்துக் கொண்டு செல்லப்பட்டதால் ஏற்பட்டுள்ள பல கேடுகளில் இதுவும் ஒன்றாகும்.
இன்னொரு கொடுமை ஏற்கெனவே நிகழ்த்தப் பட்டுக் கொண்டும் இருக்கிறது. மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கான இடங்களில் (எம்.பி.பி.எஸ்.) 15 விழுக்காடு இடங்களை மத்திய தொகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அது 25 விழுக் காடாக உயர்த்தப்பட வேண்டும் என்ற அழுத்தமும் கொடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்விக்கான மேற்பட்டப் படிப்பில் (Post Graduate) 50 விழுக்காடு இடங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு மாநில அரசின் பொருளாதாரத்தில் நடக்கும் கல்லூரிகளிலிருந்து இடங்களை இப்படிக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் செல்லும் அதிகாரத்தைத் தனக்குத் தானே நடுவண் அரசு எடுத்துச் சென்றிருப்பது கண்டிப்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையே கடிக்கும் கதைபோல மாநிலங்களி லிருந்த இடங்களைக் கவர்ந்து சென்றதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களைச் சேர்க்கவேண்டும் என்று உத்தரவிடும் ஆணவத்தை என்னவென்று சொல்லுவது?
தமிழ்நாடு அரசு இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்பதில் அய்யமில்லை. இந்தப் பிரச்சினையை வெறும் பார்வையாளராக இருந்து தமிழ்மண் கவனிக்காது களத்தில் இறக்கிப் போராடும் ஒரு நிலையை திராவிடர் கழகம் உருவாக்கும் என்று எச்சரிக்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20101215/news41.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment