Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

ஆரியர் - திராவிடர் போர்

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் வேலூரிலும், நாகப்பட்டினத்திலும் ஆற்றிய உரை நேரு கூறிய ஆரியர் - திராவிடர் போர் - நேற்றும் - இன்றும் எனும் தலைப்பில் திராவிடர் கழகம் நூலாக வெளியிட்டுள்ளது. அந்நூல், சென்னைப் பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவு நாளில் வெளியிடப்பட்டது. 32 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கான நன்கொடை ரூபாய் பத்து மட்டும்தான். இந்நூல் பட்டிதொட்டியெல்லாம் பரவும் வகை செய்ய தமிழர்கள் போதிய முயற்சிகளை மேற்கொள்வார்களாக!

இன்றைய சூழலில் இந்நூல் கடைகோடி மனிதர்க்கும் கொண்டு போய் போய் சேர்க்கப்படவேண்டியது அவசியம் ஆகும்.

தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த அளவில் மக்கள் நல அரசு (றுநடகயசந ளுவயவந) என்ற சொல்லாக்கத்திற்குப் பொருத்த மானதாகும்.

தேர்தல் அறிக்கையில் எவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளனவோ - என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளனவோ, அவையெல்லாம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது மட்டும் அல்லாமல், தேர்தல் அறிக்கையில் கூறப்படாத பலவும்கூட நிறைவேற்றப்பட்டுள்ளன.

2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று சொல்லப்பட்டது. அவ்வாறே அளிக்கப்பட்டும் வந்தது. அடுத்தகட்டமாக ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநில அரசும் நினைத்துப் பார்க்கப்பட முடியாத ஒன்று இது. இதற்காக கிலோ ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 21 இழப்பு என்று கணக்கிடப் பட்டுள்ளது. இருந்தாலும், மக்களின் பசிப்பிணி என்ற நோயைத் தீர்க்கும் இந்தத் திட்டத்தை வெறும் ரூபாய் அணா பைசா எனும் தராசு தட்டில் போட்டு நிறுத்துப் பார்ப்பது - மனிதாபிமானமற்ற மனத்தையே சுட்டிக்காட்டும்.

அதேபோல, மனிதனுக்கு மிக முக்கியமானது உடல் நோய் தீர்க்கும் பிரச்சினையாகும். கலைஞர் உயிர் காக்கும் திட்டம்; 108 ஆம்புலன்ஸ் உதவி - இவை எல்லாம் அடித்தட்டு மக்களின் நல்வாழ்வைத் தன் அடிமனத்தில் கொண்ட ஓர் அரசால்தான் செயல்படுத்த முடியும்.

அதேபோல குடியிருக்கக் கான்கிரீட் வீடு 21 லட்சம் மக்களுக்கு என்பது - எண்ணிப் பார்க்கவே மலைப்பாக இருக்கக் கூடியதாகும்.

வேலை வாய்ப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை - இது சில வெளிநாடுகளில் உண்டே தவிர, இந்தியாவுக்குள் கிடையாது.

சமூக மறுமலர்ச்சித் திசையில், பெரியார் நினைவு சமத்துவபுரம், தமிழ் செம்மொழி, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு என்பன காலத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடியவையாகும்.

இவ்வளவு நடந்தும் ஒரு சிறு கும்பல் இந்த ஆட்சியின் மீது மண்ணை வாரி இறைக்கிறது. இந்தக் கும்பலிடம் ஊடகம் என்பது வசதியாக, வளமாகச் சிக்கிக்கொண்டு இருக்கிறது. அந்தக் கும்பல் எண்ணிக்கையில் சிறுபான்மையான பார்ப் பனர்களாக இருந்தாலும்கூட, ஆதிக்கக் சக்திகளாகத்தான் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

தூசைத் துரும்பாக்கிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான அரசாக இது அமைந்துள்ளதால், அதனை இந்தச் சிறு நரிக் கூட்டத்தால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இந்தச் சிறு கும்பலுக்கும், இந்த நாட்டுக்குரிய மக் களுக்கும் நீண்ட காலமாகப் போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. இராமாயணம் என்பதேகூட இந்த அடிப்படை யில்தான் என்று நேரு - விவேகானந்தர் போன்றவர்களே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே - தேவாசுர யுத்தமே என்று அறுதியிட்டுக் கூறியிருக்கின்றார் தந்தை பெரியார் (விடுதலை, 22.5.1967).

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் இதனை ஒப்புக் கொண்டுள்ளார். தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை (18.9.1953 இல் முதல மைச்சராக இருந்த நிலையில், திருவான்மியூரில் பேசியது) என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையேதான் வேலூர், நாகை நகரங்களிலும் (முறையே 27.11.2010, 10.10.2010) நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும் வழிமொழிந்து பேசும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

1971 ஆம் ஆண்டு தந்தை பெரியார்: இப்பொழுது நடைபெறுவது திராவிட - ஆரிய யுத்தம் என்று சொன்னார். பெரியார் என்ன? இராமாயணத்தைப்பற்றி எழுதிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்களே, தேவாசுர யுத்தம் என்பது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடந்த யுத்தம் என்று எழுதியிருந்தாலும்கூட, இது திராவிடர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த போராட்டம்தான் என்று ஜவகர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதம் என்ற புத்தகத்திலே எழுதியிருக்கிறார்.

இப்பொழுது அரசியல் ரீதியாக அந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தாங்கவேண்டிய பெரும் பொறுப்பு நம்முடைய தோள்களுக்கு வந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

சிலர் குழப்புவதுபோல பிரச்சினையைத் திசை திருப்பு வதற்குக் கூறப்பட்ட ஒன்றல்ல இது. நாட்டு நடப்பும், பார்ப்பனர் களும், அவர்கள் கையில் சிக்குண்டு கிடக்கின்ற ஊடகங்கள் மேற்கொண்டிருக்கிற அடாவடித்தனமான பிரச்சாரங்களும் முதலமைச்சர் கூறுவது - கணித்திருப்பது மிகச் சரியானது தான் என்பதை வெளிப்படுத்துகின்றன.

இது ஒன்றும் இராமயண காலம் அல்ல; திராவிடர் இயக்கமும், தந்தை பெரியார் அவர்களும் எழுப்பியிருக்கிற தன்மான உணர்ச்சி தலைதூக்கி நிற்கும் காலகட்டம். 1971 பொதுத் தேர்தல் அதனை நிரூபித்தும் உள்ளது. 2011 தேர்தலும் அதற்கு மேலாகவும் திராவிடர்கள் தங்கள் ஆளுமையைக் காட்டுவார்கள் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

தமிழா, தமிழனாக இரு!

தமிழா, இன உணர்வு கொள்!!
http://www.viduthalai.periyar.org.in/20101227/news03.html

No comments:


weather counter Site Meter