Pages

Search This Blog

Tuesday, September 21, 2010

மதம் யானைகளுக்குப் பிடிக்கலாம்; ஆனால், மனிதனுக்குப் பிடிக்கலாமா?

செப்டம்பர் 24
வரும் 24 ஆம் தேதி அன்று - அயோத்தி தொடர் பான - நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. பிரச்சினை செய்யப்பட்ட - அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதற்கான தீர்ப்பு இது.
தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும், கலவரம் வெடிக்கும் என்ற அச்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக விரிவாகச் செய்யப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏதோ அயோத்தியில் மட்டுமல்ல; இந்தியா முழுமையுமே அதன் பிரதிபலிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் துணை இராணுவப் படை உள்பட களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். பல இடங்களிலும் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
தீர்ப்பு பாதகமாக இருந்தால் உச்சநீதிமன்றத் திற்குச் செல்லுவோம் என்று இப்பொழுதே லால்கிஷண் அத்வானி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
நீதிமன்றம் கூறும் ஒரு தீர்ப்பு நாட்டில் கலவரங்களை உண்டாக்கும் என்ற ஒரு நிலை - நாடு நாகரிகத் துடன்தான் இருக்கிறது என்பதற்கு அடையாளமா?
மதம் என்றால் ஒழுக்கத்தை வளர்க்கக் கூடியது என்று சொல்லுவதெல்லாம் எவ்வளவு பெரிய மோசடி என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
மதம் யானைகளுக்குப் பிடிக்கலாம்; ஆனால், மனிதனுக்குப் பிடிக்கலாமா? மதம் யாருக்குப் பிடித் தாலும் அது ஆபத்துதான் என்பது யதார்த்தமானது.
மத சம்பந்தமான இதுபோன்ற பிரச்சினையில் - ஏற்கெனவே ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்திருந்தது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் எந்த நிலைப்பாடோ அது தொடரும் என்று ஒரு முடிவு எடுக் கப்பட்டு இருந்தது. அயோத்தி பிரச்சினையில் அது ஏன் கடைப்பிடிக்கப்படவில்லை என்பது புதிராக உள்ளது.
இந்த ஒரு பிரச்சினையோடு இது முடிந்துவிடக் கூடியதுதானா? வேறு சில இடங்களில் உள்ள வழி பாட்டு நிலையங்கள்பற்றியும் பிரச்சினை எழுப்பப்பட் டால், அதன் விளைவு என்ன என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
இன்றைக்கு இருக்கிற பெரும்பான்மைக் கோயில் கள் ஒரு காலகட்டத்தில் புத்த விகார்களாக இருந் திருக்கின்றன என்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் உண்டே!
திருப்பதி வெங்கடாசலபதி கோயிலே புத்த விகாராக இருந்ததுதான் என்று ஆய்வுகள் கூறு கின்றன. காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி கோயில் தாராதேவி ஆலயம் என்பதற்கும், ஏகாம்பரநாதர் கோயில் புத்தர் கோயில் என்பதற்குமான ஆதாரங் களை மயிலை சீனி. வெங்கடசாமி பவுத்தமும் - தமிழும் என்ற நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
பல இந்துக் கோயில்களின் இடிபாடுகளில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் பிரச்சினை எழுப்பும் இந்துத்துவாவாதிகள், இந்தப் பிரச்சினைகளையும் திறந்த மனத்தோடு எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் - ராமன் பிறந்த இடம்தான். இதனை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது - இது எங்கள் நம்பிக்கைப் பிரச்சினை என்று இந்துத்துவாவாதிகள் தொடக்க முதலே கூறிக் கொண்டுதான் வந்திருக்கின்றனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இஸ்லாமியர் களுக்குத்தான் சொந்தம் என்று நீதிமன்றம் கூறினால், அதனை இந்துத்துவாவாதிகள் காவிக் கூட்டம் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதற்கான முன்னோட்டமாகத்தான் தொடர்ந்து அவர்கள் கூறிக்கொண்டு வந்ததாகும்.
நீதிபதி லிபரான் ஆணையம் வெளியிட்ட தகவல் களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே! பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயியையும் சம்பந்தப்படுத்தி அந்த ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், பூமிக்கும், ஆகாயத்துக்குமாகத் தாவிக் குதிக்கவில்லையா? நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்க வில்லையா?
மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் நீதிமன்ற கருத்துகளை எடுத்துக்கூறி வக்காலத்து வாங்கிப் பேசும் சோ ராமசாமி போன்றவர்கள், லிபரான் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல்தானே எழுதுகோலைப் பிடித்தனர்.
இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்று கூக்குரல் போடுபவர்கள், இசு ரேலுடன் சேர்ந்து இந்து ராஜ்ஜியத்தை வெளியில் இருந்து அறிவிக்கத் திட்டம் போட்டவர்கள், நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
தீர்ப்பு அவர்களுக்குப் பாதகமாக இருந்து சங் பரிவார்க் கும்பல் கலவரங்களில் ஈடுபட்டால், அதோடு அந்த அமைப்புகளுக்கு முடிவுரை எழுதுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்பதே நாட்டின் நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாகும். நடுவண் அரசு இதில் தெளிவாக இருந்தாகவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

No comments:


weather counter Site Meter