Pages

Search This Blog

Tuesday, February 8, 2011

பெரிய புராணம் பெருமை மாநாடா?

பாடும் மாநாடாம்! சிதம்பரத்தில் கடந்த சனியன்று சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழக 4ஆவது இரு நாள் மாநாடு நடைபெற் றுள்ளது. இந்து மதம் பற்றிய பல்வேறு குறுந்தகடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு ஆதீன கர்த்தர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

அதில் இறைத் தத்துவத்தை இலக்கியமாக மாற்றியவர் சேக்கிழார் என்றும், இலக்கியம் படிப்பவர்கள் நாத்திகவாதிகளாக இருந்தாலும் சேக்கிழார் பெரிய புராணத்தைப் படித்துதான் ஆக வேண்டும் என்றும் பேசியிருக்கின்றனர்.

தற்போது விலைவாசி உயர்வு, தொல்லை, துன்பம் நிறைந்த வாழ்க்கையில் இவற்றிலிருந்து விடுபடும் அளவில் இந்தச் சேக்கிழார் மாநாடு இரு நாள் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர். பெரிய புராணத்தின் மேன்மைகளை எல்லாம் இரண்டு நாள்கள் பகுத்தாய்ந்து புளகாங்கிதம் அடைந்தனராம்.

பொதுவாகப் புராணம் என்றாலே பழைய குப்பை -அறிவுக்குப் பொருந்தாதவையாகும். வரலாறு வேறு; புராணம் வேறு!

பெரிய புராணத்தைப் பொறுத்தவரை குன்றத்தூரைச் சேர்ந்த சேக்கிழார் என்னும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரால் எழுதப்பட்டதாகும்.

இந்தப் புராணம் மூலநூல் அன்று. சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திரு அந்தாதியை வழி நூலாகவும் கொண்டு எழுதப்பட்டதாகும். 63 நாயன்மார்களைப்பற்றி எழுதப்பட்ட சைவ நூலாகும்.

புராணங்கள் பதினெட்டு, உபபுராணங்கள் பதினெட்டு என்று கூறும் பார்ப்பனர்கள் கதைக்கும் பட்டியலில் இந்தப் பெரிய புராணமோ, திருவிளையாடற் புராணமோ இடம் பெறா. ஒருக்கால் தமிழில் இவை எழுதப்பட்டதால் பார்ப்பனர்களால் மிலேச்ச பாஷை என்று தீண்டத் தகாததாக ஆகி விட்டது போலும்!

தெய்வீகச் சாயம் அடித்துச் சொன்னால்தான் மக்களால் மதிக்கப்படும் என்ற குயுக்தியின் அடிப்படையில் இந்தப் புராணங்கள் எழுதப்பட்டுள்ளன. சுந்தரமூர்த்தி எழுதிய திருத் தொண்டத் தொகையில் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று கடவுள் அடி எடுத்துக் கொடுத்தாராம். தில்லையாகிய சிதம்பரத்தில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்க்கும் அடிமையாம் நடராஜக் கடவுள் - பார்ப்பனர்களை கடவுளுக்குமேல் தூக்கி வைக்கப்படுவது கவனிக்கத்தக்கதாகும்.

சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதத் தொடங்குமுன் சிதம்பரம் சென்று நடராசனைத் தரிசித்த நேரத்தில், அந்தக் கடவுள்தான் முதல் அடியை எடுத்துக் கொடுத்தா ராம். உலகெலாம் என்பதுதான் அந்த முதல் அடியாம்.

இந்தப் பெரிய புராணத்தை ஏன் எழுதினாராம்? அங்குதான் தமிழ்நாட்டில் அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற சைவ - சமணப் போராட்டத்தினை வெளியில் கொண்டு வருகிறது.

உத்தமச் சோழ பல்லவராயர் என்னும் மன்னன் சீவக சிந்தாமணி என்னும் ஜைன நூலினைப் பெரிதும் போற்றி வந்தாராம். சேக்கிழாருக்கு இது பிடிக்கவில்லையாம். மன்னன் ஏன் என்று வினவ, சிந்தாமணி - பொய்க்கதை; மாறாக மெய்க் கதை கேட்க வேண்டும் என்றானாம்.

