மதுரை மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையைக் கேட்க கூடியிருந்த மக்கள் கூட்டம் |
பெண்களே தீச்சட்டி ஏந்தி வந்து, தீச்சட்டி இங்கே - மாரி யாத்தாள் எங்கே? என்ற கலகக் குரலை எழுப்பினார்கள் |
5.12.2010 அன்று மதுரையில் நடைபெற்ற தென் மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு பல வகைகளிலும் சிறப்புற்றதாக அமைந்திருந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகு கவியரங்கத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டது. கவியரங்கம் மறைந்து, கருத்தரங்கங்கள் தோய்வுற்று, பட்டிமன்றங்களே எங்கும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள ஒரு காலகட்டத்தில் மீண்டும் கவியரங்கிற்குப் புத்துயிரை மதுரை மாநாடு அளித்தது.
பட்டிமன்றத்திலும் புதிய வடிவில் ஒன்றை மதுரை மாநாடு அளித்தது. பாட்டுப் பட்டிமன்றம் என்பதுதான் அது.
கருத்துகளை எடுத்துக்கூறி இடையிடையே பாடல்கள் பாடுவது என்ற முறைதான் அது. பொதுவாக மதுரைதானே அரங்கேற்றத்திற்கான ஊர் - அங்கு அரங்கேறிவிட்டால் அதற்கு அக்மார்க் முத்திரைபோல.
இந்தப் புதுமுறை முதல் நிகழ்ச்சியிலேயே களை கட்டிவிட்டது. வெறும் உரையாடல் என்பதோடு இசையும், அசையும் கலந்துவிட்டால் முத்தமிழும் ஒரே இடத்தில் சங்கமித்துவிட்டது என்றுதானே பொருள்படும்.
கழகக் குடும்பங்கள் மட்டுமல்ல - பொதுமக்களும் ஏராளம் கலந்துகொண்டு பாட்டுப் பட்டிமன்றத்தை வெகு வாக இரசித்தனர், கைதட்டலுக்குப் பஞ்சமேயில்லை.
காலம் கடந்து பிற்பகல் 3 மணிவரை நடந்தாலும், பசி நோக்காது பார்வையாளர்களாக மக்கள் அமர்ந்திருந்தது தனிச் சிறப்பாகும்.
எதையும் அறிமுகப்படுத்துவது திராவிடர் கழகமாக இருக்கும் - அதனை மற்றவர்கள் பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் - அதுவும் வரவேற்கத்தக்கதுதானே!
என்ன பிரச்சினையென்றால், அத்தகைய பட்டிமன்றங் கள் மக்களுக்குப் பயனுள்ளதாக, கருத்துக்கு விருந்தாக, மூட நம்பிக்கை இருளை விரட்டுவதாக, முற்போக்குத் தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
வடிவங்களை மட்டும் திராவிடர் கழகத்திடமிருந்து வரித்துக் கொண்டு மய்யக் கருத்துகளைப் பழைமைப் பாசிகளில் குப்பைகளில் தேடுவதுதான் வருந்தத்தக்கதும், வெட்கப்படத்தக்கதுமாகும்.
திராவிடர் கழகம் எடுத்துக்கொண்ட தலைப்பு மிகவும் பயனுள்ளதாகும்; அன்றாட வாழ்வில் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் பிரச்சினையை மய்யப்படுத்துவதாகும்.
சமூக சீரழிவுக்குப் பெரிதும் காரணம் திரைப்படப் பாடலா? பக்திப் பாடலா? என்ற தலைப்பில் இருதரப்பிலும் பேசிய கழகத் தோழர்கள் முதல் அரங்கேற்ற நிலையிலும் கூட - பல மேடைகளில் இந்தத் தலைப்புகள் ஏற்கெனவே அலசப்பட்டதுபோன்ற முதிர்ச்சியோடு பாடலும், கருத்தும் கைகோர்த்து இழைந்து நின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஒரு சுற்று வந்ததற்குப் பிறகு அடுத்த தலைப்பைத் தேர்வு செய்யவேண்டும் - கழகப் பொறுப்பாளர்கள் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (நுழைவுக் கட்டணம் வைத்தேகூட நடத்தலாம் என்று கழகத் தலைவர் கருத்தொன்றையும் கூறியிருக் கிறார்கள் - அந்த அளவுக்கு மக்கள் மத்தியிலே வரவேற்பைப் பெறும் என்பது கணிப்பாகும்).
கவியரங்கம், பாட்டுப்பட்டிமன்றம் நிறைவுற்ற நிலையில், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் பாராட்டிவிட்டுத் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.
தொலைக்காட்சிகளால் ஏற்படும் தொல்லைகளைப்பற்றி மிகவும் வேதனையோடு குறிப்பிட்டார்கள். சினிமாக்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
குறிப்பாக இளைஞர்கள் கைகளில் கத்தைக் கத்தையாக பல வண்ணங்களில் கயிறுகளைக் கட்டிக்கொண்டு திரி கிறார்களே - எதற்காக அவ்வாறு கட்டிக் கொள்கின்றனர் என்கிற காரணம் தெரியுமா அவர்களுக்கு?
ஒரு திரைப்படத்திலே தங்களுடைய அபிமான நடிகர் ஒருவர் குறிப்பிட்ட நிறத்தில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டால், உடனே ரசிகர்கள் அதே வண்ணக் கயிறுகளைக் கட்டிக் கொள்கிறார்கள்.
இதைப்பற்றிச் சொல்ல வந்த திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அறிவியல் ரீதியாக நம் இளைஞர்களை நெறிப்படுத்தும் பொறுப்புணர்வோடு ஒரு கருத்தினைப் பதிவு செய்தார்.
இரண்டு நாள் குளிக்காமல் இருந்தால் மனிதனிட மிருந்து ஒரு வாடை வருகிறது. உடலில் அழுக்கு சேரக் கூடாது என்பது முக்கியமாகும்.
கைகளில் கட்டும் கயிறுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கு சேர்ந்தால் என்ன ஆகும்? கிருமிகள் குடி யிருக்கும் சொகுசு இல்லமாகத்தானே மாறும்? அந்தக் கையால்தானே சாப்பிடுகிறோம். கிருமிகள் ரத்தத்துக்குள் உல்லாசமாக ஊடுருவ வசதி செய்து கொடுத்ததாக ஆகாதா? என்ற பகுத்தறிவு வினாவை எழுப்பினார்.
அதன் அடிப்படையில் பேரணியில்கூட கயிறு திரிக்காதே! கயிறு கட்டாதே! என்ற முழக்கம் வெடித்துக் கிளம்பியது.
நமது மாநாடு என்பது மக்கள் மத்தியில் புதிய சிந்தனை - புதிய உணர்வை ஊட்டி, மனிதனைப் புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்வதுதானே! அந்த வகையில் மதுரை மகத்தான வரலாறு படைத்துவிட்டது. பாடுபட்ட அத்தனைப் பேர்களுக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்!
http://www.viduthalai.periyar.org.in/20101206/news17.html
No comments:
Post a Comment