திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது 78 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தியாக - மீண்டும் மனுதர்மம் கோலோச்ச இடம் தரோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
எப்படி இருந்தாலும் காயம் (உடம்பு) அசைவில் இருக்கும்வரை ஏதோ ஒரு வேலை செய்தாகவேண்டும். அந்த வேலை யானது மற்றொருவருக்கு அடிமைப்பட்ட தாகவோ, மற்றொருவருடைய அபிப்பி ராயத்துக்கு அடிமைப்பட்டதாகவோ இல் லாமல், கூடியவரை தன் தன் புத்திக்குச் சரியென்று தோன்றிய இலட்சியத்துடன் நடந்து செல்லவேண்டியதைத் தான் நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருக்கிறேன்.
- அறிவு ஆசான் தந்தை பெரியார்
எனக்கு நாளை (2.12.2010) 78 வயது தொடங்குகிறது.
68 ஆண்டுகள் பொதுவாழ்வு
எனது பிறந்த நாள் விழாவை ஒரு கொண் டாட்டமாக நானோ, எனது வாழ்விணையரோ நினைப்பதில்லை.
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வயது - மனிதன் உயிருடன் இருக்கும்வரை - ஏறிக் கொண்டேதான் இருக்கும். இது தவிர்க்க இயலாத ஒன்று.
எனக்குப் பொது வாழ்வு 68 ஆண்டுகள் ஆகும். இதைவிட சிறந்த கல்வி, அனுபவம், யான்பெற்ற பேறு வேறில்லை.
இராணுவத்திலும் கிடைக்க முடியாத பயிற்சி
பதவி, புகழ், பெருமை, பணம் சம்பாதிப்பு என்பதில் நாட்டமின்றி, சுயமரியாதை வாழ்வு நமக்கு மட்டும் கிடைத்தால் போதாது; நம்மைப்போல மானுடத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் - மக்களுக்கும் கிட்ட வேண்டும். அதற்காக எதிர்நீச்சல், ஆதாரமற்ற பழிச் சொற்கள், வசவுகள், சிறைவாசங்கள், மன வருத்தம், மன உளைச்சல்... இவற்றை எல்லாம் ஏற்கும் பக்குவப்பட்ட வாழ்க்கை - இந்த 78 ஆண்டுகாலத்தில் - இராணுவ பயிற்சி முகாம்களில் கூட கிடைத்தறியாதவைகள் - கிடைத்துவிட்டன!
அனுபவ உலைக் கூடத்தில் சம்மட்டி அடிகள் மாறி மாறி என்மீது விழுந்து என்னைப் பதப்படுத்தி பக்குவமாக்கிவிட்டன.
அதை எனக்கோ, என் (ரத்த சம்பந்த) குடும்பத்திற்கோ பயன்படுத்திக் கொள்ளாமல், சமூகத்திற்கே - அதன் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் மானம் கருதாத - நன்றி எதிர்பார்க்காது வாழக் கற்றுக் கொண்டு, மூச்சுள்ளவரை பெரியாரின் இலட்சியப் பாதையில் பயணித்துக் கொண்டே இருக்கிறேன் - இருப்பேன்!
பெரியார் தந்த புத்தி!
என்னை முதுமையோ, நோய்களோ, வலிகளோ, விரக்தியோ, சலிப்போ பாதிக்காமல் சொந்த புத்திக்கு இடம் தராமல், பெரியார் தந்த புத்தியின்படி இயந்திரம் போல நான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன்; இனியும் இருப்பேன்! அதில்தான் எத்துணை மகிழ்ச்சி - எத்துணை எத்துணை இன்பம்!! மகிழ்ச்சிக் கண்ணீர்மல்க உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்கிறேன்!