அது யாதுவென அரசன் கேட்க, திருத்தொண்டர் புராணம் என்றாராம் சேக்கிழார்; அப்படியாயின் அதனைக் கூறுக என்று சொல்ல, அதற்குப் பிறகுதான் சிதம்பரம் சென்று, நடராசனைத் தரிசிக்க, அந்தக் கடவுள் உலகெலாம் என்ற அடியை எடுத்துக் கொடுத்தான் என்பது வளமான கற்பனையாகும்.

சரி, அது என்ன அப்படிப்பட்ட உயர்ந்த புராணம்? அதில் என்ன அப்படிக் கூறப்பட்டுள்ளதாம்? சைவ மெய்யன்பர்களை சிவன் சோதித்ததுதான் முக்கியமான சாராம்சம் ஆகும்.

பக்தனைச் சோதித்துத்தான் கடவுள் தெரிந்துகொள்ள வேண்டுமா? சோதிக்காமலேயே - தன் சர்வ சக்தியைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ள முடியாதா? என்று கேள்வி கேட்கக் கூடாது. புராண இதிகாசங்களை நோக்கிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான் - பொலபொல வெனக் கொட்டி விடும் அதன் சரக்கு.

பெரிய புராணம் தோன்றுவதற்கான மூலம் பற்றிச் சொல்லப்படும் கதையே அதன் நம்பகத்தன்மையைப் பரிகசிக்கச் செய்து விடும்.

கயிலை மலையில் உபமன்யு முனிவர் தமது சீடர்களுடன் உட்கார்ந்திருக்கும் சமயத்தில், ஒரு பேரொளியைக் கண்டு எழுந்து, சிரமேற் குவித்து வணங்கினாராம். பக்கத்தில் இருந்த சீடர்கள் சிவனைத் தவிர வேறு எவரையும் வணங்கிடாத நீங்கள் இப்பொழுது வணங்கக் காரணம் என்ன? என்று கேள்வி விடுத்தனர். இப்பொழுது வருகின்றவர் சுந்தரமூர்த்தி நாயனார் என்றும், அவர் வருவதுதான் இவ்வளவு பிரகாசமாகக் காணப்படுகிறது என்றும் கூறினாராம்.

உடனே அச்சீடர்கள் சிவனடியார்களின் கதைகளைக் கூறுமாறு கேட்க, அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தம் சீடர்களுக்குச் சொன்னாராம். அந்நூலுக்கு உபமன்யு பக்த விலாசம் என்று பெயராம்; அதைப் பார்த்துதான் சேக்கிழார் பெரிய புராணம் எழுதினார் என்றும் சொல்லப் படுவதுண்டு. சிவபெருமாள் பக்தர்களைச் சோதித்துள்ள தன்மைகளில் ஒழுக்கம் உண்டா, நாகரிகம் உண்டா என்றால் அதுதான் கிடையாது.

எடுத்துக்காட்டுக்கு இயற்பகை நாயனார் கதை ஒன்று போதுமே! சிவபெருமான் பார்ப்பனர் வேடந்தாங்கி, காவிரிப் பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த இயற்பகை நாயனாரிடம் வந்தார்.

சிவனடியார்களைக் கண்டால் கேட்பதையெல்லாம் கொடுப்பதுதான் இந்த சிவனடியின் வாழ்க்கை. என்ன கேட்டான் அந்தப் பார்ப்பான்? உன் மனைவியை என்னிடம் அனுப்பி வை! என்றான் (யோக்கியன் ஒருவன் கேட்கும் கேள்வியா இது?). அவ்வாறே அட்டியின்றி அனுப்பி வைத்தான். அதனைத் தடுக்க வந்த உற்றார் உற வினர்களை வாளால் வெட்டிக் கொன்றானாம் இயற்பகை.

