திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (18.12.2010) முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. நீண்ட காலமாகக் கழகத் தோழர்களும், கழகத்திற்கு அப்பாற்பட்ட பெருமக்களும் கோரி வந்த கருத்துக்குச் செயலுருவம் கொடுக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது.
2011 ஜனவரி முதல் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றில் பெரியார் நேரம் என்ற பகுதியைத் தொடங்கி, பெரும் அளவில் பகுத்தறிவுக் கருத்துப் பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்.
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பின் கொள்கைப் பிரச்சாரப் பயணத்தில் காலத்திற்கேற்ற அணுகுமுறை களோடு, அறிவியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
விடுதலை ஏட்டைப் பொறுத்தவரை 8 பக்கங்களாக ஆக்கப்பட்டது; திருச்சிராப்பள்ளியில் கூடுதலாக இன் னொரு பதிப்புத் தொடங்கப்பட்டது. நவீன வகையில் கணினி, நவீன அச்சு இயந்திரம் இவையெல்லாம் நிறுவப் பட்டு, வணிக ஏடுகளையும் விஞ்சக் கூடிய அளவுக்குச் சிறப்பான பொலிவோடு கருத்து வளத்தோடு ஏறுநடை போட்டு வருகிறது.
கழக வெளியீடுகள் என்பது நமது பிரச்சாரக் களத்தில் முன்னிலை வகிக்கக் கூடியதாகும். தொழில் ரீதியான பதிப்பகத்தார்களை மிஞ்சும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு, அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. புதிய புதிய வெளியீடுகள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றன.
அரசு மற்றும் தனியார் நடத்தும் கண்காட்சிகளில் எல்லாம் நமது புத்தக அரங்கு கண்டிப்பாக இடம் பெற்று விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது. பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை அதன் பணியைப் பூமிப் பந்தின் தொடர் சுழற்சிபோல செய்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டு வரும் ஞானசூரியனை வாங்கிப் படியுங்கள் என்று அறிக்கை வெளியிட்டாலும் வெளி யிட்டார், அந்நூல் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் சென்றடையும் வண்ணம் திட்டம் தீட்டப்பட்டு, அனேகமாக அந்தப் பணியும் முற்றுப் பெற்றுவிட்டது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் ஒவ்வொருவரும், திராவிட இயக்கத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளும் சிப்பாயாகப் புறப்படுவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.
பார்ப்பனியத்தின் ஒடுக்கும் கருவிகளாக இந்து மதமும், அதன் வேத, புராண இதிகாசங்களும், உபநிஷத்துகளும் எந்த அளவு கூர்மையுடையவை என்பதை அக்கக்காக ஆதாரங்களுடன் திகழும் நூல்தான் சுவாமி தயானந்த சரசுவதி அவர்களால் எழுதப்பட்ட ஞானசூரியன் ஆகும்.
இந்நூலுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அணிந்துரை - சிறப்புரை தந்திருக்கிறார். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் புகழ் மகுடம் சூட்டியிருக்கிறார்.
பார்ப்பனர் அல்லாதார் உணர்வைப் பெறுவதற்கான நுழைவு வாயில் இந்நூல் என்று கூடச் சொல்லலாம்.
ஆரியர் - திராவிடர் போராட்டம் தோன்றவேண்டிய உணர்வினைப் பார்ப்பனர்களே முன்வந்து முரசு கொட்டி விட்ட இக்காலகட்டத்தில், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ஞானசூரியன் நூலைக் கையில் எடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார் - மானமிகு கலைஞர் அவர்கள்.
திராவிட இயக்கத்தின் புதிய தலைமுறையினர் தம் வாசிப்பை உடனடியாகத் தொடங்கவேண்டும். ஆரிய ஏடுகள் கழுகு நகங்களை எழுதுகோலாக்கிக் கோர நர்த்தனம் பொழிகின்றன. அதன் திமிர் அடக்கும் ஆயுதம்தான் இந்த ஞானசூரியன்
இது ஒரு பக்கத்தில் நடந்துகொண்டாலும், இன்றைய முக்கிய ஊடகமாகத் தொலைக்காட்சி ஒவ்வொரு வீட்டின் அறையிலும் சட்டமாக உட்கார்ந்து கொண்டு விட்டது. துளித்துளி விஷமாக நம்முடைய மூளை நரம்புகளில் பார்ப்பனியச் சரக்குகள், பிற்போக்குக் கசுமாலங்கள் நம்மை அறியாமலேயே ஏறிக் கொண்டு இருக்கின்றன. அதன் ஆபத்துகள் நமக்கு நன்றாகவே புரியவும் ஆரம்பித்தன. நம் வீட்டுக் குழந்தைகளின் போக்கில்கூட அடாத போக்குகள்; இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில்கூட சமூக உணர்வு, பகுத்தறிவு உணர்வு ஏற்படுவதற்குப் பதிலாக அழுகல் உணர்வுகளும், ஆரோக்கியமற்ற போக்குகளும் தலை எடுப்பதைப் பார்த்து கவலைப்பட்டால் மட்டும் போதாது.
இந்த அபாயப் போக்கிலிருந்து தமிழர் வீட்டுப் பிள்ளைகளையும், இளையோரையும் மீட்டெடுக்க, முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல, தொலைக்காட்சி என்ற நவீன ஊடகத்தை நாமும் பயன்படுத்தியே தீரவேண்டும்.
பெரியாரியல் சிந்தனை மூலிகைதான் நம் மக்களின் மயக்கம் தீர்க்கும் நல் மருந்தாக இருக்க முடியும்.
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு எடுத்த முடிவு - உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பெரியார் தொலைக்காட்சி வருவதற்குமுன் முன்னோட்டமாகப் பெரியார் நேரம் பவனி வரவிருக்கிறது. பொருளாதாரம் - மிக முக்கியம் - விளம்பரங்கள் கிடைக் காமல் தொடர்ந்து நடைபோடுவது கடினம் என்பதை நன்குணர்ந்து விளம்பரங்களைப் பெற்றுத் தருவதில் நமது தோழர்கள் போதிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.
வணிக நிறுவனங்களை நடத்தும் நமது ஆதர வாளர்கள், தமிழர்கள் கழகம் மேற்கொண்டிருக்கும் இந்த உன்னதப் பணிக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் - நீட்டுவார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது!
நாம் எடுத்த செயல் எதிலும் தோல்வி கண்டதில்லை. அதேபோல, இந்த அரும்பணியிலும் வெற்றி பெறுவோம் - வாழ்க பெரியார்!
http://www.viduthalai.periyar.org.in/20101220/news01.html
No comments:
Post a Comment