கேரள மாநிலம் ஆலப்புழை அருகே சேத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜோன் என்பவர். இவர் ஓட்டல் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுமா. இவர் வயது 38. இவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவலக எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்குமுன்பு வேலையில் இருந்து இவர் விலகிவிட்டாராம்!
ஜோன் தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 3 ஆவது குழந்தை சஜின். பிறந்து 8 மாதங்களே ஆகிறது. இந்தக் குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருப்பானாம்!
இது இந்தத் தாய்க்கு (சுமாவுக்கு) எரிச்சலை ஏற்படுத்தியதாம்! தினமும் குழந்தை அழுவதும், சத்தம் போடுவதும் இந்தத் தாயை ஆத்திரமடையச் செய்ததாம்!
சம்பவ நாள் அன்று மற்ற 2 குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டன! கணவர் ஜோன் பணிக்குப் போய்விட்டார். வீட்டில் இந்தப் பெண்மணி மட்டும் தனியே இருந்தார்; அப்போது குழந்தை சஜின் அழத் தொடங்கியது. இதனால் கோபமடைந்த சுமா, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். என்றாலும், அதன் அழுகை நின்ற பாடில்லை. இதனால் சுமா கோபத்தில் வெறி பிடித்தவராக மாறினார்!
பெற்ற குழந்தை - பிஞ்சு குழந்தை என்றுகூட பாராமல், வீட்டிலிருந்த வாஷிங்மெஷினில் சஜினைப் போட்டு அமுக்கினார். இதனால் குழந்தை மேலும் கதறியது. ஆனால், நெஞ்சை கல்லாக்கிக் கொண்ட சுமா, துடிக்கத் துடிக்க தனது குழந்தையை வாஷிங்மெஷினில் மூழ்கடித்தாராம்! இதில் சிறிது நேரத்திலேயே குழந்தையின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
குழந்தையைக் கொலை செய்த பின்பு வீட்டை விட்டு வெளியே வந்த சுமா ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு சேத்தலை காவல் நிலையம் சென்று சரணடைந்தாராம்!
போலீசாரின் விசாரணையில் கடந்த 4 மாதங்களுக்குமுன்பு (இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால்) தனது கை நரம்பை தானே அறுத்துத் தற்கொலைக்கு முயன்றவராம்!
இச்செய்தியைப் படிக்கும் மனிதாபிமானம் உள்ள எவருக்கும் கண்களில் நீர் வடியத்தான் செய்யும்!
நோய்நாடி நோய் முதல் நாடவேண்டும் என்ற அறிவுரைப்படி, இதற்கு மூலகாரணம் கோபமா? ஆத்திரமா? பாதிக்கப்பட்ட மனநிலையா? என்று எளிதில் முடிவுக்கு வர இயலாது! மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாய்க்கு அவர்களை சரிவர பராமரிக்க முடியாத அளவுக்கு - இவ்வளவுக்கும் வசதி வாய்ப்புள்ள உயர் நடுத்தர குடும்பம் அது! இல்லாவிட்டால் வாஷிங் மெஷின் அவ்வீட்டில் இருக்குமா?
வாஷிங் மெஷின் இதற்காகவா பயன்படுவது? எவ்வளவு கொடூரமான தாயும்கூட இப்படி ஒரு கொடுஞ்செயலை மனதறியச் செய்ய முன்வரமாட்டார்! பாதிக்கப்பட்ட மனநிலையா? எல்லையற்ற கோபமா? எரிச்சலா? எளிதில் விடை காண இயலாது.
அற்பத்தனமான காரணங்களுக்காக முன்கோபத்தால் இப்படிப்பட்ட கொலைகள் திடீர் என்று க்ஷண நேரத்தில் நடந்துவிடுவதுண்டு!
1976 ஆம் ஆண்டு மிசாவில் நாங்கள் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களிடம் சுமுகமாக பழகிய ஆயுள் தண்டனைக் கைதி ஒருவர், மிக நன்றாக திருக்குறள்பற்றி என்னிடம் விளக்கம் கேட்டு மிக நீண்ட நேரம் உரையாடுவார். சுமார் 55 வயதுள்ளவர். பண்புடன் நடந்துகொள்வார்.
எனக்கு மிகவும் ஆச்சரியம்! இவர் எப்படி ஆயுள் தண்டனை கைதி ஆனார் என்று அறிய விருப்பம்; ஒரு நாள் அவரிடமே கேட்டேன். நீங்கள் குறளில் இவ்வளவு ஈடுபாடு காட்டுகிறீர்களே, பின் எப்படி குற்றம் புரிந்தீர்கள்? எப்படி ஆயுள் தண்டனை கைதியானீர்கள்? என்று.
அவர் சொன்னார், எல்லாம் க்ஷண நேர அதிதீவிர ஆத்திரம் பீறிட்ட கோபத்தினால் ஏற்பட்ட கொடுமை. மனைவிபற்றி தாறுமாறாகப் பேசியவன்மீது ஓங்கிப் பாய்ந்து அடித்தேன்; அவன் இறந்து போனான். அது கொலையாயிற்று - திட்டமிட்டு நடந்திராத குற்றம் அது! அதன் பிறகு சிறையில் வந்த பிறகுதான் திருக்குறள் - பொறையுடைமை எல்லாம் படித்தேன்! இப்போது ஞானம் பெற்றுள்ளேன். என்ன செய்வது அய்யா? காலங்கடந்த ஞானோதயம். கணமேனும் காத்தல் அரிதான சினத்தின் சீற்றம் என்றார்!
மேற்காட்டிய தாய்க்கு கோபமா? மனநிலை கெட்டுப் போனதாலா? பொறுமையற்ற நிலையா? மூன்று பிள்ளைகளைப் பெற்றதாலா? இப்படிப்பட்ட மன நோயாளிக்கு அவரது துணைவர் சரியான சிகிச்சை அளிக்கப் போதுமான முயற்சிகளை எடுக்காததாலா இந்தத் துன்பஇயல் கொடுமை நிகழ்வு?
எளிதில் விடை காண முடியாது!
பெற்றால் மட்டும் போதாது; பேணி வளர்க்கவும், வாய்ப்பும் உருவாகவேண்டும். பல தாய்கள் வறுமையால் நல்ல தங்காள் ஆகிறார்கள் - ஆனால், இங்கே வறுமையில் வளமை இருந்தது என்றாலும், வளமையின் வாழ்வைப் புலப்படுத்தும் கருவியே கொலைக் கருவியாகி விடுவதா?
என்னே மானிட சமூகத்தின் பாழ்பட்ட பகுத்தறிவு! இக் கொடுமைக்குத் தீர்வுதான் என்ன?
No comments:
Post a Comment