பக்தனின் பக்தியை மெச்சி சிவன், மனைவி பார்வதி தேவியுடன் காளை மாட்டின்மீது அமர்ந்து ஆகாயத்தில் காட்சி தந்தானாம். நீயும், உன் மனைவியும் எனது உலகை அடைவீராக! என்று வரம் தந்தானாம். இப்படித்தான் அறிவுக்கும், ஒழுக்கத்துக்கும் ஒவ்வாத நாயன்மார்களின் கதைகளும். இலக்கியத்துக்காக பெரிய புராணத்தைப் படிக்க மாட்டார்கள் நாத்திகர்கள். ஏன் எனில் மலத்தில் அரிசி பொறுக்குவதில்லை அவர்கள்.

இந்தப் புராணத்தின் பெருமையைப் பேசத்தான் சிதம்பரத்தில் இரு நாள்கள் கூடி ஆய்வு செய்தார்களாம். நாடு உருப்படுமா?
http://viduthalai.in/new/page-2/3015.html 

2 comments:

CJ said...

நீ எந்த அளவிற்கு கல்வி கற்று , சமயமும் புராணமும் பயின்று பின் இந்த கட்டுரையை தொகுதிருகின்றாய் என்பது இதே படிக்கும் அனைவருக்கும் நன்கு புலனாகின்றது. எங்கள் தமிழில் சைவத்தையும் பக்தியையும் எடுத்துரைக்கும் நூல்களை விலக்கிவிட்டு அதை உங்கள் தமிழ் என்று சொன்னால் , உங்கள் தமிழில் மிஞ்சுவது ஒன்றும் இல்லை. நீங்கள் போதிக்கும் பகுத்தறிவு கூட மிஞ்சாது என்பது உங்கள்ளுக்கு நன்றாக தெரிந்தது. பகுத்தறிவு எனபது ஒரு உண்மைபோருளை மறைத்து , மிஞ்சும் பொருளை உரைப்பது என்றல் அது பகுத்தறிவாக இறுக்க முடியாது. அது புகுத்திய அறிவு. எது பகுத்தறிவு சிந்தனை? முதல்லில் உண்மை எது என்பதை உணர்த்தி , பிறகு மூட நம்பிக்கையை ஒழிப்பது தான் உண்மையான பகுத்தறிவு. இறைவனை அடையும் முறைகளை என்றல் இறை தன்மையை விளக்கி சொல்லத்தான் வேண்டும். இறை தன்மையை அடைய தமிழ் புராணங்கள் பான்க்தி நெறியை கையாள்கின்றது. ஒரு ரயில் நிலையத்தில் வந்து சேரும் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாகனத்தை கொண்டு இல்லத்திற்கு செல்வால்ர்கள். இல்லம் என்பது இறை என்றால் தமிழ் நெறி தரும் வாகனம் பக்தி. இப்படி ஒரு பகுத்தறிவு சிந்தனையை நீங்கள் மக்களுக்கு உணர்த்த முயன்றால் அது உண்மையான பகுத்தறிவு சிந்தனை. ஒரு விளக்கத்திற்கு உள்ள உர்போருளை எடுத்து அதை விளக்கி பின்னர் புராணங்கள் சொல்வதை எடுத்துரைத்தால் நீங்கள் பகுத்தறிவாளிகள். உங்கள் குறிக்கோள் என்னவென்றால் எப்படியாவது ஒரு சமய நூலை இழிவாக பேசவேண்டும் என்பது மட்டும் தான். இதே ஒரு இஸ்லாமிய நூலை உங்கள் கையில் எடுக்க மாடீரிகள் ஏன் என்றல் உதய் விழும்.

CJ said...

தன்னை சொல்லிக்கொண்டார்! நடராஜரை அல்ல. இதிலிருந்து மிக சுலபமாக தெரிகிறது நீங்கள் அனைவரும் இறை யையும் புரிந்துகொள்ள வில்லை, மறை யையும் புரிந்துகொள்ள வில்லை, நீங்கள் கையில் எடுதுகொண்டிருக்கும் ஆயுதத்தையும் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் சொல்லியது "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று கடவுள் அடி எடுத்துக் கொடுத்தாராம். தில்லையாகிய சிதம்பரத்தில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்க்கும் அடிமையாம் நடராஜக் கடவுள் - பார்ப்பனர்களை கடவுளுக்குமேல் தூக்கி வைக்கப்படுவது கவனிக்கத்தக்கதாகும்."


weather counter Site Meter