Pages

Search This Blog

Wednesday, December 8, 2010

மதுரைத் தீர்மானங்கள்

மதுரையில் நடைபெற்ற (5.12.2010) தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டில் அய்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பல தீர்மானங்களை திராவிடர் கழகம் நிறைவேற்றி வருகிறது. இப்பிரச்சினையில் திராவிடர் கழகத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனிதநேய அமைப்புகளும் கொண்டுள்ள அக்கறையை அது வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.
இந்திய அரசுக்குப் பல வகைகளிலும் வற்புறுத்திக் கொண்டே வருகிறது கழகம். பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மனப்பான்மையில்தான் இந்திய அரசு நடந்துகொண்டு வருகிறது.
மதுரையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாவது:
போர் ஓய்ந்தும், ஈழத்தில் தமிழர்களின் வாழ்வில் அமைதி திரும்பிடவில்லை; அடிப்படை உரிமைகள் அளிக்கப்படவில்லை. வாழ்வுரிமை தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்திய அரசும் இதில் ஏனோ தானோ என்று யாருக்கோ வந்த விருந்து என்ற முறையில் நடந்துவருவது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இலண்டன் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும், அதன் காரணமாக, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதும், உலகத் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வின் வெளிப்பாடு என்பதாக இம்மாநாடு கருதுகிறது.
உலகத் தமிழர்களின் இந்த உணர்வை உணர்ந்த பிறகாவது இந்திய அரசு, இப்பிரச்சினையில் மனிதாபிமானத்தோடும், நியாயமான அணுகுமுறையோடும். ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளையும், வாழ்வாதாரங்களையும் உருவாக்கித் தருவதில் உள்ளப்பூர்வமான ஈடுபாட்டைக் காட்டவேண்டும், இலங்கை அரசை செயல்பட வைக்கவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானம் பிரத்தியட்ச நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகும். இலங்கை அரசைப் பொறுத்தவரை இந்திய அரசுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நாணயமான முறையில் நிறைவேற்றிக் கொடுத்ததில்லை. இந்திய அரசினை ஒரு பொருட்டாகக்கூட நினைப்பதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், உதைத்த காலுக்கு முத்தம் என்ற போக்குதான் இருந்து வருகிறது.
இன்னொரு நாடான இங்கிலாந்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் உணர்வில் ஆயிரத்தில் ஒன்றில்கூட இந்திய அரசிடம் காணமுடியாதது பெரும் வருத்தத்திற்குரிய போக்காகும்.
இலங்கை அதிபர் ராஜபக்சேயைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், சிங்கப்பூரின் முதல் பிரதமரும், நிருவாகத்தில் உலக நாடுகளுக்கு உதாரண மாமனிதராக விளங்கியவருமான லீகுவான் யூ கூறியுள்ளதை நினைவுபடுத்திக் கொண்டால் போதுமானதாகும்.
சிங்களவர், தமிழர் என்ற இனப் பார்வைக்கு அப்பாற்பட்டவர் அவர். அப்பேர்ப்பட்டவர் என்ன கூறியுள்ளார் என்பதை இந்தியப் பிரதமரும், ஆட்சியாளர்களும் கவனிக்கவேண்டும்.
இலங்கையில் சிங்களவர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும்வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.
தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டதன் மூலம் இலங்கை இனச் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறி வருவதை மற்றவர்களும் நம்பவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கிக் கிடக்கவும் மாட்டார்கள்; பயந்து ஓடவும் மாட்டார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு சிங்கள தீவிரவாதி. அவரது மனதை மாற்றவோ, திருத்தவோ முடியாது. ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்துவிட முடியும் என்ற அவர்களின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது. இலங்கையில் இன்று நடந்துகொண்டிருப்பது அப்பட்டமான ஓர் இன அழிப்பு என்பதில் சந்தேகமில்லை.
(Citizen Singapore: How to Build a Nation - நூலில் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீகுவான் யூ கூறியுள்ளது).
இதைவிட இலங்கை அதிபரை வேறு யார் தான் தோலுரித்துக் காட்ட முடியும்?
ஒரு வங்காள தேசத்தை உருவாக்கிக் கொடுத்த இந்திய அரசுக்கு இலங்கையில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் புரிந்துகொண்டி ருக்கவில்லை என்று கூற முடியாது. எல்லாம் தெரியும் - ஏதோ ஒரு பிரச்சினையை மனதிற்கொண்டு ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் பழிவாங்க நினைப்பது அரசு மட்டத்திலான ராஜதந்திரமும் அல்ல - மனித உரிமையின் பாற்பட்டதும் அல்ல.
இவ்வளவுக்கும் இலங்கை அரசு எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியதும் கிடையாது.
இந்தியா - சீனா யுத்தத்தின்போதும் சரி, இந்தியா - பாகிஸ்தான் போரின்போதும் சரி, இலங்கை அரசு எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பது கூடவா இந்திய ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தெரியாது?
சீக்கியர்கள் வெளிநாடுகளில் சங்கடத்திற்கு ஆளானால் இந்தியா சீறுகிறது. சீனாவில் அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டால், அமெரிக்கா எச்சரிக்கிறது. ஆனால், இலங்கையில் ஈழத் தமிழர்கள் என்ற ஓர் இனமே முற்றிலும் அழிக்கப்படும் நிலையில்கூட யாருக்கோ வந்த விருந்து என்று இந்திய அரசு நினைக்கிறது - உதவி செய்யாவிட்டாலும்கூடப் பரவாயில்லை - தமிழர்களை முற்றாகக் கொன்று குவிக்கும் சிங்கள முரட்டுக் கரங்களுக்கு முட்டுக் கொடுக்கிறது - ஆயுதங்களைக் கொடுத்து உதவியும், இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளித்தும் ஈழத் தமிழர் அழிப்பில் தன் பங்கைக் கணிசமாகக் கொடுத்து வருகிறது என்றால், இந்தக் கொடுமையை உலகம் உள்ளவரை உலகத் தமிழர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
வெகுதூரம் செல்லவேண்டாம் - தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை என்ன பாடுபடுத்துகிறது? எத்தனை முறை தமிழர்கள் குரல் கொடுப்பது? எத்தனை முறை தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் முறையிடுவார் - அவ்வப்பொழுது கவலை தெரி விப்பதோடு தம் கடமை முடிந்துவிட்டதாக இந்தியா நினைக்கிறது என்றால், இத்தன்மையை என்னவென்று சொல்லுவது!
இது ஒன்றும் அரசியல் பிரச்சினையல்ல - மனிதாபிமானத்தோடு உலகம் ஒப்புக்கொண்ட - மனித உரிமைகளைச் சார்ந்த பிரச்சினை என்பதை இந்திய அரசு உணரவேண்டும் - அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதே நமது அழுத்தமான வலியுறுத்தலாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101208/news06.html

No comments:


weather counter Site Meter