Pages

Search This Blog

Monday, December 6, 2010

தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்

சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றுக! ஆரியர் - திராவிடர் போராட்டம் மூண்டுவிட்டது! தமிழர்களே, தயாராவீர்! தயாராவீர்!

நாடாளுமன்றத்தை முடக்கி மக்கள் வரிப் பணத்தைப் பாழாக்குவதா?

மாவட்டத் தலைநகரங்களில் டிச.10 இல் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள்

மக்கள் வரிப் பணத்தால் இயங்கும் நாடாளுமன்றத்தை இயங்கவிடாமல் முடக்கும் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதுரையில் நேற்று (5.12.2010) நடைபெற்ற திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக!

தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் - புராணக் கற்பனைப் பாத்திரமான இராமனைக் காரணம் காட்டி - ராமன் பாலத்தை இடிக்கக்கூடாது என்று கூறி, அறிவியலுக்கு முற்றிலும் முரணான வகையில், மக்களுக்கான ஒரு வளர்ச்சித் திட்டத்தை நீதிமன்றத்தின்மூலம் முடக்கியிருப்பதற்கு இம்மாநாடு தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத்தார் நீண்ட காலமாக வலியுறுத்திவரும் இந்தத் திட்டத்தை அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டும், திராவிட என்பதைப் பயன்படுத்திக் கொண்டும் இருக்கும் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிடர் இயக்கத்திற்கு எதிராகவும், தாம் முன்பு எடுத்த முடிவுக்கு முரணாகவும், அரசியல் நோக்கத்தோடும், மூட நம்பிக்கையின் அடிப்படையிலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதை - தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் அடையாளம் கண்டு, வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், அதனோடு கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்கும் சரியான தண்டனையை அளிக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான நலன்களை, வளங்களை உள்ளடக்கமாகக் கொண் டிருப்பதால், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி, விரைவாகத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 (அ):

உள்நோக்கத்தோடு மானமிகு ஆ.இராசா மீது பழிபோடும் சக்திகளுக்குக் கண்டனம்!

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த மானமிகு ஆ.இராசாவை வெறும் யூகத்தின் அடிப்படையில், அவரால் தொலைத்தொடர்புத் துறைக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டதாக வலிந்து கூறி, அவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காகக் குறி வைத்துத் தாக்கிவரும் பார்ப்பன சக்திகளையும், பார்ப்பன ஊடகங்களையும், அரசியல் நோக்கத்தோடு வீண்பழி சுமத்தும் அரசியல் சக்திகளையும், தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்கவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 (ஆ):

நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்குவதை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!

தொலைத்தொடர்புத் துறையில் ஊழல் என்று கூறி, இதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை ஏற்படுத்தி விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தி இரு வாரங்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல், வாக்களித்த மக்களுக்காக நாடாளுமன்றங்களில் கருத்துகளையும், கோரிக்கைகளையும், விவாதங்களையும் நடத்துவதற்கு மாறாக, நாடாளுமன்றங்களையே நடத்தவிடாமல் சண்டித்தனம் செய்து மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது, மக்கள் நாயக அமைப்பு முறைக்குப் பெரும் கேடும், இழுக்கும் என்று இம்மாநாடு திடமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படி நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுக்கும் நிலையில், உறுப்பினர்களுக்கான படிகளோடு, சம்பளத்தையும் நிறுத்தவேண்டும் என்று, குடிமக்கள் என்ற முறையில் மத்திய அரசையும், நாடாளுமன்ற இரு அவைத் தலைவர்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினைபற்றிய விவாதத்தை எழுப்பும் வகையிலும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை 10.12.2010 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலை மையிலான தி.மு.க. ஆட்சியை இனவுணர் வின் அடிப்படையில் எதிர்க்கும் - பொய்ச் செய்திகளைப் பரப்பும் வேலைகளில் மும் முரமாய் ஈடுபட்டு வருவதை தமிழர் களாகிய வாக்காளர் பெருமக்கள் புரிந்து கொண்டு, நடக்க இருப்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதை மனதிற்கொண்டு ஆரியத்துக்கும், அதற்குத் துணை போகும் சக்திகளுக்கும் வாக்குகள் மூலம் பதிலடி கொடுத்து, கலைஞர் தலைமையிலான திராவிடர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர ஆதரவு அளிக்குமாறு இம்மாநாடு தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

வேலூரில் கடந்த 26.11.2010 அன்று உரையாற்றிய மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் இனமான உரையை வரவேற்று, அதனை நாடு தழுவிய அள வில் பரப்புவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது!

தீர்மானம் 4(அ):

ஈழத் தமிழர் பிரச்சினையும் - மத்திய அரசும்

போர் ஓய்ந்தும், ஈழத்தில் தமிழர்களின் வாழ்வில் அமைதி திரும்பிடவில்லை; அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட வில்லை. வாழ்வுரிமை தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இந்திய அரசும் இதில் ஏனோ தானோ என்று யாருக்கோ வந்த விருந்து என்ற முறையில் நடந்துவருவது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இலண்டன் சென்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லட்சக் கணக்கான தமிழர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும், அதன் காரணமாக, ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே நிகழ்ச்சி ரத்து செய் யப்பட்டதும், உலகத் தமிழர்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் உணர்வின் வெளிப்பாடு என்பதாக இம்மாநாடு கருதுகிறது.

உலகத் தமிழர்களின் இந்த உணர்வை உணர்ந்த பிறகாவது இந்திய அரசு, இப்பிரச்சினையில் மனிதாபிமானத் தோடும், நியாயமான அணுகுமுறை யோடும். ஈழத்தில் எஞ்சியிருக்கும் தமி ழர்களுக்கான அனைத்து உரிமைகளை யும், வாழ்வாதாரங்களையும் உருவாக்கித் தருவதில் உள்ளப்பூர்வமான ஈடுபாட்டைக் காட்டவேண்டும், இலங்கை அரசை செயல்பட வைக்கவேண்டும் என்றும் இம் மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 (ஆ)

தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் தூதர்களாக தமிழர்கள் நியமனம் - தனி அமைச்சகம் உருவாக்கக் கோருதல்!

அதிகமான எண்ணிக்கையில் தமி ழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமீரகம் (துபாய்), குவைத் முதலிய நாடுகளுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், வெளிநாடுகளில் - வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச் சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்புப் பாலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினை களுக்குத் தீர்வு காண முயலுவது அதன் பணியாக அமைதல் அவசியமாகும். பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் இப்படி ஒரு தனி அமைச்சகத் துறை உள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண் 5:


அண்ணல் அம்பேத்கர் திரைப்படத்திற்குஆதரவு

பார்ப்பனிய, இந்து மத வருணா சிரமத்திற்கு எதிரான தலைவர் அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு, தமிழில் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகையாக ரூபாய் பத்து லட்சம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம் பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக் கங்கள் என்னும் நிலையில், அம்பேத்கர் திரைப்படத்தினைக் குடும்பம் குடும்பமாகக் கண்டுகளித்து தமிழ்நாட்டில் அதிக நாள்கள் ஓடியது அம்பேத்கர் திரைப்படம் என்னும் ஒரு சாதயை நிகழ்த்திக் காட்டுமாறு தமிழ்ப் பெருமக்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
http://www.viduthalai.periyar.org.in/20101206/news14.html

No comments:


weather counter Site Meter