அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக்கப்பட்டது. அவளை மணந்த வருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால் சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூர்த்தத்தை.
ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.இதைக் கண்டீர்கள் கண்ணால்? எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்று கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்த... கண்ணால் கண்டு பேசுகிறீர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!
அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர் களா? இல்லையே! வழியிலே குடியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக் கூறினாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!
- அண்ணா
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)
(திராவிட நாடு இதழ் - 10.1.1943)
No comments:
Post a Comment