தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற (29.9.2010) திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல், கலந்துகொண்ட இளைஞரணியினருக்கு மட்டு மல்ல, கழகத் தலைவர் உள்பட அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், நன்னம்பிக்கையினையும் ஏற்படுத்திவிட்டது.
ஓர் இயக்கத்தின் - ஓர் அமைப்பின் எதிர்காலம் என்பது அந்த இயக்கத்தின், அந்த அமைப்பின் இளைஞர்கள் தம் பலத்தைப் பொறுத்ததே!
அதுவும் சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம்பற்றிச் சொல்லவே தேவையில்லை. நான் இளைஞர்களை நேசிக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியது இந்த அர்த்தத்தில்தான்.
இன்றைய சமூக அமைப்பில் அரசியல் என்பது பளபளப்பானது - கலைத்துறை - சினிமாத் துறை என்பது கவர்ச்சிக்குரியது. இந்த இரண்டையும் தாண்டி கொள்கை, கோட்பாடு, இலட்சியம் கண் ணோட்டத்தோடு திராவிடர் கழகத்தை நோக்கி இளைஞர்கள் படையெடுக்கிறார்கள் என்றால், அது ஒன்றும் சாதாரணமானதல்ல.
இம்மாதம் சீர்காழியில் நடந்த மண்டல மாநாட்டில்கூட பொறுக்குமணி போன்ற இளைஞர் கள் கழகத்திற்கு வந்து சேர்ந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மற்றும் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் கிடைத்துள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துகிறது.
இளைஞர்களின் தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல் என்று தமிழர் தலைவர் கூட்டத்தில் தெரி வித்தது - கவனிக்கத்தக்கது - கருத்தூன்றிச் சிந்திக்கத் தகுந்ததாகும்.
மதப் போர்வையில் நாட்டில் நடக்கும் சண்டை, சச்சரவுகள், கலவரங்கள் (உலகம் எங்கும் கூட) ஜாதிப் பிரச்சினைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஊடகங்களின் போக்குகள், கலைத் துறைகளின் காமக் களியாட்டங்கள், சமூகநீதிக் களத்தில் மத்திய தேர்வாணைக் குழுவின் தில்லுமுல்லுகள், இது தொடர்பாக நீதிமன்றத்தின் போக்குகள், மதவெறியைக் கிளப்பிவிட விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் நடத்தும் விஷம வேலைகள் - இவற்றை எல்லாம் எதார்த்தமாகக் காணும் இளை ஞர்கள் மத்தியில் புதிய சிந்தனை மின்னல் சிறகடிக் கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட தன்மையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், சமூகநீதித் தத்துவங்களும், கலாச்சாரக் கண் ணோட்டமும், மனிதநேயக் கண்ணோட்டமும், ஜாதி ஒழிப்புப் பார்வையும்தான் - இன்றைய சிக்கல் களுக்குச் சரியான தீர்வுகளாக இருக்க முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கை இளைஞர்களை இயக்கத்தின் பக்கம் இழுத்து வருகிறது என்றே கருதவேண்டும்.
மற்ற மற்ற மாநிலங்களில் மதவாத சக்திகள், குறிப்பாக இந்துத்துவா சக்திகள் நாளும் நடத்தி வரும் வன்முறைகள், அமைதியைக் குலைக்கும் முயற்சிகளைத் தெரிந்துகொண்டுள்ள இளைஞர் கள், தமிழ்நாடு இந்தத் தன்மையிலிருந்து விலகி அமைதிப் பூங்காவாக மணம் வீசிக் கொண்டிருப்ப தற்குக் காரணம் - தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், சிந்தனைகள் இங்குப் பலமாக வேர்ப் பிடித்திருப்பதுதான் என்ற முடிவுக்கு வந் துள்ளனர். மக்கள் மத்தியில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் பூக்கப் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டு இருப்பது திராவிடர் கழகமே என்று தெரிந்துகொண்ட நிலையில், இந்த இயக்கம்தான் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் என்பதை உள்வாங் கிக் கொண்டு, கழகத்தை நோக்கி வருகிறார்கள்.
குறிப்பாக, கல்லூரி விடுதிகளில் உள்ள மாணவர்களை நாம் இலக்காகக் கொண்டு உரிய பிரச்சார யுக்திகளை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.
மாணவர் கழகத் தோழர்களே, இளைஞரணி வீரர்களே! உங்கள் கவனம் தமிழின இளைஞர் களின் மூளையின்மீதே இருக்கட்டும்! அதன்மீது பூட்டப்பட்ட மூட விலங்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதில் சதாகவனம் செலுத்துங்கள்.
ஏடுகளைக் கொண்டுபோய் போடுங்கள்; நூல்களைக் கொடுத்து உதவுங்கள்; கொள்கைப் பிரச்சார இடத்திற்கு அழைத்து வாருங்கள்; இவற்றை முறையாகச் செய்துவிட்டால், அந்த மாணவர்கள், இளைஞர்கள் பெரியார் திடலின் முகவரி தேடிப் பறந்து வருவார்கள் - இதில் அய்யத்திற்கே இடமில்லை.
சிங்க இளைஞனே சிலிர்த்தெழு! தன்மானச் சிங்கமாம் நம் தலைவர் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை என்ற ஆயுதத்தைக் கையில் எடுங்கள்! செயல்படுங்கள்!! வெற்றி நமதே!!!
http://www.viduthalai.periyar.org.in/20100930/news04.html
No comments:
Post a Comment