அய்யா, அம்மா வைத்த நம்பிக்கை
அய்யா-அம்மா இட்ட கட்டளையை நிறைவேற்றுவது, அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நியாயப் படுத்துவது, நீங்கள் அனைவரும் உலக முழுவதிலும் உள்ள கழகக் குடும்பத்தவர்கள் வைத்துள்ள அபரிமித, அடைக்கும் தாழிலா அன்புக்கு மரியாதை செலுத்த மூச்சுள்ள வரை உழைப்பேன். இந்த நிலைகள், என்னை நாளும் இளமையாக்கி, முதுமையின் கொடுமையில் தள்ளிவிடவில்லை. முதிய இளைஞனாக என்றும் இருப்பேன்.
விருப்பங்களை (Aptitude) விலை கொடுத்துப் பெறலாம். மனஉறுதிகளை (Attitude),, மனப்போக்கினை எங்கும் எவரும் விலைபோட்டு வாங்கிட முடியாது.
பயிற்சியால், பக்குவப்படுத்தப்பட்ட அனுபவப் பாடம் இது.
எனக்குள்ளே நான் பாராட்டிக் கொள்வது
என்ன தெரியுமா?
என்ன தெரியுமா?
எனக்குள் நானே மகிழ்ந்து பாராட்டிக் கொள்ளும் ஒன்று-நாம் தேர்வு செய்த ஞானாசிரியர், அவர் தந்த இலட்சியங்களும், அமைப்புகளும்தான் எத்தகைய தனித்தன்மையான-தூய்மையான பளிச்சிடும் தொண்டறம்!
மனிதர்கள் நடப்பதால் சுவடுகள் பதிகின்றன. பாரம் பரியமாகி வழிகாட்டுகிறது. விழி திறக்க வைக்கின்றது. பறவைகள் பறந்து போகின்றன. அவற்றால் சுவடுகளை உருவாக்க முடியாதல்லவா?
அதுபோல மனித வாழ்வில் பறவைகளாகிவிட்ட பலரும் சுவடுகளை ஏற்படுத்த இயலாதவர்கள் ஆவர். அவர்களைப் பின்பற்றிட எவரும் இல்லை.
தலை தாழ்ந்த வணக்கம்
இந்நேரத்தில் மனிதநேயப் பணிகளை-தொண்டினை ஆற்ற என்னை ஒரு சாக்காக, எனது பிறந்தநாளை ஒரு வாய்ப்பாக ஆக்கிக்கொண்ட என்னரும் கொள்கைக் குடும்பத்தினர்களே, உங்களுக்கு எனது தலைதாழ்ந்த வணக்கத்தை, எனது நன்றியை உங்களுக்காக, ஊருக் காக, உலகுக்காக உழைப்பதில் காட்டுவதுதானே அறிவு ஆசான் காட்டிய பாதை!
பயணங்கள் முடிவதில்லை-பணிகள் நிறைவடையாமல்.
மனுதர்ம ஆட்சிக்கு இடம் கொடோம்!
மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் மனுதர்மம் உரு கொள்ளக் கூடாது. இன்றைய இரண்டாம் அசோகரின் ஆட்சியே தொடரவேண்டும். அத்தகு பணிக் கான உடனடியான அர்ப்பணிப்பு நமக்குத் தேவை.
இதைவிட மானம் பார்த்து முந்துறும் மகத்தான பணி- கடமைதான் வேறு என்ன தோழர்களே, தோழியர்களே?
படையில் சேர்ந்தவர்களின் உயிர்
வெல்லம் அல்ல.
தடை பல கடந்து வெற்றி இலக்கை
அடைவதே ஒரே குறி! ஆம் அதுவே
இலட்சியப் பாதையின் ஒரே நெறி!
மறவாதீர்!
உங்கள் தொண்டன், தோழன்
தலைவர்,
திராவிடர் கழகம்.
http://www.viduthalai.periyar.org.in/20101201/news01.html
1 comment:
கி. வீரமணி அய்யா அவர்களுக்கு 78 வது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
unmaivrumbi,
Mumbai.
Post a Comment